பங்குனி உத்திரம் 2025: முருகப் பெருமானை வழிபடும் முறை, கிடைக்கும் பலன்கள் மற்றும் புராண வரலாறு - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, April 10, 2025

பங்குனி உத்திரம் 2025: முருகப் பெருமானை வழிபடும் முறை, கிடைக்கும் பலன்கள் மற்றும் புராண வரலாறு

 பங்குனி உத்திரம் 2025: முருகப் பெருமானை வழிபடும் முறை, கிடைக்கும் பலன்கள் மற்றும் புராண வரலாறு


முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்றாக கருதப்படுவது பங்குனி உத்திரமாகும். இந்த நாளில் ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து வந்தும், பால்குடம் ஏந்தி வந்தும் முருகப் பெருமானை வழிபடுவது வழக்கம். இந்த நாளில் முருகப் பெருமானின் அருளை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


பங்குனி உத்திரம் :


பங்குனி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரத நாள் பங்குனி உத்திரம் ஆகும். அதாவது பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். பல தெய்வீக திருமணங்கள் நடைபெற்ற நாளாக பங்குனி உத்திரம் கருதப்பட்டாலும், இது தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்குரிய நாளாக முக்கிய விரத நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதால் திருமணம் உள்ளிட்ட மங்கள நிகழ்வுகள் நடைபெறுவதில் இருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.


பங்குனி உத்திரம் சிறப்புகள் :


சிவன்-பார்வதி, மீனாட்சி-சுந்தரேஸ்வரர், ஸ்ரீராமர் -சீதா, முருகன் - தெய்வானை ஆகியோரின் திருமணங்கள் நடைபெற்றது பங்குனி உத்திர நாளில் தான் நடைபெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. அதே போல் ஆண்டாள், ரங்கநாதருடன் ஐக்கியமான தினமும் பங்குனி உத்திர திருநாளில் தான் என சொல்லப்படுகிறது. அதனால் இந்த நாளில் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் அவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். திருமணம் ஆனவர்களும் இந்த நாளில் விரதம் இருந்து வழிபடலாம்.


பங்குனி உத்திரம் 2025 :


2025ம் ஆண்டில் பங்குனி உத்திர திருநாள் ஏப்ரல் 11ம் தேதி வெள்ளிக்கிழமை அமைகிறது. ஏப்ரல் 10ம் தேதி பகல் 02.07 மணி துவங்கி, ஏப்ரல் 11ம் தேதி மாலை 04.11 மணி வரை மட்டுமே உத்திரம் நட்சத்திரம் உள்ளது.ஆனால் ஏப்ரல் 12ம் தேதி காலை 04.13 மணி துவங்கி, ஏப்ரல் 13ம் தேதி காலை 06.03 மணி வரை மட்டுமே பெளர்ணமி திதி உள்ளது. இருந்தாலும் பங்குனி உத்திரம் என்பது நட்சத்திர அடிப்படையில் கொண்டாடப்படும் விரத நாள் என்பதால் உத்திரம் நட்சத்திரம் வரும் ஏப்ரல் 11ம் தேதியை பங்குனி உத்திர நாளாக கணக்கில் எடுத்துக் கொண்டு விரதம் இருக்க வேண்டும். பங்குனி உத்திர நாளில் முக்கியமான 6 விஷயங்களை செய்வதால் முருகப் பெருமானின் அருள் நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


பங்குனி உத்திரத்தன்று செய்ய வேண்டியவை :


1. ஆலய தரிசனம் :


பங்குனி உத்திரம் அன்று கோவிலுக்கு சென்று சிவன்-பார்வதி அல்லது முருகன்-தெய்வாணையை வழிபட வேண்டும். அங்கு நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்வதால் செல்வ வளம், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை, தெய்வீக அருள் ஆகியவை கிடைக்கும். கோவிலில் சென்று இறை நாமங்களை ஜபிப்பது மிகவும் சிறப்பானதாகும்.


2. அபிஷேகம் :


பங்குனி உத்திரம் அன்று கோவில்களில் நடக்கும் அபிஷேகத்திற்கு வேண்டிய பால், தேன், தயிர் போன்ற பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். இதனால் தெய்வங்களின் மனம் குளிர்ந்து நாம் வேண்டும் வரங்களையும் அளிப்பார்கள் என்பது நம்பிக்கை. தெய்வ அபிஷேகங்கள் செய்வதால் கர்மாக்கள், பாவங்களில் இருந்து விடுபட்டு, மறுபிறவி இல்லாத நிலை ஏற்படும்.


3. காவடி சுமத்தல் :


பங்குனி உத்திரம் அன்று காவடி எடுப்பது மிகவும் விசேஷமானதாகும். முருகனுக்கு காவடி எடுப்பதால் முருகப் பெருமானின் பரிபூரண அருளை பெற முடியும். தெய்வ சிந்தனையுடன், பக்தி பாடல்களை பாடிக் கொண்டு, தோளில் காவடி எடுத்து வருவதால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் மன சுமைகள் அனைத்தையும் முருகப் பெருமான் போக்கிடுவார் என்பது நம்பிக்கை.


