சிறுதானியங்கள் ஏன் மிகச் சிறந்த உணவாகின்றன?சிறுதானியங்களைச் சமைக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, August 4, 2024

சிறுதானியங்கள் ஏன் மிகச் சிறந்த உணவாகின்றன?சிறுதானியங்களைச் சமைக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

 சிறுதானியங்கள் ஏன் மிகச் சிறந்த உணவாகின்றன?சிறுதானியங்களைச் சமைக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?


நம் முன்னோர்கள், சிறுதானியங்களைத்தான் பிரதான உணவாக உட்கொண்டனர். பசுமைப் புரட்சிக்குப் பின்னர் இந்தியாவில் அரிசி பயன்பாடு அதிகரித்தது. இதனால், சிறுதானிய பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்ட நிலையில், இப்போது சிறுதானியங்களுக்கான முக்கியத்துவம் மீண்டும் அதிகரித்துவருகிறது.


வைட்டமின்கள், புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் கனிமச் சத்துகள் (கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து) சிறுதானியங்களில் அதிகளவில் இருக்கின்றன. எனவே, சிறுதானியங்கள் உடலுக்கு நன்மை பயக்கும் மிகச் சிறந்த உணவாகின்றன. இவற்றைப் பயன்படுத்தி, சாதம், இட்லி, தோசை, கொழுக்கட்டை, கிச்சடி, உப்புமா, பொங்கல், கலவை சாதங்கள், இனிப்பு மற்றும் கார வகை என பலதரப்பட்ட உணவுகளையும் தயாரிக்கலாம். முக்கியத்துவம் வாய்ந்த சிறுதானியங்களின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். கூடவே, சிறுதானியங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவும் எல்லோருக்கும் சென்றுசேர வேண்டும்.


சிறுதானியங்களில் உடலுக்கு நன்மை பயக்கும் நுண்ணூட்டச் சத்துகள் அதிகளவில் இருக்கின்றன. அதேசமயம், உடலுக்குக் கெடுதல் ஏற்படுத்தும் நுண்ணூட்டச் சத்துகளும் இவற்றில் இருக்கின்றன. கெடுதலான நுண்ணூட்டச் சத்துகளின் திறனைக் கட்டுப்படுத்த, மூன்று விதமான வழிமுறைகளுக்கு உட்படுத்திய பின்னரே சிறுதானியங்களைச் சமைக்க வேண்டும்.


முறை 1 : வறுத்த பின்னரே பயன்படுத்த வேண்டும்


சிறுதானியங்கள் எதுவாக இருந்தாலும், அதைக் கடாயில் கை பொறுக்கும் சூட்டில் லேசாக வறுத்து ஆற வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், அதைப் பத்திரப்படுத்தி வைத்து, தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். இதன்மூலம் வண்டு மற்றும் பூச்சித் தாக்குதலும் சீக்கிரமாக ஏற்படாது. இவ்வாறு வறுத்த சிறுதானியங்களில் சாதம் செய்யலாம்; டிபன் உணவுகள் (கிச்சடி, உப்புமா, பொங்கல்) தயாரிக்கலாம்; மாவாக அரைக்கலாம்; கூழ் அல்லது களி தயாரிக்கலாம்.


முறை 2 : முளைகட்டி பயன்படுத்த வேண்டும்


சிறுதானியங்களை நேரடியாகப் பயன்படுத்துவதைவிடவும், அவற்றை முளைகட்டச் செய்து சமைப்பது அல்லது மாவாக அரைத்துப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. தானியங்கள் மற்றும் சிறுதானியங்களை வறுத்துவிட்டால், அவற்றை முளைகட்டச் செய்ய முடியாது. முளைகட்டச் செய்வதாக இருந்தால் மட்டும், அந்தச் சிறுதானியத்தை வறுக்காமல் அப்படியே கழுவி முளைகட்டச் செய்து பயன்படுத்தலாம். கேழ்வரகு, கம்பு, தினை, சோளம் ஆகிய நான்கு வகையான சிறுதானியங்கள் மட்டுமே உடைத்து குருணையாக மாற்றப்படாமலும், பாலிஷ் செய்யப்படாமலும் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, இந்த நான்கு வகை சிறுதானியங்கள் மட்டுமே முளைகட்டிப் பயன்படுத்த ஏதுவானவை.


