அல்சரைத் தடுக்க உதவும் எளிய இயற்கை உணவு முறைகள்...! - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, April 9, 2025

அல்சரைத் தடுக்க உதவும் எளிய இயற்கை உணவு முறைகள்...!

 அல்சரைத் தடுக்க உதவும் எளிய இயற்கை உணவு முறைகள்...!


சில நோய்கள் வெளியே இருந்து நம் உடலுக்குள்ளே வருகின்றன. ஆனால், பல நோய்களை நம்முடைய தவறான பழக்க வழக்கத்தால் நாமே உருவாக்கிக் கொள்கிறோம். அப்படி நாம் உருவாக்கிக் கொள்ளும் நோய்களில் முக்கியமானது அல்சர். சித்த மருத்துவத்தில் இதை குன்ம நோய் என்கின்றனர். உடலையும் மனதையும் குன்றச் செய்யும் தன்மை கொண்டதால் இதற்கு குன்ம நோய் என்று பெயரிட்டனர்.


தவறான உணவுப் பழக்கம் மற்றும் வலிக்காக நாம் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் இவைகளால்தான் அல்சர் பெரும்பாலும் உருவாகிறது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் மக்கள் அல்சர் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். அல்சருக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் எளிதாக குணப்படுத்திவிட முடியும். உணவை சரியான நேரத்தில் உட்கொள்ளாமல், ஏதேனும் காரணத்தால் தள்ளிப்போடும்போது, மந்தம் ஏற்பட்டு மந்தவாயு அதிகரித்து அல்சர் வருகிறது. மன அழுத்தம், கோபம், டென்ஷன், பசிக்கும்போது சாப்பிடாமல் இருப்பது இவைகள் எல்லாம் அல்சர் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக

இருக்கின்றன.


செரிமானமின்மை, வயிற்று எரிச்சல், வாந்தி, உண்பதற்கு ஏற்படும் வெறுப்பு, உடம்பு மெலிந்து போதல், வயிறு உப்பலாக தோன்றுதல், புளித்த ஏப்பம் வருதல் இவையெல்லாம் அல்சருக்கான அறிகுறிகளாகும். அல்சரை தவிர்க்க வேண்டுமானால், பசி நேரத்துக்கு என்ன காரணத்தினாலும் சாப்பிடுவதை தவிர்க்கக் கூடாது. அதுபோன்று, இரவு நேரத்தில் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.காலையில் வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், காலையில் எழுந்ததும் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு பெப்டிக் அல்சர் ஏற்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.


அல்சரை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தி விட முடியும். அப்படியே விட்டுவிட்டால் அது ஆபத்தான புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே முடிந்தவரை சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு வயிற்றில் புண்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியமாகும். அதிக மசாலா சேர்க்கப்பட்ட உணவு கள், குளிர்பானங்கள், நொறுக்குத்தீனிகள், ஃபாஸ்ட்ஃபுட் வகைகளை அடிக்கடி உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. அல்சருக்கு காரம் ஆகாது. எனவே காரம் அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது அல்சர் வராமல் தடுக்க உதவும். மதுப்பழக்கம் அல்சரை ஆபத்தான நிலைக்கு கொண்டு போய்விடும். எனவே மது, புகை பழக்கத்தை கை விட்டுவிட வேண்டும்.


மாமிச உணவுகளும் அல்சருக்கு ஏற்றதல்ல. அதிலும் சிவப்பு நிற இறைச்சி வகைகள் தவிர்ப்பது நல்லது. மீன், முட்டை சாப்பிடலாம்.பொதுவாக பால் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு. ஆனால் அல்சர் உள்ளவர்களுக்கு பால் ஏற்றதல்ல. அது ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, அல்சர் பிரச்னை இருப்பவர்கள் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது.மணத்தக்காளி கீரை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது அல்சர் வராமல் தடுப்பதற்கு உதவியாக இருக்கும். அந்தவகையில், வாரத்திற்கு இரண்டு முறை மணத்தக்காளி கீரையை சேர்த்தாலே பெரும்பாலும் குடல்புண் ஏற்படாமல் தவிர்க்கலாம். அதேசமயத்தில் கீரையை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


காலையில் எழுந்ததும் தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வருவது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அத்திக்காய்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் வயிற்றுப் புண் ஆறும். ஒரு கைப்பிடி அத்தி இலை, ஒரு கைப்பிடி வேப்பிலை இரண்டையும் சேர்த்து தண்ணீர்விட்டு கஷாயமாக்கி வடிகட்டி காலையில் குடித்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். துளசி இலைச் சாறில் மாசிக்காயை உரைத்து குடித்து வந்தாலும் குணம் கிடைக்கும். முட்டைக்கோஸ், சின்ன வெங்காயம், சீரகம் மூன்றையும் சேர்த்து சூப்பாக செய்து குடித்து வந்தால் அல்சர் விரைவில் ஆறும். அல்சரால் ஏற்படும் எரிச்சலும் தணியும்.


தினமும் அத்தி மரப்பட்டை சாறுடன் சம அளவு பசும்பால் சேர்த்து பனங்கற்கண்டுடன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.வாழைப்பழம் சாப்பிடுவது குடல் புண்களை ஆற்றும். ஆப்பிள் பழத்திற்கும் அல்சர் புண்களை ஆற்றும் தன்மை உண்டு.தண்டுக்கீரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதும் நலம் தரும்.

No comments:

Post a Comment