பள்ளியில் சேர்க்க மாற்றுச் சான்றிதழ் கேட்கக் கூடாது : சுற்றறிக்கை பிறப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு சேரும் போது, மாற்றுச் சான்றிதழ் தரும்படி வற்புறுத்தக் கூடாது; தேவையின்றி மாற்றுச் சான்றிதழில் குறிப்புகள் எழுதக் கூடாது' என, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காலக்கட்டத்தில், கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்கள் பலர், தனியார் பள்ளிகளை விட்டு விலகி, அரசு பள்ளி உள்ளிட்ட மற்ற பள்ளிகளில் சேர முற்பட்டனர்.
இதற்காக, மாற்றுச் சான்றிதழ் கேட்டபோது, கட்டண பாக்கி உள்ளிட்ட காரணங்களை கூறி, தனியார் பள்ளிகள் மறுத்தன. இதையடுத்து, மாற்றுச் சான்றிதழ் இல்லாமல், மாணவர்களை சேர்க்கும்படி, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.
மறுக்கக் கூடாது
இதை எதிர்த்து, அகில இந்திய தனியார் பள்ளிகள் சட்டப் பாதுகாப்பு சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 'மாற்றுச் சான்றிதழ் கேட்டு, தற்போது படிக்கும் பள்ளிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.
'பின், ஒரு வாரத்தில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்; எந்த காரணத்துக்காகவும், மாற்று சான்றிதழ் மறுக்கக் கூடாது' என உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, பள்ளிக்கல்வித்துறை மேல்முறையீடு செய்தது. மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அமர்வில், விசாரணைக்கு வந்தது.
பள்ளிக்கல்வித் துறை சார்பில், சிறப்பு பிளீடர் யு.எம்.ரவிச்சந்திரன் ஆஜராகி, ''தனி நீதிபதியின் உத்தரவு, கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டத்துக்கு முரணாக உள்ளது. தொடக்கக் கல்வியை இலவசமாக பெறுவதை, அரசு உறுதி செய்யும்படி, சட்டத்தில் கூறப்பட்டுள்ளது,'' என்றார்.
மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக, அந்த மாணவனின் மீது களங்கம் கற்பிப்பதை அனுமதிக்க முடியாது. கட்டண பாக்கியை வசூலிக்க, மாற்றுச் சான்றிதழ் ஒரு கருவி அல்ல. மாற்றுச் சான்றிதழ் என்பது, அந்த மாணவனின் தனிப்பட்ட ஆவணம்.
அதில், தேவையின்றி குறிப்புகளை பள்ளி நிர்வாகம் எழுதக் கூடாது.
பள்ளிகளுக்கு கட்டண பாக்கியை செலுத்த வேண்டியது, பெற்றோரின் கடமை. கட்டணம் செலுத்த பெற்றோர் தவறினால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் சட்டப்படி வசூலித்துக் கொள்ள வேண்டும்.
சான்றிதழில், கட்டணம் செலுத்தாதது பற்றி குறிப்பு எழுதுவது, அந்தக் குழந்தையை அவமானப்படுத்துவது போலாகும்.
கட்டணம் செலுத்த பெற்றோர் தவறினால், குழந்தைகள் என்ன செய்யும்? குழந்தைகள் மீது களங்கம் கற்பிப்பதும், மனரீதியாக துன்புறுத்துவது போலாகும். மாற்றுச் சான்றிதழில், கட்டணம் செலுத்தாதது பற்றி குறிப்பு எழுதினால், அந்த மாணவனை மற்ற பள்ளிகளில் சேர்க்க மாட்டார்கள்.
கல்வி பெறும் உரிமை சட்டத்தில், மாற்றுச் சான்றிதழ் கட்டாயமாக்கப்படவில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.
சட்டப்படி நடவடிக்கை
தமிழ்நாடு கல்வி விதிகள் மற்றும் மெட்ரிக் குலேஷன் பள்ளி ஒழுங்குமுறை விதிகளை, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். உரிய திருத்தங்களை மூன்று மாதங்களில் மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் சேர்க்கையின் போது, மாற்றுச் சான்றி தழ் அளிக்கும்படி வற்புறுத்தக் கூடாது; மாற்றுச் சான்றிதழில் தேவையின்றி குறிப்புகள் எழுதக் கூடாது என அனைத்து பள்ளி நிர்வாகத்துக்கும், அரசு சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment