கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு ‘தமிழ் புதல்வன்’ திட்டம் மூலம் மாதம் ரூ1000, ஆகஸ்ட் மாதம் முதல் கிடைக்கும்
கல்லூரி செல்லும் பெண்களுக்கு மாதம் ரூ1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் போல கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு ‘தமிழ் புதல்வன்’ திட்டம் மூலம் மாதம் ரூ1000, ஆகஸ்ட் மாதம் முதல் கிடைக்கும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னையில் நேற்று நடந்த ஐம்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று பள்ளி கல்வித்துறை சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது.
இதில், 2023-24ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ், தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், 67வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, அரசு பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது, அவர் பேசியதாவது: பள்ளி கல்வித்துறை நிகழ்ச்சிகளில் பொதுவாக நான் ஆர்வத்தோடு கலந்துகொள்வது வழக்கம். ஆனால் என்னைவிட அதிகமாக கலந்துகொள்கிற ஒருத்தர் இருக்கிறார். இந்த மேடையில் இருக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி. அதனால் இந்தமுறை நான் முன்னாடியே ரிசர்வ் பண்ணிட்டேன். தேர்தல் முடிவு வந்ததும், அமைச்சர் அன்பில் மகேஷுசுக்கு போன் செய்து, தேர்தல் நடத்தை விதிகள் முடிந்ததும் நான் கலந்துகொள்கிற முதல் அரசு விழாவாக, பாராட்டு விழாவாக இந்த நிகழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். அதற்கு ஏற்பாடு பண்ணுங்க என்று சொல்லி இருந்தேன். அதன்படி இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு பண்ணியிருக்கிற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும், அவருக்கு துணை நின்ற அதிகாரிகள், அலுவலர்கள், ஆசிரியர்களையும் பாராட்டுகிறேன்.
விழாவில் கலந்துகொள்வது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. பள்ளி மாணவர்களை பார்க்கிறபோது எனக்கும் இளமை திரும்பி எனர்ஜி அடைகிறது. பொதுவாக அரசியல் மேடைகளில்தான் ஐம்பெரும், முப்பெரும் விழாக்கள் இருக்கும். ஆனால் இப்போது பள்ளி கல்வித்துறை சார்பில் ஐம்பெரும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
மாணவர்களுக்காக நம்ம அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பற்றி கேட்டபோது, பள்ளி கல்வி துறையில் ஒரு பெரிய பட்டியலே வந்தது. அதில் மிக முக்கியமான திட்டங்களாக 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் காலை உணவு திட்டம். 27 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் இல்லம் தேடி கல்வி. 28 லட்சம் மாணவர்கள் திறன் பயிற்சி வழங்கி வரும் நான் முதல்வன். 23 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் எண்ணும் எழுத்தும் திட்டம்.
30 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வாசிப்பு இயக்கம். 23 லட்சம் பெற்றோர்களை உள்ளடக்கிய பள்ளி மேலாண்மை குழுக்கள். அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்காக நம்ம ஊரு பள்ளி திட்டம். நடமாடும் அறிவியல் ஆய்வகம், மாணவர்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்லும் கல்வி சுற்றுலா திட்டம் என நிறைய இருக்கிறது. அதில், மாணவிகளுக்கு மாதம் மாதம் ரூ.1000 வழங்கும் இன்னொரு முக்கியமான திட்டம். அதுதான் புதுமைப்பெண் திட்டம். எனக்கு மாணவிகளிடம் இருந்து வந்த கடிதங்களாக இருந்தாலும், இந்த தேர்தல் பிரசாரத்தின்போது சந்தித்த மாணவிகளாக இருந்தாலும் பலரும் இந்த புதுமைப்பெண் திட்டத்தை பாராட்டி பேசினார்கள்.
