எது சரியான குளியல் முறை?குளிர் மற்றும் மழை காலங்களில் குளிர்ந்த நீரில் குளிக்கலாமா?
"வீட்டில் குளித்தாலும் சரி, நீர் நிலைகளில் குளித்தாலும் சரி, முதலில் பாதங்களில், அடுத்து முட்டிகளில், பிறகு இடுப்பில், நெஞ்சில், கடைசியாகத்தான் தலையில் தண்ணீர் பட வேண்டும்.இதுதான் சரியான குளியல் முறை.’’
பழக்கம் காரணமாக், குளிர் காலத்திலும் குளிர்ந்த நீரிலேயே குளிப்பார்கள் சிலர். அப்படி செய்யலாமா?
``மனிதர்கள் `warm-blooded animal' வகையைச் சேர்ந்தவர்கள். நம்முடைய உடலின் வெப்பநிலையை நம் தோலிலிருக்கிற ரத்த ஓட்டம்தான் சீராக வைத்திருக்க உதவுகிறது. திடீரென அதிகப்படியான குளிர்ச்சி நம்முடைய தோலைத் தாக்கும்போது ரத்தக்குழாய்கள் சுருங்க ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு லிட்டர் ரத்தம் இதயத்துக்குள் வரும். இதயம் அந்த ரத்தத்தை பம்ப் செய்து மூளைக்கு அனுப்பும். மூளைக்கு அதிகப்படியான ரத்தம் செல்லும்போது மூளைக்குள் ரத்தக்கசிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். இந்த ரத்தக்கசிவு மூளையின் உட்புறமும் ஏற்படலாம், வெளிப்புறமும் ஏற்படலாம். உள்ளுக்குள் ஏற்படும்போது பக்கவாதம் வரலாம். திடீரென மயக்கமும் ஏற்படலாம். மயக்கத்துக்கு சிகிச்சை அளித்துக் காப்பாற்றி விடலாம் என்றாலும் முப்பத்து மூன்று சதவிகிதம் உயிராபத்தும் இருக்கிறது.
இத்தனை டிகிரிக்கு மேல் ஓ.கே!
குளிர்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் மிகக் குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.
நாம் குளிக்கும் நீர் 25 டிகிரி வெப்ப நிலைக்கு மேல்தான் இருக்க வேண்டும். 25 டிகிரி வெப்பத்தை எப்படித் தெரிந்துகொள்வது?
நம் வீடுகளில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைத்துக் குடிக்கும் நீர் 30 டிகிரி வெப்பத்தில் இருக்கும். இதுவே மண்பானையில் என்றால் 27 அல்லது 28 டிகிரியில் இருக்கலாம். குளிக்கும் நீரில், நம் கையை வைத்துப் பார்த்தாலே `குடிக்கும் நீரையொத்த வெப்பம் இருக்கிறதா' என்பதை உணர முடியும்.
அதிகப்படியான குளிர்ச்சி ஆபத்தே..!
இரவு நேரங்களில் வெளிப்புற வெப்பநிலை 24 அல்லது 23 டிகிரி வரை குறையும். குளிர்காலத்தில் இது இன்னமும் குறையும். இரவிலும் குளிர்காலத்திலும் தண்ணீர் மிகவும் சில்லென்று இருக்கும். இந்த நேரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காகக்கூடக் குளிர்ந்த நீரை முதலில் தலையில் ஊற்றக் கூடாது.
குளிர் காலத்தில் ஆற்று நீரில் தலைகீழாக டைவ் அடிக்கலாமா?
குளிர் காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் ஆற்றுநீரில் தலைகீழாகக் குதிப்பது நல்லதல்ல. உடம்பின் வெப்பநிலை திடீரென குறையும்போது நான் ஏற்கெனவே சொன்னதுபோல மூளைக்கு அதிக ரத்தம் சென்று பிரச்னை வரலாம். வீட்டில் குளித்தாலும் சரி, நீர் நிலைகளில் குளித்தாலும் சரி, முதலில் பாதங்களில், அடுத்து முட்டிகளில், பிறகு இடுப்பில், நெஞ்சில், கடைசியாகத்தான் தலையில் தண்ணீர் பட வேண்டும். இதுதான் சரியான குளியல் முறை.
ஷவரில் குளிக்கும்போது இந்தப் பிரச்னை வருமா?
மூளையின் நரம்புகள் பாதிக்கப்படுகிற அளவுக்கு, ஷவரில் நீர் வேகமாக வருவதில்லை. மற்றபடி, ஷவரில் வருகிற நீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், அதைத் தவிர்ப்பதே நல்லது.
நீர்வீழ்ச்சியில் குளிக்கும்போது இந்தப் பிரச்னை வராதா?
வேகமான நீர்வீழ்ச்சியில் குளிக்கும்போதுகூட மூளை நரம்புகளில் சேதம் ஏற்படலாம். அதனால்தான், நீர்வீழ்ச்சி வேகமாக இருக்கும்போது பொதுமக்களைக் குளிப்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள். நீர்வீழ்ச்சியின் வேகம் மூளை நரம்புகளை மட்டுமல்ல கண் நரம்புகளையும் பாதிக்கலாம்.
இந்த அறிவுறுத்தல்கள் குழந்தைகளில் ஆரம்பித்து வயதானவர்கள் வரை பொருந்தும்.
No comments:
Post a Comment