அதுவா... அது 'சிதம்பர ரகசியம்' என்பார்களே! சிதம்பர ரகசியம் என்றால் என்ன? - Minnalseithi

Latest

Search This Blog

Monday, June 24, 2024

அதுவா... அது 'சிதம்பர ரகசியம்' என்பார்களே! சிதம்பர ரகசியம் என்றால் என்ன?

 அதுவா... அது 'சிதம்பர ரகசியம்' என்பார்களே! சிதம்பர ரகசியம் என்றால் என்ன?


அதுவா... அது 'சிதம்பர ரகசியம்' என்பார்கள். ஆமா... அதென்ன அந்த சிதம்பர ரகசியம் ? 


சிதம்பரம் என்றவுடன் ரகசியம் என்ற சொல்லும் உடனேயே நினைவுக்கு வராமல் போகாது. அற்புதத் தலத்தில் அதிசய ரகசியங்களும் இல்லாமல் இல்லை அப்படி என்ன தான் ரகசியம் இந்தக் கோயிலுக்குள் இருக்கிறது என்று கேட்காதவரே இல்லை.


ஐந்தாயிரமாண்டுகளுக்கும் மேலாக உலக முழுவதும் அறியப்பட்ட வார்த்தை, 'சிதம்பர ரகசியம்' ஆகும். ஆனால் , அதன் ரகசியம் அறிந்தவர் ஒரு சிலரே.


சிதம்பர ரகசியத்தை புறக்கண்னால் காணாமல் ஞானக்கண்ணால் கண்டுணர்வதே இந்த ரகசியம் உணர்வதன் அருளாகும். இதற்கு இறையருள் தேவை. பரம ரகசியமாகவும், பராபர ரகசியமாகவும் விளங்கும் சிதம்பர ரகசியம் சிவ ரகசியமாகும்.


உயிர்களால் உணர முடியாததும், புலன்களால் அறிய முடியாததுமே சிதம்பர ரகசியம்.. சித்தத்தை வென்ற சித்தர்களுக்கே இது வசப்படும்.


சிவ ரகசியத்தை- சிதம்பர ரகசியத்தை தரிசிக்க பொருள் வல்லது சாதனையேயன்றி வேறொன்றும் இல்லை.

சிதம்பர ரகசிய பீடம்.


தில்லையம்பல நடராசன் சந்நதிக்கு அருகில் சிதம்பர ரகசிய பீடம் அமைந்துள்ளது. சிற்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. பொன்னாலான வில்வ மாலை சாத்தப்பட்டு சிதம்பர ரகசிய காட்சி பக்தர்கள் பார்வைக்கு காண்பிக்கப்படுகிறது. இதனை திருவம்பலச் சக்கரம், அன்னாகர்ஷண சக்கரம் என்றும் கூறுவார்கள்.


இது 'திரஸ்க்ரிணீ' என்கிற நீல வஸ்திரத் திரையால் மூடப்பட்டு இருக்கும். திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். பரிபூரணமான வெட்டவெளியே இதன் ரகசியமாகும். இந்த வாயிலில் உள்ள திரை அகற்றுப்பட்டு ஆரத்தி காட்டப் படும்போது, அங்கு சிலையோ வேறு காட்சிகளோ தென்படாது. தங்கத்தால் செய்யப்பட்ட 'வில்வ தளமாலை' ஒன்று தொங்கும் காட்சிமட்டுமே தெரியும். இதனுள்ளே வேறு திருவுருவம் ஏதும் தோன்றாது.


மூர்த்தி ஒன்றும் இல்லாமலேயே வில்வ தளம் தொங்குவதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் முடிவும் முதலும் இல்லாது இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. வெட்ட வெளியில் அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம். அந்த ரகசியத்தின் அடிப்படையில் தான்.


பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகக் அமைந்தது எனலாம். சிதம்பர ரகசியம் : சித்+அம்பரம் = சிதம்பரம். சித்-அறிவு. அம்பரம்- வெட்டவெளி. 'மனிதனே !உன்னிடம் ஏதும் இல்லை’ என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள்.

புராணங்கள் சிதம்பர ரகசியத்தை 'தஹ்ரம்' என்று குறிப்பிடுகின்றன. உருவமின்றி அருவமாய் இருப்பதால் ‘அரூபம்’ என்றும் சொல்வார்கள்.


இந்த சிதம்பர ரகசியத்தை வேண்டிக்கொண்டு, திடசங்கல்பத்துடன் ஒருவன் தரிசித்தால், நினைத்தபடி நினைத்த பலன் கிடைக்கும். ஆனால் எவ்வித பலனையும் சிந்திக்காமல் ‘நிஷ்சங்கல்’பமாகத் தரிசித்தால் ஜென்ம விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


இந்த சிதம்பர ரகசியம் என்பதன் விளக்கம். இது மனக் கண்ணால் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். அதாவது, திரை என்பது மாயை. திரை விலகினால் ஒளி தெரியும். அதேபோல், நம் மனதில் உள்ள மாயை விலகினால் ஞானம் பிறக்கும்‘ என்பதே விளக்கம். இந்த அருவ நிலைதான் இங்கு மூலஸ்தானம்.