4. விரதம் கடைபிடித்தல் :


பங்குனி உத்திரம் அன்று உணவை தவிர்த்து விரதம் இருந்து, முருகனை நோக்கி மந்திர ஜபம் செய்வது, தியானம் செய்வது ஆகியவற்றை செய்வது சிறப்பு. இதனால் உடலும் மனமும் தூய்மையாகி, நம்மால் தெய்வத்துடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். தெய்வீக அருளால் கடந்த காலங்களில் செய்த தவறுகள் மன்னிக்கப்படும்.


5. தானம் செய்தல் :


பங்குனி உத்திரம் அன்று கோவில்களில் நடக்கும் பூஜைகளுக்கு பூ, பழங்கள், தேங்காய், விளக்கு ஆகியவற்றை வாங்கி கொடுக்கலாம். இது இறைவனை சரணடைவதை குறிப்பதாகும். அதே போல் ஏழைகளுக்கு உணவு, உடை, தேவையான பண உதவி ஆகியவற்றை செய்யலாம். இதனால் நம்முடைய கெட்ட கர்மாக்கள் குறையும்.


6. மந்திர ஜபம் :


இந்த நாளில் மந்திர ஜபங்கள் செய்வது, புனித நூல்களை வாசிப்பது, தெய்வீக கதைகளை கேட்பதும் புண்ணியமான பலன்களை தரும். குறிப்பாக திருப்பாவை, திருவெம்பாவை, கந்த புராணம் உள்ளிட்ட தெய்வீக நூல்களை படிக்கலாம். குறிப்பிட்ட எண்ணிக்கையில், குறிப்பிட்ட தெய்வத்திற்குரிய மந்திரங்களை ஜபிக்கலாம்.


பங்குனி உத்திரம் கொண்டாட காரணம் :


பங்குனி உத்திரம் பல தெய்வங்களுடன் தொடர்புடையது என்றாலும், இது முருகனுக்குரிய விரத நாளாக குறிப்பிடப்படுவதற்கு மிக முக்கியமான காரணம் உள்ளது. பங்குனி மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். குதிரைகள் பூட்டிய தேரில் முருகப்பெருமானுக்கு வாயு பகவான் சாரதியாக இருக்க, முருகனின் படைகள் அணிவகுத்து சென்றன. அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. அதைப் பார்த்ததும் காரணம் அறியாது அனைவரும் திகைத்து நின்றனர். அப்போது அங்கிருந்த நாரதர் அம்மலையை பற்றி முருகனிடம் கூறினார்.


அசுரர்களுடன் போர் :


இந்த மலை கிரவுஞ்சன் என்னும் அசுரனாக இருந்து, எல்லோருக்கும் தீமைகளை புரிந்த தீய சக்தி ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்று கூறினார். மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் சொன்னார். அதை கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்துக் கொண்டு சென்று, தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட்டார். முருகனின் கட்டளைப்படி வீரபாகுவின் தலைமையில் முருகனின் படைகள் மாயாபுரிபட்டினத்திற்குள் நுழைந்தன.


கடும் போர் நடைபெறுதல் :


இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். அவர்கள் இருவருக்கும் கடும் போர் நடந்தது. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து வீழ்ந்தனர். போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன் முருகப்படையின் வீரரான, வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான். இதைக்கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மூர்ச்சையாகி விழுந்த வீரபாகுவை தாரகாசுரன் எள்ளி நகையாடினான். உடனே அங்கிருந்த முருகனின் படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின. மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண்டும் மூர்க்கத்தனமாக தாக்கினான். எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் புகுந்துக் கொண்டான். வீரபாகுவும் அவனை தொடர்ந்த மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலை தன் வேலையை காட்ட ஆரம்பித்தது. தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன.


இதை நாரதர் மூலம் அறிந்த முருகப் பெருமான், நேரடியாக போர்க்களத்திற்கு வந்தார். வந்தவரின் வலிமை அறியாத தாரகாசுரன், சிறுவன் என முருகனை கிண்டல் செய்தான். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார். தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப் பெருமான், தன் வேலாயுதத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனை கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும்.


பங்குனி உத்திர நாளில் மேற்கொள்ளும் விரதத்தை 'கல்யாண விரதம்' என்றும் அழைப்பார்கள்.


இந்த சிறப்புமிக்க நாளில் சிவபெருமானையும், அவரது மகன் என்று புராணங்கள் சொல்லும் முருகப்பெருமானையும் விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் நிற்க, சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு கன்னியில் நிற்கும் வேளையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. திருமணம் தடைப்படுபவர்கள், இந்த நன்னாளில் ஆலயங்களுக்குச் சென்று சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்.


