மனிதனின் ஆரோக்கியத்துக்கு ஒவ்வொரு வயதினரும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
''ஒரு மனிதன் இத்தனை மணி நேரம்தான் இரவு தூங்க வேண்டும் என்று பொதுவாகச் சொல்லிவிட முடியாது. வயது, மரபணு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தூங்கும் நேரம் ஒருவருக்கொருவர் மாறுபடும். காலையில் எழும்போது புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டும், அன்றைய தினத்தின் செயல்திறன் (performance) நன்றாக இருக்க வேண்டும், பகல் முழுவதும் சோர்வாக உணரக்கூடாது... இவையெல்லாம் இருந்தால் அந்த நபர் சரியாகத் தூங்கியிருக்கிறார் என்று பொருள்.
எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதைப் போலவே, தூக்கத்தின் தரமும் (Quality of Sleep) மிகவும் முக்கியம். தூக்கம் தடைபடாமல் நிம்மதியாகத் தூங்க வேண்டியது அவசியம். குறட்டை பிரச்னை, வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுவது, கர்ப்பிணிகள் சரியாகத் தூங்காமல் இருக்கலாம், சளி, மூக்கடைப்பு போன்ற காரணத்தால் தூக்கம் தடைபடலாம். இதுபோன்ற காரணங்களால் தூக்கத்தின் தரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கச் செல்வது, இருட்டான அறையில் தூங்குவது, தூங்குவதற்கு முன்பாக மொபைல், டிவி போன்றவற்றைப் பார்ப்பதைத் தவிர்ப்பது, காலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது போன்றவை தூக்கத்தின் தரத்தை அதிகரிக்கும்.
தூங்குவதற்கு முன்பு, தூங்கும் சமயத்தில், தூங்கி எழுந்த உடன் நமது உடலில் பல்வேறு ஹார்மோன்கள் ஏற்ற இறக்கத்தில் இருக்கும்.
எவ்வளவு நேரம்?
ஆராய்ச்சிகள், தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் 9 முதல் 10 மணி நேரத் தூக்கத்தை எந்த மருத்துவர்களும் பரிந்துரைப்பதில்லை. பெரியவர்களுக்கு 9 மணி நேரத் தூக்கம் என்பது சற்று அதிகமான நேரம். அதுவே 4 வயதுக் குழந்தை என்றால் 10 மணி நேரம் தூங்கலாம். பெரியவர்கள் ஆறரை மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்கலாம் என்பதுதான் மருத்துவர்களின் பரிந்துரை.
அதே சமயம் அடுத்த நாள் காலை ஒரு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அதற்கான செயல்திறனை நிர்வகிக்க 9 மணி நேரம் தூங்குவதில் தவறில்லை. அதே போல முந்தைய நாள் நீண்ட நேரம் வேலை பார்த்து அதீத சோர்வாக இருக்கும்பட்சத்தில் என்றைக்கோ ஒருநாள் கூடுதலாக ஒருமணி நேரம் தூங்குவதில் தவறில்லை. அப்போதுதான் மறுநாள் அன்றாட வேலைகளைச் செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும்.
யாருக்கு எவ்வளவு நேரம்?
பிறந்ததிலிருந்து - மூன்று மாதம் வரை - 14-15 மணி நேரம்
நான்கு மாதத்திலிருந்து ஒரு வயது வரை - 12 - 14 மணி நேரம்
1 முதல் 2 வயது - 12 மணி நேரம் வரை
3-5 வயது - 10- 12 மணி நேரம்
6-13 வயது - 9-10 மணி நேரம்
14 - 17 வயது - 8-9 மணி நேரம்
18 வயது முதல் - 7-8 மணி நேரம்
மனிதன் நான்கு மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்குவது என்பது ஆரோக்கியமற்றது. குறைவான நேரம் தூங்கும்போது நாள்பட்ட நோய்களான சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், இதயநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment