பாரீஸ் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம் - Minnalseithi

Latest

Search This Blog

Friday, August 9, 2024

பாரீஸ் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம்

 பாரீஸ் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம்


பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச் சுற்றில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.


பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், செக் குடியரசு வீரர் யாகூப் வட்லெஜ்ச், ஜெர்மனியின் ஜூலியன் வெபர், கிரனேடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


ஒவ்வொரு வீரருக்கும் ஆறு முயற்சிகள் வழங்கப்பட்டன. அதன் படி இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது முயற்சியில் எல்லைக் கோட்டை தாண்டி சென்றதால் அவருக்கு சிவப்புக் கொடி காட்டப்பட்டது. எனினும் தனது இரண்டாவது முயற்சியில் 89.45 மீட்டர் தூரம் எறிந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.


அடுத்தபடியாக இறங்கிய பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தனது முதல் முயற்சியில் எல்லைக் கோட்டை தாண்டியதாக் சிவப்புக் கொடி காட்டப்பட்டார். ஆனால் இரண்டாவது முயற்சியில் ஒலிம்பிக்கில் யாரும் இதுவரை தொடாத 92.97மீ எறிந்து சாதனை படைத்தார். இதுவரை ஈட்டி எறிதலில் அதிகபட்ச தூரம் 90.57 மீட்டர் ஆகும். தற்போது அதனை அர்ஷத் முறியடித்துள்ளார்.


ஜெர்மனியின் ஜூலியன் வெபர், கென்யாவின் ஜூலியஸ் யேகோ, செக் குடியரசின் யாகூப் வட்லெஜ்ச் என யாராலும் அர்ஷத் மற்றும் நீரஜ் சோப்ராவின் தூரத்தை நெருங்க இயலாத நிலையில், ஆறாவது சுற்றில் மீண்டும் 90 மீட்டருக்கு மேல் எறிந்தார் அர்ஷத்.


இதன் மூலம் பாகிஸ்தான் வீரரான அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இரண்டாம் இடத்தில் இருந்த இந்தியாவின் நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 88.54 மீ வீசிய கிரனேடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் வெண்கலம் வென்றார்.

No comments:

Post a Comment