இன்று அன்னையர் தினம்:அன்னையர் தினத்தின் வரலாறும் முக்கியத்துவமும் - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, May 12, 2024

இன்று அன்னையர் தினம்:அன்னையர் தினத்தின் வரலாறும் முக்கியத்துவமும்

 இன்று அன்னையர் தினம்:அன்னையர் தினத்தின் வரலாறும் முக்கியத்துவமும்


அன்னையர் தினம் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்னையர் தினத்தின் வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


உலகெங்கும் காதலர் தினம், குழந்தைகள் தினம், தொழிலாளர் தினம் என்று எத்தனையோ தினங்கள் கொண்டாடப்படுகிறது. ஆனால் அத்தனையிலும் புனிதமானதாக கருதக்கூடிய தினம் என்றால் அது 'அன்னையர் தினம்' தான். அப்படிப்பட்ட அன்னை வழங்கும் அன்புக்கு அளவேது, விலையேது.


ஒரு சகோதரியாக, தாயாக, தோழியாக இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்துபவராக அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் முன்னோடியாக, இப்படி அனைத்துமாய் இருப்பவள் தாய். ஒரு பெண் தனது வாழ்நாளில் எத்தனையோ நிலைகளை கடந்து வந்தாலும் 'அன்னை' என்கிற பாத்திரம் தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது.


அன்னையர் தினம் தோன்றுவதற்கு 1872-ம் ஆண்டு ஆலோசனை வழங்கியர் ஜூலியா வார்டு ஹோ. இவர் ஒரு சமூக ஆர்வலர், எழுத்தாளர், கவிஞர் ஆவார். இவர் அவருடைய நாட்டில் நடந்த உள்நாட்டு போரின் நினைவாக நாட்டில் அமைதி வேண்டி, ஜூன் மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக அனுசரிக்க வேண்டும் என்றும், அன்றைய நாளில் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர் நினைத்தபடி இல்லாமல், மே மாதத்தில் தான் அன்னையர் தினமாக அறிவிக்கப்பட்டது.


அன்னையர் தின கொண்டாட்டத்திற்கு பல சுவாரஸ்யமான காரணங்கள் இருந்தாலும், அவற்றில் ஒரு காரணத்தை பார்க்கும்போது, அங்கும் ஒரு பெண்ணின் பெருமை (தாய்) இருப்பது தெரிகிறது. அன்னா ஜார்விஸ் என்ற பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தில் 'கிராப்டன்' என்ற கிராமத்தில் வாழ்ந்தவர். இவருக்கு திருமணமாகவில்லை. இவர் தான் 'அன்னையர் தினம் உருவாகுவதற்கு அன்னையாக' இருந்தவர்.


அன்னா ஜார்விஸ் சிறுவயதாய் இருக்கும் போது, இவருடைய தாய் அன்னா மாரீ ரீவ்ஸ் ஜார்விஸ், அன்னையர்களை நேசிக்க வேண்டும். அவர்கள் உயிருடன் இருந்தாலும் சரி, உயிருடன் இல்லாவிட்டாலும் சரி அவர்களை மதிக்க வேண்டும் என்று கூறினார். இவருடைய தாய் 1905-ம் ஆண்டு மறைந்தார். தன் தாய் மறைந்த பிறகு அவரை பெருமைப்படுத்தும் விதமாகவும், உணர்வுகளை வெளிக்கொண்டு வரும் விதமாகவும், அன்னா ஜார்விஸ், தனது தாய்க்கு பிடித்த பூவை ஆலயத்திற்கு கொண்டு வந்து வழிபட்டார்.


அவர் தன் தாய் கூறியது போல, அனைத்து பிள்ளைகளும் தங்களது அன்னையர்களை மதிக்க வேண்டும். போற்றி புகழ வேண்டும் என்று நினைத்து, மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக அனுசரிக்க வேண்டும் என்றும், அன்றைய நாள் விடுமுறை நாளாக கடைபிடிக்க வேண்டும் என்றும் இந்த கருத்தினை ஆதரிப்பவர்களையும் இணைத்துக்கொண்டு அதிகாரமுள்ள அமைப்புகளுக்கு கடிதம் எழுதினார்.


அதன்பின்னர், 1914-ம் ஆண்டு மே மாதம் 8-ந்தேதி அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன், வருடந்தோறும் மே மாதம் 2-ம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், விடுமுறை நாளாகவும் அறிவித்தார். இந்த நாளில் அமெரிக்கா மட்டும் அல்லாது இன்று வரை ஏராளமான நாடுகளில் 'அன்னையர் தினம்' அனுசரிக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட அன்னையர் தினம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.


நடமாடும் தெய்வங்களாக விளங்கும் அன்னையர்களை நாம் நினைப்போம், அவர்களின் அன்பைப் போற்றுவோம், அவர்களுக்கு அடிமையாக இருந்து கடமையாற்றுவோம். இந்த நாளில் காலமெல்லாம் நமக்காகவே தேய்ந்து வாழும் பாசமிகு திருவுருவத்துக்கு பரிசுகளை வழங்கி அவர்களுடன் அன்பை பகிர்ந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment