முடி பட்டுப்போன்று இருக்க கண்டிஷனர் பயன்படுத்தும் முறைகள்..!
முடி பட்டுப்போன்று இருக்க ஷாம்புவுக்கு பிறகு கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். இவை எண்ணெய் தன்மையோடு கூந்தலின் வறட்சியைத் தடுக்க உதவுகிறது. கண்டிஷனரை பயன்படுத்தும் முறைகள் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. கண்டிஷனர் பயன்படுத்தாதவர்கள் தலைக்கு குளிக்கும் முன்பு சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை கூந்தலின் ஸ்கால்ப் பகுதியில் தடவுவதுண்டு. இவை கூந்தலுக்கு இயற்கை கண்டிஷனராக செயல்படும். இவையில்லாமல் வெளியிலிருந்து கூந்தலுக்கு பிரத்யேகமான கண்டிஷனர் வாங்கி பயன்படுத்தும் போது அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
எண்ணெய் வேண்டாம்
கூந்தல் அதிகப்படியாக பளபளக்கும் என்று சிலர் தலைக்கு குளிப்பதற்கு முன்பு எண்ணெய் தலையில் தேய்த்து ஊறவிடுவார்கள். பிறகு ஷாம்புவை கொண்டு அலசியதும் மீண்டும் கண்டிஷனர் பயன்படுத்துவார்கள். இந்த இரண்டையும் சேர்த்து பயன்படுத்தினால் கூந்தல் கூடுதலாக பொலிவாக இருக்கும் என்று நினைப்பார்கள்.
ஆனால் எண்ணெய் குளியலின் போது கூந்தலுக்கு கண்டிஷனர் பயன்படுத்த வேண்டாம். அதே போன்று இயன்றவரை சீயக்காய் பயன்படுத்தலாம். கூந்தலுக்கு ஷாம்பும் சீயக்காயும் மாறி மாறி பயன்படுத்த கூடாது என்பவர்கள் பயத்தம் மாவை தேய்த்து குளித்து பிறகு ஷாம்பு கொண்டு தலையை அலசிகொள்ளலாம். ஆனாலும் அன்றைய தினம் கூந்தலுக்கு கண்டிஷனர் தேவையில்லை.
குறைந்த அளவு
கூந்தலின் அளவுக்கேற்ப கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். முடிக்கு மென்மையை தரும் என்பதால் அதிகப்படியாக பயன்படுத்தும் போது அவை முடியை வலுவிழக்க செய்யும். தரமான கண்டிஷனராகவே இருந்தாலும் கூட அதில் கலந்திருக்கும் கெமிக்கல் முடிக்கு சேதத்தை உண்டாக்கவே செய்யும்.
அதே போன்று கண்டிஷனரை பயன்படுத்தும் போதும் இரண்டு துளி தண்ணீர் சேர்த்து குழைத்து பயன்படுத்துவதும் நல்லது. இதனால் முடிகளில் அதிகப்படியான கண்டிஷனர் தேவைப்படாது. முடிக்கு மென்மையை மட்டுமே தரும் கண்டிஷனரை முறையாக பயன்படுத்தாவிட்டால் அவை உதிர்வையும் உண்டாக்கிவிடும்.
ஷாம்பு கண்டிஷனர் இரண்டும் ஒன்றாக இருந்தால்
தற்போது ஷாம்பும் கண்டிஷனரும் இரண்டும் சேர்த்து தயாரிக்கப்பட்டவை கடைகளில் கிடைக்கிறது. ஆனால் இவை இரண்டையும் பயன்படுத்துவதன் மூலம் கூந்தலிலிருக்கும் அழுக்குகளும் நீங்காது. கூந்தலுக்கு கண்டிஷனரும் கிடைக்காது. அதனால் கூந்தலுக்கு தனி ஷாம்புவையும் மென்மைக்கு தனியாக கண்டிஷனரையும் பயன்படுத்துங்கள்.
கண்டிஷனர் வாங்கும் போது ஆலிவ் ஆயில் மற்றும் முட்டை கலந்த கண்டிஷரை பயன்படுத்துங்கள். இவை கூடுதலாக உங்கள் முடியை பாதுகாக்கவும், முடி உதிர்வை தடுக்கவும் செய்யும்.
எங்கு பயன்படுத்த வேண்டும்?
ஷாம்பு பயன்படுத்தும் போது கூந்தலின் மீது பயன்படுத்த வேண்டியதில்லை. தலையின் ஸ்கால்ப் பகுதியில் மட்டும் தடவவேண்டும். அதே போன்று கண்டிஷனர் பயன்படுத்தும் போது தலையின் ஸ்கால்ப் பகுதியில் போட கூடாது. கூந்தலின் மீது மட்டுமே தடவ வேண்டும்.ஸ்கால்ப் பகுதியில் கண்டிஷனர் பயன்படுத்தினால் முடிகள் பலமிழந்து மிகவும் மென்மையாகி உதிரத்தொடங்கும். இதனாலும் முடி உதிர்வு உண்டாகும். கண்டிஷனர் பயன்படுத்துவதால் முடி கொட்டுகிறது என்று பலரும் தவறாக நினைக்க காரணம் சரியான முறையில் பயன்படுத்தாததுதான்.
எப்போது கண்டிஷனர்?
கூந்தல் வளர்ச்சி, கருமை, அடர்த்தி எல்லாமே நன்றாக இருக்கும்பட்சத்தில் ஷாம்பு பயன்படுத்துபவர்கள் கண்டிஷனரை பயன்படுத்தவும் தயங்க கூடாது. கூந்தல் மென்மையாக தான் இருக்கிறது அதனால் கண்டிஷனரை பயன்படுத்த வேண்டாம் என்று நினைப்பது கூந்தல் உதிர்வை அதிகரிக்க தொடங்கும். அதனால் வாரத்துக்கு மூன்று நாள்கள் தலைக்கு குளித்தாலும் கூட அப்போதெல்லாம் கண்டிஷனரும் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் ஷாம்புக்கள் முடியை வறட்சி அடைய செய்யும்.
தவிர்க்க
கண்டிஷனர் பயன்படுத்துவது நல்லது என்றாலும் உங்கள் கூந்தலின் தன்மைக்கேற்ப கண்டிஷனரை பயன்படுத்துங்கள். உங்கள் கூந்தல் மிகுதியான எண்ணெய்பசையை கொண்டிருந்தால் நீங்கள் கண்டிஷனர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
உங்கள் கூந்தல் அதிக வறட்சியை கொண்டிருந்தால் நீங்கள் கண்டிஷனர் பயன்படுத்தும் போது க்ரீம் வகையான ஜெல்லை தேர்வு செய்வது அவசியம். உங்களுக்கு எதை பயன்படுத்துவது என்று தெரியவில்லையெனில் க்ரீம், ஜெல், ஃபோம் என பல தன்மையில் இவை உண்டு. இதில் எதை பயன்படுத்துவது என்பதை உங்கள் அழகு கலை நிபுணரோடு உங்கள் கூந்தல் தன்மைக்குரிய கண்டிஷனரை தேர்வு செய்யுங்கள்.
கூந்தலுக்கு கண்டிஷனர் தேவை. ஆனால் சரியானதை தேர்வு செய்வதும் அவசியம்.. அப்போதுதான் கூந்தல் வளர்ச்சி உறுதியாகவும், பொலிவாகவும் இருக்கும்.
No comments:
Post a Comment