தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும்? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு, இப்போது தேர்தல் நடத்தப்படாது; வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பின்னரே நடத்தப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், விஸ்வந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த முனியன் என்பவர் தாக்கல் செய்த மனு:
விஸ்வந்தாங்கல் கிராம பஞ்சாயத்து தேர்தல், 2019 டிசம்பரில் நடந்தது. தேர்வான நிர்வாகிகள், 2020 ஜனவரியில் பொறுப்பேற்றனர். அவர்களின் பதவிக்காலம், 2025 ஜன., 5ல் முடிகிறது.
இட ஒதுக்கீடு பறிப்பு
கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி, ஆதிதிராவிட மகளிருக்கு ஒதுக்கப்பட்டது. பஞ்சாயத்து ஒன்றிய வார்டு மற்றும் மாவட்ட பஞ்சாயத்து வார்டு, மகளிர் மற்றும் பொது என்ற முறையில் ஒதுக்கப்பட்டது.
அரசு கெஜட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிவிப்பின்படி, திருவண்ணாமலை மாநகராட்சியின் கீழ், திருவண்ணாமலை நகராட்சியும், 18 கிராம பஞ்சாயத்துகளும் வருகின்றன.
இவை, மாநகராட்சியின் கீழ் சேர்க்கப்பட்ட பின், பதவிகள் மற்றும் இடங்களுக்கான இடஒதுக்கீடு பறிக்கப்பட்டு விட்டது; இடங்கள் ஒதுக்கீடு, வார்டுகள் மறுவரையறை பணிகளை மேற்கொள்ளவில்லை.
மறுவரையறை மற்றும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், விஸ்வந்தாங்கல் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி மற்றும் பஞ்சாயத்து ஒன்றிய வார்டு, மாவட்ட பஞ்சாயத்து வார்டு, ஆதிதிராவிடருக்காக வகைப்படுத்தப்பட்டிருக்கும்.
அதனால், மறுவரையறை மற்றும் இடங்கள் ஒதுக்கீட்டு பணிகளை முடிக்கும்படி, அரசுக்கும், பஞ்சாயத்து ராஜ் இயக்குனருக்கும் கடந்த செப்டம்பரில் மனு அளித்தேன்; எந்த நடவடிக்கையும் இல்லை.
எண்ணிக்கை குறையும்
பஞ்சாயத்துகளில், மக்கள் தொகைக்கு ஏற்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இடங்கள் ஒதுக்காமல், ஜனவரி முதல் வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அரசு முயற்சிக்கிறது.
திருவண்ணாமலை மாநகராட்சி உடன், பல கிராம பஞ்சாயத்துகளை இணைத்ததால், வார்டுகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறையும்.
எனவே, வார்டுகள் மறுவரையறை பணிகளையும், இடஒதுக்கீட்டையும் மேற்கொள்ளும் கடமை அரசுக்கு உள்ளது.வார்டுகள் மறுவரையறை பணிகளை முடிக்காமல், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட அனுமதித்தால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒதுக்கீடு உத்தரவாதம் என்பது கேலிக்கூத்தாகி விடும்.
எனவே, சட்ட நடைமுறையை பின்பற்றி, மாவட்டங்களில் வார்டுகள் மறுவரையறை பணிகளை முடிக்கவும், அதன்பின், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு இடஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட வேண்டும். அதன்பின், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
வெளியிடப்படாது
இம்மனு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.தனபால் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் மற்றும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகினர்.
'வார்டு மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீடு நடைமுறைகளை பூர்த்தி செய்தபின், உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தான், நியாயமான தேர்தலை நடத்துவதாக இருக்கும். 'எனவே அதுகுறித்து முடிவு செய்யாமல், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படாது' என, தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.
2025 இறுதியில் தேர்தல்?
அ.தி.மு.க., ஆட்சியில், புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களில் உள்ள 1.19 லட்சம் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு, 2019ல் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின், மற்ற மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு, 2021ல் தேர்தல் நடத்தப்பட்டது.இந்நிலையில், 2019ல் நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், 2025 ஜன., 5ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும், 2021ல் தேர்தல் நடத்தப்பட்ட மாவட்டங்களில், 2026 செப்., மாதம் பதவிக்காலம் முடிவடைகிறது.ஊரக உள்ளாட்சிகளுக்கு ஒருங்கிணைந்த தேர்தல் நடத்தப்படுமா அல்லது பதவிக்காலம் முடிவடைந்த 27 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில், மாநில தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்திருக்கிறது.ஊராட்சிகள், வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்ட பின், 2025 இறுதியில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment