இளமை தோற்றத்தை பராமரிக்க உதவும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகள்..!
இளமை தோற்றத்தையும், சுறுசுறுப்பையும் தக்கவைத்துக்கொள்வதற்கு பலரும் விரும்புகிறார்கள். 40 வயதை கடந்த பின்னும் வயதான தோற்றத்திற்குரிய அறிகுறிகள் எட்டிப்பார்க்காமல் இளமை பொலிவோடு ஜொலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதற்கேற்ப அழகு சாதன பொருட்களை உபயோகிக்கிறார்கள்.
இளமை தோற்றத்திற்கான அடித்தளம் உடலுக்கு எந்த அளவுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது என்பதை பொறுத்து அமைகிறது. ஊட்டச்சத்து நிறைந்த அத்தகைய உணவுகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி விரைவில் வயதான தோற்றம் எட்டிப்பார்ப்பதற்கான அறிகுறிகளை தடுத்துவிடலாம். சில ஆண்டுகள் கூடுதலாக இளமை தோற்றத்தை பராமரிக்கலாம். அப்படிப்பட்ட உணவுகள் எவை தெரியுமா?
அவகேடோ:
அவகேடோ பழத்தில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ நிரம்பியுள்ளன. அவை சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கும், புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாப்பதற்கும் சிறந்தவை. கூடுதலாக கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கும் பண்புகளையும், தோல் நெகிழ்ச்சியை ஊக்குவிக்கும் தன்மையையும் அவகேடோ கொண்டிருக்கிறது.
புளூபெர்ரி:
ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகளை கொண்ட புளூபெர்ரி வயதான தோற்றத்தை எதிர்த்துப் போராடும் சக்தி வாய்ந்தது. இதில் இருக்கும் வைட்டமின்கள் சி மற்றும் கே, நார்ச்சத்து, மாங்கனீசு போன்றவை செல்களை சேதப்படுத்தும் மற்றும் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் பிரீ ரேடிக்கல்களின் செயல்பாடுகளை சமநிலைப்படுத்த உதவும். ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கீரைகள்-பழங்கள்:
கீரை, முட்டைக்கோஸ் ஆகியவற்றில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் ஏராளமாக உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் சேதமடைந்த தோல் செல்களை சரி செய்யவும், உடல் வீக்கத்தை குறைக்கவும், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. இதனால் வயதான அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதை தாமதப்படுத்தவும் செய்கின்றன.
ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற பழங்கள், புரோக்கோலி, இஞ்சி, லவங்கப்பட்டை உள்ளிட்டவையும் விரைவில் வயதாகும் அறிகுறிகளை விரட்ட உதவிடுகின்றன.
கிரீன் டீ:
பாலிபினால்கள் மற்றும் கேட்டசின்கள் நிறைந்த கிரீன் டீ சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. கிரீன் டீயை தவறாமல் பருகுவது சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும், தோல் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும், சுருக்கங்கள் மற்றும் புள்ளிகளின் தோற்றத்தை குறைக்கவும் உதவிடும்.
பெர்ரி:
ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, பிளாக்பெர்ரி போன்ற பிற பெர்ரி வகை பழங்களிலும் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிரம்பியுள்ளன.
இந்த பழங்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும், ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு:
பீட்டா-கரோட்டின் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை உட்கொள்ளும்போது அது உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. செல்களை மாற்றுவதற்கும், பழுதுபார்ப்பதற்கும் இது அவசியமானது. இளமைப் பொலிவைப் பராமரிக்கவும், வறண்ட, மந்தமான சரும நிலையை மாற்றவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு துணைபுரியும்
நட்ஸ்கள்:
பாதாம், வால்நட்ஸ், ஆளி மற்றும் சியா விதைகள் போன்றவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைவாக உள்ளன. மேலும் இதிலிருக்கும் வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இளமை சருமத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தக்காளி:
தக்காளியில் லைகோபீன் உள்ளது. இது சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட்டுகளை கொண்டது. சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், சுருக்கங்களின் அபாயத்தைக் குறைக்கவும் செய்யும். உணவில் தக்காளியை சேர்த்துக்கொள்வது இளமை பொலிவை பராமரிக்க உதவும். புற ஊதா கதிர்வீச்சினால் முன்கூட்டியே வயதாகும் நிலை ஏற்படுவதையும் தடுக்கும் தன்மையும் கொண்டது.
யோகர்ட்:
புரதம் மற்றும் புரோபயாடிக்குகள் அதிகம் கொண்ட யோகர்ட் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தோல் ஆரோக்கியத்துடனும் நெருங்கிய தொடர்பு கொண்டது. இந்த புரோபயாடிக்குகள் இளமை சருமத்தை தக்கவைக்கவும் ஊக்குவிக்கும்.
கொழுப்பு நிறைந்த மீன்:
சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தோல் நெகிழ்ச்சி தன்மையையும், நீரேற்றத்தையும் பராமரிக்க அவசியமானவை. இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருக்கின்றன. சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க உதவுகின்றன.
No comments:
Post a Comment