இவ்வாறு முளைகட்டச் செய்த சிறுதானியங்களைக் கொண்டு, இட்லி மாவுபோல சிறுதானியத்தில் தயாரித்த மாவையும் நொதிக்க வைத்து இட்லி மற்றும் தோசை செய்யலாம். கேழ்வரகு, கம்பு, தினை, சோளம் ஆகியவற்றை முளைகட்டச் செய்து, ஈரப்பதம் இல்லாத வகையில் உலர்த்தி, அதை அரைத்துப் பத்திரப்படுத்திக்கொள்ளலாம். இதனை, தண்ணீரில் கரைத்து, தோசை செய்யலாம். கூழ் அல்லது களி அல்லது ராகி முத்தே தயாரிக்கலாம். மேலும், தினை, கம்பு, சோளம் ஆகியவற்றை முளைகட்டச் செய்து சாதமும் செய்யலாம். பழுப்பு நிறத்தில் இருக்கும் சோளம், தோற்றத்தில் கம்பினைவிட சற்று பெரியதாக இருக்கும். இந்தச் சோளம் (Sorghum) வேறு, மக்காச்சோளம் (Corn) என்பது வேறு.


சாமை, வரகு, குதிரைவாலி ஆகிய சிறுதானியங்கள் பாலிஷ் செய்யப்பட்ட பின்னரே விற்பனை செய்யப்படுவதால், அவற்றை முளைகட்ட வைக்க முடியாது.


முறை 3 : அரிசி மாவைப் போன்று நொதிக்க வைத்துப் பயன்படுத்த வேண்டும்


அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஊற வைத்து, கிரைண்டர் அல்லது மிக்ஸியில் சேர்த்து ஒன்றாக அரைத்து, நொதிக்க வைக்கிறோம். இந்த மாவில்தான், இட்லி மற்றும் தோசை தயாரிக்கிறோம். இதேமுறையில், அரிசிக்கு பதிலாக, கேழ்வரகு, கம்பு, தினை, வரகு, குதிரைவாலி, சாமை போன்ற எல்லா விதமான சிறுதானியங்களையும் பயன்படுத்தலாம். தேர்ந்தெடுத்த ஏதாவதொரு வகை சிறுதானியத்துடன், உளுந்து, வெந்தயம் சேர்த்து மாவு தயாரித்துப் பயன்படுத்தலாம். அல்லது, ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுதானியங்களைக் கலந்தும் மாவு அரைத்துப் பயன்படுத்தலாம். அரிசி மாவைப் புளிக்கச் செய்வதுபோலவே, சிறுதானியத்தில் தயாரிக்கப்படும் மாவையும் 8 - 10 மணி நேரமாவது புளிக்க வைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். இந்த மாவில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது அதிகளவில் பொங்கும். எனவே, அரைத்த மாவை பெரிய பாத்திரத்தில் நொதிக்க வைக்க வேண்டும்.


சிறுதானியத்தில் சாதம் செய்யலாமா?


கண்டிப்பாகச் செய்யலாம். கிராமப்பகுதியினர் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளும் கம்பஞ்சோறு, கோடைக்காலத்துக்குச் சிறந்த உணவாகிறது. சிறுதானியங்களில் சாதம் தயாரிப்பதென்றால், வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, சோளம் உள்ளிட்ட தானியங்கள் ஏற்றவை. சாதம் செய்வதாக இருந்தாலும், சிறுதானியங்களை வறுத்து ஆற வைத்ததையே பயன்படுத்த வேண்டும். வரகு, சாமை, தினை, குதிரைவாலி ஆகியவற்றைத் தண்ணீரில் 3 - 4 முறை கழுவிவிட்டு, அரை மணி நேரம் ஊற வைத்த பின்னர் சமைக்கலாம்.


இதுவே, கம்பஞ்சோறு தயாரிப்பதென்றால், கம்பு மற்றும் சோளத்தினை 2 - 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த பின்னரே உரலில் இடித்து அல்லது மிக்ஸியில் லேசாக அரைத்து சாதம் தயாரிக்க வேண்டும்.


