வீட்டிலேயே எளிய முறையில் சாதத்தில் வடகம் செய்வது எப்படி ?
அரிசி வடகம், ஜவ்வரிசி வடகத்தை கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் சாதத்தில் வடகம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
வேக வைத்த சாதம் - 1 கப்
மிளகாய் வத்தல் - 2
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வேக வைத்த சாதத்துடன் மிளகாய் வத்தல், பெருங்காயத் தூள், சீரகம், உப்பு சேர்த்து மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும். சாதத்தில் உப்பு இருப்பதால் தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்.
தட்டில் லேசாக எண்ணெய் தடவி அதில் அரைத்து வைத்துள்ள சாதத்தை ஒரு மேஜைக்கரண்டி அளவு எடுத்து வட்ட வட்டமாக வைக்கவும். அல்லது முறுக்கு செய்யும் அச்சில் இந்த மாவை போட்டு பிளாஸ்டிக் பேப்பரிலும் பிழியலாம்.
பிறகு எல்லா தட்டுகளையும் மொட்டை மாடியில் அல்லது வெயில் வரும் இடத்தில் ஒரு நாள் முழுவதும் வைக்கவும். அடுத்த நாள் வடகத்தை ஒரு சிறிய கரண்டியால் எடுத்து மாற்றி போட்டு மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.
இப்போது வடகங்கள் நன்கு காய்ந்து விடும்.
காய்ந்த வடகங்களை ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். தேவையான போது எடுத்து வறுத்துக் கொள்ளலாம்.
குறிப்பு -
மீந்து போன சாதத்திலும் இதே முறையில் வடகம் செய்யலாம்.
No comments:
Post a Comment