குரூப் 2, 2ஏ தேர்வு முறையில் மாற்றம்:டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பு
குரூப் 2, 2ஏ தேர்வு, Optical Mark Recognition (OMR) முறையில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 38 இடங்களில் தேர்வு மையங்களை அமைத்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,540 குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த செப்டமர் 14ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 7,93,966 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5,83,467 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் 12ம் தேதி வெளியானது.
தொடர்ந்து, முதன்மைத் தேர்விற்கு தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்வர்கள் தேர்வு மையம் தேர்தெடுக்க மற்றும் தேர்வு கட்டணம் செலுத்த டிசம்பர் 18-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வின் முதல் தாள் தேதி மாற்றப்பட்டுள்ளது. மேலும், 2ஏ பதவிக்கான இரண்டும் தாள் தேர்வு முறையும் மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்மையில் கணினி வழியில் நடத்தப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கான தேர்வில் குளறுபடி ஏற்பட்டதால், குரூப்2ஏ தேர்வையும் பழைய முறையிலேயே, அதாவது ஓஎம்ஆர் தாள்களில் நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2, 2ஏ தேர்வு OMR ஷீட் முறையில் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
குரூப் 2 பதவிகளுக்கு முதன்மைத் தேர்வு இரண்டு தாள்கள் கொண்டு விரிவாக விடையளிக்கும் வகையில் நடைபெறும். முதல் தாள் – தமிழ் தகுதி தாள் மற்றும் இரண்டாம் தாள் – பொது தாள் ஆகும். இரண்டு தாள்களும் விரிவாக விடை அளிக்கும் வகையில் அமையும். குரூப் 2ஏ பதவிகளுக்கான முதல் தாள் – தமிழ் தகுதி தாள் மற்றும் இரண்டாம் தாள் – 3 பிரிவு கொண்ட பொது தாள் ஆகும். முதல் தாள் விரிவாக விடை அளிக்கும் வகையிலும், இரண்டாம் தாள் கொள்குறி வகையிலும் (Objective) அமையும்.
No comments:
Post a Comment