ஆண்டுக்கு 10 நாள்கள் புத்தகப் பையில்லா நாட்களை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்ட அரசு
கற்றலை மன அழுத்தம் இல்லாததாகவும், மகிழ்ச்சியான அனுபவமாகவும் மாற்றும் நோக்கில், பள்ளிகளில், 6 ‑ 8ம் வகுப்பு வரையில் புத்தகப் பையில்லா நாட்களை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:
நாடு முழுதும், 6 ‑ 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆண்டுக்கு 10 நாட்கள் நடக்கும் புத்தக பையில்லா தினத்தில் பங்கேற்க வேண்டும் என, தேசிய கல்விக் கொள்கை ‑ 2020ல் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
தொழிற்கல்வி
இதில், 6 ‑ 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தச்சு வேலை, எலெக்ட்ரிக் பணி, தோட்ட வேலை, பானை செய்தல் உள்ளிட்ட தொழிற்கல்விகளை கற்க வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். புத்தகப் பையில்லா இந்த 10 நாட்கள் தொழிற்கல்வி வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டும்.
அத்துறை சார்ந்த நிபுணர்கள் மாணவர்களை சந்தித்து நேரடி விளக்கங்கள் அளிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
புத்தகப் பையில்லா 10 நாட்களை, ஓராண்டுக்கு எப்படி வேண்டுமானாலும் பள்ளிகள் பிரித்துக் கொள்ளலாம். இரண்டு அல்லது மூன்று வகுப்புகளை தொடர்ச்சியாக நடத்துவது பலன் அளிக்கும். இதில், அனைத்து பாடங்களுக்கான ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
இந்த வகுப்புகள் உள் மற்றும் வெளிப் பயிற்சி வகுப்புகளாக இருக்க வேண்டும். காய்கறி மார்க்கெட் அழைத்து சென்று, அதன் நடைமுறைகளை அறியச் செய்வது, செல்லப் பிராணிகள் பராமரிப்பு குறித்து நேரடியாக அறிந்து அறிக்கை சமர்ப்பிப்பது.
புத்தக கண்காட்சி
தொண்டு நிறுவனங்களை சென்று பார்ப்பது, பட்டம் செய்து பறக்கவிடுவது, புத்தக கண்காட்சி ஏற்பாடு செய்வது, ஆலமரத்தடியில் அமர்தல், உயிர் எரிவாயு ஆலை மற்றும் சூரிய சக்தி பூங்காக்களுக்கு அழைத்து செல்வது உள்ளிட்ட செயல்பாடுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment