உடல் எடையைக் குறைக்க எளிய வழிகள்..!
ஒல்லியான ஒடிசல் உடம்பு அமைவது லேசான காரியமா நிச்சயமாக இல்லை. கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டும். உணவுக் கட்டுப்பாடு வேண்டும். தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதெல்லாம் சாத்தியப்பட்டால் நிச்சயம் எடையைக் குறைக்கலாம். அதற்கான சில எளிய வழிகளை பார்ப்போம்!
நிற்கும் நேரத்தை அதிகப்படுத்துங்கள்
உட்கார்ந்து செய்ய வேண்டிய பணிகளைத் தவிர, முடிந்த வரை மற்ற நேரங்களில் நின்று கொண்டே இருங்கள். குறிப்பாகத் தொலைபேசியில் பேசும் போது, உட்கார்ந்து கொண்டு பேசாமல் நின்று கொண்டோ நடந்து கொண்டோ பேசுங்கள். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் நின்றால் நீங்கள் 50 கலோரிகளை எரிக்க முடியும்.
நடைப் பயிற்சி வேண்டும்
நடைப்பயிற்சியைப் போல் வேறு எதுவும் எடையை குறைக்க பயன் தராது. ஒரு நாளைக்கு 10 நிமிடம் நடந்தால் கூடப் போதும். ஆண்டிற்கு 3 கிலோ எடையைக் குறைக்கலாம். வீட்டில் தினசரி பேப்பர் போடுபவரை நிறுத்திவிட்டு நீங்களே பேப்பர் வாங்க கடைக்குச் சென்று வரலாம். அதுபோன்று மதிய உணவிற்கு பிறகு கால்மணி நேரமாவது நடப்பது நல்லது. எடையைக் குறைக்க சிறந்த வழி இது.
ரிமோட் கன்ட்ரோலை தவிருங்கள்
ஒருவரை சோம்பேறியாக்கும் பொருட்களுள் ரிமோட் கன்ட்ரோலும் ஒன்று. உட்கார்ந்து கொண்டும், படுத்துக் கொண்டும் இருந்த இடத்தைவிட்டு எழுந்து போகாமல் சோம்பேறியாக்குவது ரிமோட்தான். எனவே, ரிமோட்டை தவிர்த்துவிட்டு, சேனலை மாற்ற ஒவ்வொரு முறையும் எழுந்து நடந்தால் அதுவே நல்ல உடற்பயிற்சிதான்.
பசித்த பின் புசி
நன்றாகப் பசி எடுத்த பின்பு சாப்பிடுங்கள். சாப்பிட வேண்டும் என்பதற்காகச் சாப்பிடாதீர்கள். பசி ஓரளவு குறைந்துவிட்டது என்ற எண்ணம் வந்தால் உடனே சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள்.
உணவைத் தவற விடாதீர்கள்
ஒருவேளை உணவைத் தவற விட்டுவிட்டு, அடுத்த வேளை தேவைக்கு அதிகமாக உண்பதைக் காட்டிலும் குறைந்த அளவு முன்று வேளையும் உண்ணப் பழகுங்கள். பசி, அதிகம் எடுத்தால் கூடுதலாக சாப்பிடத் தோன்றும். ஆகவே, உணவு உட்கொள்ளும் வேளைகளுக்கு இடையே அதிக இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
எண்ணெய் பொருட்கள் தவிருங்கள்
சமையலில் எண்ணெயை குறைவாகவே பயன்படுத்துங்கள். உதாரணமாக காலையில் பயன்படுத்தியதைக் காட்டிலும் மதியம் குறைவாக பயன்படுத்துங்கள், அதைவிட குறைவாக இரவு வேளையில் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் அதிக கலோரிகள் உடலில் சேருவதை தடுக்க முடியும். மேலும் எண்ணெயில் பொரித்த பொருள்களை அதிகம் உண்பதையும் தவிர்க்க வேண்டும்.
புரதச்சத்து வேண்டும்
கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைத்துக் கொண்டு புரதச்சத்துள்ள உணவு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. மதிய உணவில் புரதச் சத்துக்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் இரவு சாப்பிடும் வரை வேறு எதையும் இடையில் கொரிக்கத் தோன்றாது.
உணவில் பீன்ஸ் சேர்க்கலாம்
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை மிகக் குறைந்த அளவே அதிகரிக்கும் என்பதால் உடலுக்கு நல்லது. அதேசமயம் இவற்றில் கொழுப்பு சக்தியும் மிகக் குறைந்த அளவு காணப்படுகிறது.
ஸ்நாக்ஸை தவிர்க்கவும்
அடிக்கடி ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருந்தால் திடீரென ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை நிறுத்துவது முடியாது. இப்போது கடைகளில் எண்ணெய், கொழுப்பு இல்லாத ஸ்நாக்ஸ்கள் கிடைக்கிறது அதை வாங்கி உண்ணலாம்.
தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள்
சாப்பிடும்போது மேஜையில் உட்கார்ந்து சாப்பிடாதீர்கள். தரையில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுங்கள். ஒவ்வொரு முறையும் குனிந்து சாப்பிடும்போது உள்ளே போகும் உணவின் அளவு குறையும்.
தண்ணீர் அருந்துங்கள்
தினசரி அதிக அளவு தண்ணீர் அருந்தப் பழகுங்கள். பசி எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள். உணவால் வயிற்றை நிரப்புவதைவிட, நீராகாரமாக எடுப்பது நலம். ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆகவே, உங்கள் அருகிலேயே ஒரு பாட்டில் நிறைய தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்.
மெதுவாக சாப்பிடவும்
அவசரம் அவசரமாக சாப்பிடாமல் ஒவ்வொரு கவளம் உணவிற்கும் இடையே போதிய இடைவெளி விடுங்கள். இது உணவு சாப்பிடும் அளவைக் குறைத்து எடையையும் குறைக்க உதவும். நன்றாக உணவுப் பொருளை மென்று தின்பதும் செரிமானத்தை எளிதாக்கும், மெதுவாகவும், நொறுங்கவும் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
No comments:
Post a Comment