கம்பு மற்றும் சோளத்தினை கூடுமானவரை பாத்திரத்தில் சமைப்பது நல்லது. தேவைப்பட்டால் குக்கரிலும் சமைக்கலாம். வரகு, சாமை, தினை, குதிரைவாலி ஆகியவற்றைப் பாத்திரத்தில் சாதம் வடிப்பதைவிட, குக்கரில் சாதம் செய்வதால், நுண்ணூட்டச் சத்துகள் அதிகளவில் கிடைக்கும். சாதம் தயாரிக்க, ஒரு கப் சிறுதானியத்துக்கு 2 கப் தண்ணீர் சேர்த்தால் போதுமானது. சிறுதானியங்களில் செய்த பழைய சாதத்தை (முன்தின நாள் தயாரித்த சாதத்தைத் தண்ணீர் சேர்த்து நொதிக்க வைத்து) அப்படியே அல்லது தயிர் சேர்த்தும் உட்கொள்ளலாம். சிறுதானியங்களில் தயாரித்த பழைய சாதமும் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.


பொங்கல், கிச்சடி, உப்புமா செய்வதாக இருந்தால்?


சிறுதானியத்தில் பொங்கல், கிச்சடி, உப்புமா செய்கிறீர்களா? அப்போது, தேர்ந்தெடுத்த சிறுதானியத்தைத் தண்ணீரில் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்த பின்னரே சமைக்க வேண்டும். சம்பா (கோதுமை) கிச்சடி செய்வதுபோலவே, சம்பாவுக்கு பதிலாக வரகு அல்லது சாமை அல்லது குதிரைவாலியையும், அதனுடன் காய்கறிகளையும் சேர்த்து கிச்சடி செய்யலாம். உடலுக்கு மிகவும் வலு சேர்க்கும் இந்த உணவு, விரைவாக செரிமானமாகும். இதுபோன்ற கிச்சடி, இரவுக்கு ஏற்ற உணவு.


சிறுதானியத்தை அரைத்து மாவாக்கி, அதை தண்ணீரில் கரைத்து, கெட்டியாகும் வரை வேகவைத்துத் தயாரிப்பது களி. இதில், நீர்ச்சத்து ஓரளவுக்கு இருக்கும். கம்பு மற்றும் ராகியில் களி செய்து, ஏதாவதொரு தானியத்தில் தயாரித்த குழம்பு அல்லது இறைச்சி குழம்புடன் சேர்த்துச் சாப்பிடலாம். அல்லது, முன்தினம் தயாரித்த கம்பு அல்லது ராகி களியில், தயிர் அல்லது மோர் சேர்த்தும் உட்கொள்ளலாம். கர்நாடக மாநிலத்தில் ராகி முத்தே (Ragi Mudde) எனும் உணவு வெகு பிரபலம். கெட்டியாக கல் போன்று திடமான வடிவத்தில் ராகிக்களியை உருண்டை பிடித்து, அதனுடன் ஏதாவதொரு குழம்பு அல்லது இறைச்சி குழம்புடன் அன்றாட காலை உணவாக அல்லது மதிய உணவாக உட்கொள்கின்றனர்.


இது, உடலுக்கு வலு சேர்க்கும் உணவாக அமைகிறது. குறிப்பாக, வறுத்து அரைத்த அல்லது முளைகட்டச் செய்த கம்பு அல்லது ராகி மாவைத்தான் ராகி முத்தே அல்லது களி செய்யப் பயன்படுத்த வேண்டும்.


சிறுதானியத்தில் கஞ்சி தயாரிக்கலாமா?


உலர்ந்த சிறுதானியங்களைத் தனித்தனியாகவோ அல்லது பலவிதமான தானியங்களை ஒன்றாகச் சேர்த்தோ அல்லது ஏதாவது ஒரு வகையான / பலவிதமான சிறுதானியங்களுடன், பிற தானியங்களைச் சேர்த்து அரைத்தால், சிறுதானிய சத்துமாவு தயார். இந்த மாவை, தண்ணீரில் கரைத்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு காய்ச்சி கெட்டியாகவோ அல்லது நீர் பதமாகவோ சத்துமாவு கஞ்சி செய்யாம். இந்தக் கஞ்சியைக் காலை உணவாகச் சாப்பிடலாம். ஆரோக்கியமாக இருப்பவர்கள், வாரத்தில் எல்லா தினங்களிலும் காலை உணவாக மட்டும் இந்தக் கஞ்சியை உட்கொள்ளலாம்.

No comments:

Post a Comment