கண்ணிற்கு இதம் தரும் பயனுள்ள டிப்ஸ்..! - Minnalseithi

Latest

Search This Blog

Monday, August 5, 2024

கண்ணிற்கு இதம் தரும் பயனுள்ள டிப்ஸ்..!

 கண்ணிற்கு இதம்  தரும் பயனுள்ள டிப்ஸ்..!


இப்போதெல்லாம் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே சிறுவர்கள் கண்ணாடி அணிவதை பார்க்கிறோம். இப்படி பார்வை குறைபாடு ஏற்பட மரபணு ஒரு காரணம் என்றாலும் அடிக்கடி அலைபேசி பார்ப்பது, அதுவும் அலைபேசியை கண் அருகில் வைத்து பார்ப்பது, தொடர்ந்து டிவி பார்ப்பது போன்றவை முக்கிய காரணங்கள்.


குழந்தைகளும் கண்களும்


குழந்தைகள், சிறுவர்கள் அலைபேசியை மிகவும் அருகில் வைத்து பார்ப்பதால், அந்த பார்வைக்கு ஏற்றவாறு கண் நரம்புகள், திசுக்கள் மாறிக்கொள்கின்றன. ஆரம்பத்தில் சிறிய பார்வை குறைபாடு இருக்கும் போது கண்டுபிடித்தால் கண்ணிற்கான பயிற்சிகள் மூலம் நிவர்த்தி செய்து விடலாம்.


ஆனால் முதலில் கவனிக்காமல் தொடரும் போது, ஆண்டுகள் செல்ல செல்ல பார்வை குறைபாடு அதிகரித்துக்கொண்டே செல்லும். கண் விழித்திரையை கூட பாதிக்கும் நிலையை ஏற்படுத்தும். அந்த நேரத்தில் விழித்திரைக்கு கூடுதல் ஆக்ஸிஜன் கிடைக்கும் வகையில், கண் நரம்புகளுக்கு நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தும் சிகிச்சைகள் அளிக்க வேண்டும்.


குழந்தைகளுக்கு மூன்று வயதானாலே கண்ணை ஆண்டிற்கொரு முறை பரிசோதிப்பது நல்லது. ஏனெனில் அவர்கள் கண்ணில் பிரச்னை இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே சிரமம். அவர்கள் புத்தகத்தை மிக அருகில் வைத்து படித்துக்கொண்டிருந்தால் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். பரிசோதனையில் கண்ணிற்கு பிரச்னை இல்லை என்று தெரிந்தாலும், மிக அருகில் புத்தகம் படிப்பது, அலைபேசி பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.


காய்கறிகள், கீரைகள் சாப்பிட குழந்தைகள் தயங்கினாலும் பெற்றோர் நிர்ப்பந்தம் செய்து தர வேண்டும். அவர்கள் உணவில் பச்சை காய்கறிகள், பழங்கள் தினமும் இடம்பெறுவது அவசியம். ஆரம்ப காலத்தில் சிறிய பார்வை குறைபாடு ஏற்பட்டால், உணவின் மூலமே அதனை மேம்படுத்த இயலும்.


சுத்தமான நெய் சேர்த்த உணவு சாப்பிடுவது நல்லது. நகர வாழ்க்கையில் வீட்டினுள், பள்ளியில் என்று அவர்கள் அன்றாடம் முடங்கி விடுகிறார்கள். பச்சை பசேல் வயல்வெளிகள், தோட்டங்கள் என இயற்கையான பச்சை நிறத்தை பார்ப்பது கண்ணிற்கு இதமளிக்கும்.


இளைஞர்களுக்கு...


இளைஞர்கள் வேலைக்காகவும் பொழுதுபோக்கிற்கும் எப்போதும் லேப்டாப், அலைபேசி என பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கண்ணிற்கு ஓய்வு தருவது இல்லை. தொடர்ந்து லேப்டாப் பார்த்துக்கொண்டிருந்தால் சில வினாடிகள் ஓய்வு தர வேண்டும். இதனை 20 - 20 என்கிறோம். அதாவது 20 நிமிடம் லேப்டாப் பார்த்தால், அடுத்து குறைந்தது 20 வினாடியாவது கண் பயிற்சி செய்ய வேண்டும். கம்ப்யூட்டரில் இருந்து கண்ணை விலக்கி, கண்ணை இமைக்க வேண்டும்.


கண்ணை அடிக்கடி சிமிட்டிக் கொள்ள வேண்டும். கண்ணை இடது பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக, வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கமாக, மேலிருந்து கீழாக, கீழிருந்த மேலாக நகர்த்தி பயிற்சி செய்ய வேண்டும். கடிகார சுற்றுப்படியும், எதிர் கடிகார சுற்றுப்படியும் கருவிழியை அசைப்பது போன்றவற்றை செய்ய வேண்டும். இரண்டு உள்ளங்கைகளையும் நன்றாக வெப்பம் ஏற்படும் படி தேய்த்து, அதனை கண் இமைமேல் சில வினாடிகள் வைக்க வேண்டும்.


சைனஸ் பிரச்னைகள் இருந்தாலும் கண்ணிற்கு பாதிப்பு ஏற்படும். எப்போதும் 'ஏசி' அறையில் இருந்து பணிபுரிபவர்கள் சைனஸ் பிரச்னைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சரியான நிலையில் கம்யூட்டரை வைத்து, அதற்கு தகுந்தவாறு இருக்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். கம்ப்யூட்டரை கை அகல துாரத்தில் வைத்து பணிபுரிய வேண்டும்.


கம்ப்யூட்டரை பார்க்கும் அதே வேளையில் தூரத்தில் உள்ள எதாவது ஒரு பொருளையும் அடிக்கடி பார்க்குமாறு உங்கள் இருக்கை அமைய வேண்டும். மடியில் வைத்து லேப்டாப் பார்க்க கூடாது. பயணத்தின் போது படிப்பது, லேப்டாப் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. படுத்துக்கொண்டே அலைபேசி பார்ப்பது மிகவும் தவறு.


நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நல்லெண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய்யை தலையில் நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும். வாரமிருமுறை, ஒருமுறை என அவரவர் வசதிக்கு குளிக்கலாம். இவை எல்லாம் கண்ணிற்கு இதம் தருவன.

No comments:

Post a Comment