பக்தர்கள் வேண்டும் வரங்களைத் தந்தருளும் தெய்வங்களை, தேவர்கள் பலரும் இந்த பங்குனி உத்திர நாளில் வழிபட்டு வரம் பெற்றுள்ளனர். விஷ்ணுவின் திருமார்பில் திருமகள் இடம் பிடித்தது, இந்த விரதத்தை கடைப்பிடித்துதான்.


தேவர்களின் தலைவனான இந்திரனும் இந்த விரதத்தை மேற்கொண்டு, இந்திராணியை கரம் பிடித்திருக்கிறான். பிரம்மன் சரஸ்வதியை தன் நாவில் குடிகொள்ளச் செய்ததும், சந்திரன் இருபத்து ஏழு அழகு வாய்ந்த நட்சத்திரப் பெண்களை மணம் முடித்ததும் கூட இந்த விரதத்தை மேற்கொண்டுதான்.


இந்த விரதத்தை கடைப்பிடித்தவர்களும், அதனால் பலன் அடைந்தவர்களும் எண்ணிலடங்காதவர்கள். திருமணமாகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் இன்பம் தரும் இனிய விரதம் இது.


பங்குனி உத்திர விரதத்துக்கு பல கதைகள் உண்டு. அவற்றில் பார்வதி விரதம் இருந்து சிவபெருமானை மணாளனாக அடைந்தது முக்கியத்துவம் வாய்ந்தது.


ஒருமுறை சாபம் காரணமாக, தக்கன் என்பவனுக்கு மகளாகப் பிறந்தாள், உமாதேவி. தாட்சாயணி என்ற பெயருடன் சிறுவயது முதலே சிவனின் மீது விருப்பம் கொண்ட அன்னை, தவம் இருந்து சிவனை மணம் செய்து கொண்டாள்.


ஆனால் தக்கன், சிவபெருமானுக்குரிய மரியாதையை வழங்கவில்லை. அவருக்கு சேரவேண்டிய அவிர்பாகத்தைக் கூட கொடுக்காமல், மற்ற தேவர்கள், முனிவர்களை அழைத்து யாகம் செய்தான். இதனால் வெகுண்டெழுந்த தாட்சாயிணி யாக குண்டத்தில் விழுந்து, அந்த யாகத்தை பலனற்றதாக மாற்றினாள்.


தக்கனுக்கு மகளாக பிறந்த காரணத்தினால் ஏற்பட்ட களங்கத்தை போக்கி கொள்வதற்காக, பார்வதி என்ற பெயருடன் மலையரசன் இமவான் மகளாக தோன்றினாள். காஞ்சிபுரத்தில் கம்பை ஆற்றில் மணலால் சிவலிங்கம் பிடித்து வைத்து வழிபட்டார்.


திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. ஆற்று நீரில் மணல் லிங்கம் சிதைந்து விடுமே என்று, அந்த லிங்கத்தை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். பார்வதியின் அன்பை பார்த்து வியந்த பரமேஸ்வரன், சிவலிங்கத்தில் வெளிப்பட்டு அவளை திருமணம் செய்து கொண்டார். அந்நாளே பங்குனி உத்திர திருநாள் ஆகும். பங்குனி உத்திரத்தன்று சிவாலயங்களில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.


விரதம் இருக்கும் முறை


பங்குனி உத்திர விரதத்தை 8 வயதில் இருந்து 80 வயது உள்ளவர்கள் வரை அனுஷ்டிக்கலாம். பங்குனி உத்திரம் அன்று விரதம் இருப்பவர்கள் காலை எழுந்து நீராடி விட்டு, சிவபெருமானுக்கும் உமையன்னைக்கும் அபிஷேக, ஆராதனை செய்து தூப - தீபம் காட்டி, நைவேத்தியங்களை படைத்து வழிபட வேண்டும்.


அந்த பூஜை நேரத்தில் ஒரு தம்பதியினரை அழைத்து வந்து, அவர்களை வணங்கி தாம்பூலத்தில் புடவை, வேட்டி வைத்து கொடுக்க வேண்டும். வயிறு நிரம்ப அன்னம் படைக்க வேண்டும்.


பின்னர் சிவ பெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக்கோலத்தில் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும். விரதத்தின் போது மவுனமாக இருப்பது சிறப்பு.


அன்று முழுவதும் இறைவனைப்பற்றிய சிந்தனையில் மூழ்கி சிவபுராணம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றைப் படிக்கலாம். இறைவனின் நாமாவளிகளைக் கூறலாம். பட்டினி கிடந்து பசித்திருக்க வேண்டும்.


துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம். கோவிலுக்கு சென்று வணங்கி இரவில் பால், பழம் உண்டு படுக்கையில் படுக்காமல் தரையில் துணி விரித்துப்படுக்கவேண்டும்.


தொடர்ச்சியாக 48 ஆண்டுகள் இந்த விரதத்தை அனுஷ்டித்து வந்தால் அடுத்த ஜென்மத்தில் தெய்வீகப் பிறவியை பெறுவார்கள் என்கின்றன புராணங்கள்.

No comments:

Post a Comment