MyV3Ads நிறுவனம் குறித்து பொதுமக்களுக்கு கோவை காவல்துறை ஓர் அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, May 11, 2024

MyV3Ads நிறுவனம் குறித்து பொதுமக்களுக்கு கோவை காவல்துறை ஓர் அறிவிப்பு

 MyV3Ads நிறுவனம் குறித்து பொதுமக்களுக்கு கோவை காவல்துறை ஓர் அறிவிப்பு


MyV3Ads நிறுவனம் குறித்து பொதுமக்களுக்கு கோவை காவல்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு MyV3Ads நிறுவனம் இயங்கி வருகிறது. விளம்பரம் பார்த்தால் பணம் வழங்கப்படும் என்று செய்த நூதன விளம்பரத்தால், மாநிலம் முழுவதும் இருந்து பலர் அந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.


மேலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அதில் முதலீடு செய்தனர். அந்த நிறுவனத்தின் அடுத்தடுத்து செயல்பாடுகள் குறித்து புகார் எழுந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.


இந்நிலையில் MyV3Ads நிறுவனம் குறித்து கோவை மாநகர காவல்துறையினர் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், “MyV3Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வழக்கு, பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


இந்த நிறுவனத்துக்கு ஹெர்பல் மற்றும் உணவுப் பொருள்களை சப்ளை செய்த விஜயராகவன் என்பவர் பட்டப்படிப்பு படித்ததாக போலி சான்றிதழ் வைத்து ஏமாற்றியது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்த நிறுவனத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாகவும் கோவை மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனத்தின் பெயரிலும்,அந்த நிறுவனத்தின் கிளை நிறுவனம் பெயரிலும், தனி நபர்கள் முதலீடு செய்வதாகவும், அத்தகைய முதலீட்டை வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னரும் மேற்படி நிறுவனம் சட்ட விரோதமாக வசூலிப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது.


குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள மேற்குறிப்பிட்ட MyV3Ads நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என்ற தகவல் வந்தால் அது சட்ட விரோதமானது. அது மோசடியானது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற செய்திகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


பொதுமக்கள் தங்கள் கடும் உழைப்பில் ஈட்டிய பணத்தை சேமிக்க அல்லது முதலீடு செய்ய மத்திய மாநில அரசுகள் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்.” என்று அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment