வாய்விட்டுச் சிரிப்பதை கட்டாயமாக்கியுள்ள நாடு எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன?
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது பழமொழி. சிரிப்பதால் கிடைக்கிற மருத்துவ பலன்களை கருத்தில்கொண்டு ஜப்பானின் ஒரு மாகாணத்தில் சிரிப்பதை கட்டாயப்படுத்த கடந்த வாரம் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ஜப்பானின் யமகாட்டா ப்ரீஃபெக்சர் அரசு, மாகாணத்தில் உள்ள மக்கள் நாளொன்றுக்கு ஒருமுறை வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி சட்டமியற்றியுள்ளது. பணியிடங்களில் சிரிப்பதற்கான சாதகமான சூழலை உருவாக்கவும் அலுவலக நிர்வாகங்களுக்குக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சுதந்திர ஜனநாயக கட்சி (எல்டிபி) இதனை சட்டமாக இயற்றியுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
சிரிப்பதும் சிரிக்காமல் இருப்பதும் மனிதர்களின் அடிப்படை உரிமை என எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன. சிரிக்க இயலாதவர்களை சட்டம் கட்டாயப்படுத்த முடியாது என அவை தெரிவிக்கின்றன.
இந்த சட்டம் யமகாட்டா பல்கலைக்கழகத்தின் மருத்துவர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. தொற்றுநோயியலுக்கான இதழில் 2020-ல் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், ஆய்வாளர்கள் 40 வயதுக்கு அதிகமான 17,152 பேரிடம் தரவுகள் சேகரித்தனர்.
அந்த அறிக்கையில் இறப்புக்கான அனைத்துவிதமான காரணங்கள் மற்றும் இதய தொடர்புள்ள நோய்கள் ஏற்படுவது குறைவாக சிரிப்பவர்களுக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.
சிரிப்பதற்கு என்றே மாதத்தில் ஒரு நாளை இந்த சட்டம் ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு மாதமும் எட்டாவது நாள் மக்கள் சிரிப்பதன் மூலம் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சிரிக்காமல் இருந்தால் எந்தவித தண்டனையும் கொடுக்க சட்டத்தில் இடம் கொடுக்கப்படவில்லை. உடல் மற்றும் மனநலனுக்காக இதனை கட்டாயமாக்கவுள்ளதாக மாகாண அரசு அறிவித்துள்ளது.
ஜப்பானின் சில சட்டங்கள் எப்போதும் வெளிநாட்டவர்களுக்கு விநோதமாகதான் இருக்கும். உதாரணமாக ஜப்பானில் ரூபாய் நோட்டுகளை சேதப்படுத்தினால் ஒரு வருடம் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். ஒருவருடன் சண்டையிட்டு மோதியதால் யாரேனும் உயிரிழந்தால் அவருக்கு காப்பீடு நிறுவனம் ஆயுள் காப்பீடு உரிமை தொகை தருவதை மறுக்கலாம்.
அதேபோல, ஒதுக்கப்பட்ட நாளை தவிர மற்ற நாள்களில் வீட்டின் குப்பைகளை வெளியே எடுத்துவந்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படும்.
சிரிப்பது மனித இயல்பானது. வேடிக்கைக்கு சொல்லப் போனால் விலங்குகளிடமிருந்து நம்மை வேறுபடுத்துவதே அந்த சிரிக்கும் பண்புதான். அதனை சட்டத்தின் மூலம் கொண்டுவரும் அளவுக்கு நிலை மோசமாகியுள்ளதை இந்த சூழல்கள் காட்டுகின்றன.
No comments:
Post a Comment