அருவ வடிவமாக, இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கிறான் என்பதை உணர்த்துவதே இந்த வெட்டவெளி ஆகும். அதனால் சிதம்பரம் ஆகாயத் தலம் என்றும் பூசிக்கப்படுகிறது.


‘சிதம்பர ரகசியம்’ என்பது ஒன்றுமில்லை. ‘ஒன்றுமில்லை’ என்பதுதான் சிதம்பர ரகசியம். சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவசமயத்தில், ‘கோயில்’ என்று கொண்டாடப்படும் ஒரே தலம் தில்லை சிதம்பரம். பஞ்சபூதத் தலங்களுள் ஆகாயத்திற்குரிய தலமாக இது விளங்குகிறது. அந்த ஆகாயத் தத்துவத்தை விளக்குவதுதான் சிதம்பர ரகசியம். ஆகாயம் என்பது வெற்றிடம்; எதுவுமில்லாத தன்மை. இதைத்தான் சிதம்பர ரகசியம் என்கின்றனர். பதினெட்டாம் நூற்றாண்டின் விடிவெள்ளியாகத் தோன்றிய வள்ளலார், சிறு குழந்தையாக இருக்கும்போது, பெற்றோர்கள் அவரைச் சிதம்பரத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே நடராஜப் பெருமானுக்கு வழிபாடு நடக்கும்போது, ‘திரை விலக்கி’ எதுவும் இல்லை என்ற ஆகாயத் தத்துவத்தை விளக்கும்போது அக்குழந்தை முகமும் அகமும் மலர்ந்து சிரித்ததாம். அதாவது, ஆனந்தத் தாண்டவனின் ஆலயத்தில், தான் கண்டுகொண்ட ஆச்சர்யத்தைக் கண்டு, அப்படிச் சிரித்ததாம். அந்த ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அதுதான் சிதம்பர ரகசியம். இறைவன் ஆகாயமயமாக இருக்கிறான் என்பதே அந்த ரகசியம். ஆகாயத்திற்கு வடிவமோ, நிறமோ, உணர்வோ கிடையாது. இல்லாமல் இருப்பதுதான் ஆகாயம். இறைவன் இல்லாமலும் இருக்கிறார் என்பதே ஆகாய தத்துவம் உணர்த்துகிறது.


அதாவது, எலும்பும் சதையுமாகத் தோன்றினால்தான் இறைவன் என்றில்லை, தோன்றாமலும் அருள்பாலிக்கலாம். இதன்மூலம், இறைவன் எங்கும் தோன்றாத் துணையாக இருக்கிறார் என்பதை உணர்ந்து ஒழுக்கமாக வாழவேண்டும். சிதம்பரத்தில் இதுமட்டும் ரகசியமில்லை. சிதம்பரத்தில், நடராஜப் பெருமான் ஒற்றைப் பெருவிரலை ஊன்றி ஆடுகிற இடம்தான் உலகத்தின் மையப்பகுதி ஆகும். வெளிநாட்டிலிருந்து, மூன்று அறிஞர்கள் உலகத்தின் மையப்பகுதியைக் கண்டறியப் புறப்பட்டு, அது இந்தியாவில் இருக்கிறது என்று கண்டறிந்தனர். அதுவும் தமிழ்நாட்டில் இருக்கிறது என்றும், தமிழ்நாட்டில் சிதம்பரத்தில்தான் இருக்கிறது என்று கண்டறிந்தனர். குறிப்பாக, உலகத்தின் மையப்பகுதி நடராஜப் பெருமான்.விரலூன்றி ஆடும் இடம்தான் என்பதை அறிந்து கூறினர் என்பார் பொற்கிழிக்கவிஞர் சொ.சொ.மீனாட்சி சுந்தரம் அவர்கள். இது ஒரு ரகசியம். கோயிலுக்குள் இருக்கும் இந்த நடராஜர் மட்டுமல்ல, இந்தக் கோயிலே ஒரு ரகசியம்தான்.

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ

புரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே

சிவலிங்கம்

கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே”

– என்பது திருமந்திரம்.


இதன் அடிப்படையில், இந்தக் கோயில் மனித உடம்பின் அமைப்பில் உருவானதாகும். இடப்பக்கம் இருக்கும் இதயமாக இங்கு இறைவன் ஆடுகிற சபையும், இறைவன் கோயிலுக்கு மேல் வேயப்பட்ட 21,600 ஓடுகள் ஒரு நாளைக்கும் நாம் விடும் மொத்த மூச்சுகளின் எண்ணிக்கையிலும் அதற்கு அடிக்கப்பட்டுள்ள 72,000 ஆணிகள், ஒரு நாளைக்கு நம் இதயத்தின் மொத்தத் துடிப்பின் எண்ணிக்கையிலும் அமைந்ததாகும். இப்படி சிதம்பரத்தில் ரகசியம் பல. வாழ்வில் ஒருமுறையேனும் இத்தலத்தைத் தரிசிக்கவேண்டும்.“தில்லை தரிசிக்க நிச்சயம் முக்திதான்”.

No comments:

Post a Comment