மாணவிகள் தங்களின் சின்ன சின்ன தேவைகளுக்கு யாரையும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை இல்லை என்றும், இந்த திட்டத்தில் மாதம் கிடைக்கும் ரூ.1000 தங்களுக்கு உதவியாக இருக்கிறதாக மிகுந்த மகிழ்ச்சியோடு சொன்னார்கள். அந்த மகிழ்ச்சி மாணவர்கள் முகத்திலும் ஏற்பட வேண்டும் என்பதற்காக மாதம் ரூ.1000 வழங்குகிற ‘தமிழ் புதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று சொல்லி இருந்தேன். நீங்கள் கல்லூரிக்கு போனவுடன் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அந்த ரூ.1000 வழங்கப்படும் என்று இந்த மேடையில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்ம திராவிட மாடல் ஆட்சியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கவனிப்பில் பள்ளி கல்வித்துறை ஒரு பொற்காலத்தை நோக்கி முன்னேறிக்கிட்டு இருக்கிறது என்று பெருமையோடு சொல்லலாம். பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்கே இருக்கும் நவீன வசதிகளை நம்ம ஊரில், நம்ம மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார். அதோடு நம்ம பள்ளி மாணவ, மாணவிகளை வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அதிகமாக அழைத்துச் செல்கிறார். தமிழ்நாட்டின் பள்ளி கல்வி துறையை உலக தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார். இப்படிப்பட்ட முன்னெடுப்புகளுக்கு அவருக்கு துணையாக நிற்கிறது ஆசிரியர்கள்தான். அந்த ஆசிரியர்களை பாராட்ட வேண்டியது அரசினுடைய கடமை.
10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த 1,728 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களின் சாதனையை ஊக்கப்படுத்த அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது. தலைமை ஆசிரியர்களுக்கு வழங்குகிறோம் என்றால் அது அனைத்து ஆசிரியர்களுக்கு வழங்கும் அங்கீகாரம். 100 சதவீதம் தேர்ச்சி என்று சொல்லி பாராட்டுவதன் மூலம் அந்த இலக்கை அனைவரும் அடைய வேண்டும் என்று ஊக்கப்படுத்துவதற்கு தான் இந்த விழா. அந்த வகையில் தேர்வு எழுதிய எல்லா மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும். இந்த சாதனையை அடுத்த ஆண்டு அனைத்து பள்ளிகளும் செய்ய வேண்டும்.
அடுத்ததாக, தமிழ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டுகிறேன். எந்த பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்தாலும் பாராட்டுக்கு உரியவர்கள்தான். ஆனால் நம்முடைய தாய்மொழி தமிழ். அதுவும் உயர்தனி செம்மொழி என்பதால், அதில் 100 மதிப்பெண் வாங்கியவர்கள் சிறப்பான பாராட்டுக்கு உரியவர்கள். 12ம் வகுப்பில் 35 பேரும், 10ம் வகுப்பில் 8 பேரும் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் வாங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது.
அடுத்ததாக, கடந்த ஆண்டு தேசிய பள்ளி விளையாட்டு கட்டமைப்பு நடத்தியுள்ள போட்டிகளில் கலந்துகொண்டு 95 தங்க பதக்கங்களையும், 112 வெள்ளி பதக்கங்களையும், 202 வெண்கல பதக்கங்களையும் வென்ற மாணவர்களையும் மனதார பாராட்டுகிறேன். ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறந்தபோது, நான் போட்ட சமூக வலைதள பதிவில் கூட மாணவர்களின் மனநலனுடன் உடல்நலனும் முக்கியம் என்று சொல்லியிருந்தேன். அதற்கு விளையாட்டு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த பதக்கம் பெற்றவர்கள் அடுத்து உலகளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். உதயநிதி, விளையாட்டுக்காக நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களில் இருந்து பல ஒலிம்பிக் சாம்பியன் உருவாக வேண்டும் என வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்பி தயாநிதி மாறன், எம்எல்ஏ பரந்தாமன், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் லியோனி, பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி மற்றும் உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment