ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்யவும், 2 இணை இயக்குநர் பணியிடங்களை உருவாக்கிக் கொள்ளவும் அனுமதித்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு
8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்யவும், 2 இணை இயக்குநர் பணியிடங்களை உருவாக்கிக் கொள்ளவும் அனுமதித்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகத்தின் மூலம் வரும் நான் முதல்வன் திட்டம், உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி, நம்ம ஊரு நம்ம பள்ளி, மாதிரிப் பள்ளிகள், எண்ணும் எழுத்தும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் இருந்து மாற்றப்பட்ட 2 இணை இயக்குநர் பணியிடங்கள் அவசியமாக தேவைப்படுகிறது. அதற்கு அனுமதி வழங்குமாறு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் கோரிக்கை விடுத்தார்.
இதுதவிர கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்வதற்கு பள்ளிக்கல்வி இயக்குநர் பரிந்துரை வழங்கியிருந்தார். இந்த கருத்துருக்களை அரசு நன்கு ஆய்வு செய்து, 8 ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்ய ஒப்புதல் அளிக்கிறது. அதனுடன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் மாநில அளவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட 2 இணை இயக்குநர் பணியிடங்களுக்கு அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது, என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment