கை,கால்,முதுகு மற்றும் உடல் வலிக்கு வெந்நீர் ஒத்தடம் சிறந்ததா?ஐஸ் ஒத்தடம் சிறந்ததா?
ஒத்தடம் என்பதை மருத்துவ சிகிச்சைகளில் காலங்காலமாகப் பயன்படுத்தி வருகிறோம். அதில் நிறைய பலன்கள் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், எப்போது ஒத்தடம் கொடுக்கலாம், எப்போது கொடுக்கக் கூடாது என்பதற்கு சில வரையறைகள் உண்டு. குறிப்பாக, வெந்நீர் ஒத்தடம் கொடுக்கும்போது சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
சருமத்தில் ஏதேனும் வெட்டுக்காயங்கள் இருந்தாலோ, புண்கள் திறந்தநிலையில் இருந்தாலோ ஒத்தடம் கொடுக்கவே கூடாது. அடிபட்ட இடத்தில் உணர்ச்சி நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில், உணர்திறன் குறைவாக இருந்தாலும் கட்டுப்பாடற்ற நீரிழிவு இருந்தாலும் ஒத்தடம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவர்களுக்கு சருமத்தில் உணர்திறன் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைச் சொல்லத் தெரியாது. அந்நிலையில் ஒத்தடம் கொடுத்தால் கொப்புளங்கள் வர வாய்ப்புகள் அதிகம்.
சிலருக்கு கீழே விழுந்து ஊமைக்காயம் ஏற்பட்டிருக்கும். ரத்தக்கட்டு இருப்பதை உறுதிசெய்தால், அந்த ரத்தக்கட்டைக் குறைப்பதற்கு ஒத்தடம் கொடுக்கலாம்.
எங்கெல்லாம் ரத்த ஓட்டம் குறைய வேண்டும் என நினைக்கிறோமோ, அங்கெல்லாம் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். எங்கெல்லாம் ரத்த ஓட்டம் அதிகரிக்க வேண்டும் என நினைக்கிறோமோ, அங்கெல்லாம் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
அடிபட்ட உடனே நாம் கொடுக்க வேண்டியது ஐஸ் ஒத்தடம். நாள்பட்ட வலிகளுக்குக் கொடுக்க வேண்டியது வெந்நீர் ஒத்தடம்.
வெந்நீர் ஒத்தடமோ, ஐஸ் ஒத்தடமோ எதைக் கொடுக்கும்போதும் அந்தப் பகுதியில் மெல்லிய துணியைப் போட்டுவிட்டு பிறகு அதன் மேல் ஒத்தடம் கொடுப்பது பாதுகாப்பானது.
எந்த ஒத்தடமானாலும் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுச் செய்யும்போது கைவைத்தியம்கூட பாதுகாப்பானதாக இருக்கும்.
உடல் வலி ஏற்படும்போது மசாஜ் செய்வதுபோல உடலை அமுக்கிவிடுவது சரியா என்ற கேள்வியும் சிலருக்கு உண்டு. அப்படி யாரேனும் அமுக்கி விடும்போது இதமாக உணர்வோம். ஆனால், அமுக்கிவிடும்போது வலி அதிகமானால், உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். அமுக்கிவிடும்போது வலியை உணர்ந்தால், அது உள்ளுக்குள் ரத்தம் உறைந்திருப்பதன் அறிகுறியாகவோ, எலும்புகள் உடைந்துபோயிருப்பதன் அறிகுறியாகவோ, தசைநார் கிழிந்துபோயிருப்பதன் அறிகுறியாகவோ இருக்கக்கூடும். எச்சரிக்கையாகச் செயல்படவும்.
No comments:
Post a Comment