வீக்கத்துக்கு செய்ய வேண்டிய முதலுதவி
வீட்டை சுத்தம் செய்யும்போது வழுக்கி விழுந்துட்டேன், கைல அடிபட்டு நல்லா வீங்கிடுச்சி', `ரொம்ப தூரம் பஸ்ல போனேன், கால் வீங்கிடுச்சு' என்று இப்படி பல காரணங்களால் வீக்கம் ஏற்படுவதுண்டு. அதற்கான முதலுதவி குறித்து இங்கு பார்க்கலாம்.
ஐஸ்கட்டி ஒத்தடம்
கீழே விழுந்த உடன் கை, காலில் சட்டென வீக்கம் ஏற்பட்டால் அந்த இடத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த நேரத்தில் உடனடியாக ஐஸ்கட்டி கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி ஐஸ்கட்டியின் மூலம் ஒத்தடம் கொடுக்கும்போது ரத்தநாளங்கள் சுருங்கும்; இதனால் உள்ளே ரத்தக்கசிவு குறைந்து வீக்கம் குறைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.
இதுவே கீழே விழுந்து ரொம்ப பெரிய அளவில் வீக்கம் ஏற்பட்டதுடன், வீக்கம் ஏற்பட்டுள்ள இடத்தை அசைக்கவே முடியவில்லை எனில் அது எலும்பு முறிவிற்கான அறிகுறியாக இருக்கலாம்.
அந்த நேரத்தில் சிறிதும் தாமதிக்காமல், அசைவுகள் தவிர்த்து உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
எலாஸ்டிக் கிரிப் பேண்டேஜ் (Elastic grip bandage)
வெகு தூரம் பயணம் மேற்கொள்ளும்போது கால்களை தொங்கவிட்டபடியே இருப்பதால், கால்களில் ரத்த ஓட்டம் மேல்நோக்கிச் செல்லாமல், நீர் தேங்கிவிடும். இதனால் சிலருக்குக் கால் பெரிதாக வீங்கிவிடும். இதைத் தவிர்க்க, கடைகளில் கிடைக்கும் எலாஸ்டிக் கிரிப் பேண்டேஜை வாங்கிக் கால்களில் அணிந்தபடி பயணம் மேற்கொள்ளலாம்.
ஒருவேளை பயணத்தால் கால்களில் வீக்கம் ஏற்பட்டால், வீடு திரும்பிய பின் படுக்கும்போது காலை மேல்நோக்கி உயரமாகத் தூக்கி வைத்துக்கொண்டு, அல்லது ஒரு தலையணை மீது வைத்துக்கொண்டு ஓய்வெடுக்கலாம், இதனால் சிறிது சிறிதாக வீக்கம் வற்றிவிடும்.
வெகுநேரம் இல்லாமல், சில கிலோமீட்டர் தொலைவு, சில மணி நேரம் பயணம் செய்தாலே இதுபோல வீக்கம் ஏற்பட்டால், இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் பிரச்னை உள்ளதா என்பதை மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
வெந்நீர் ஒத்தடம்
தசைப்பிடிப்பு, இறுக்கம் போன்ற காரணத்தினால் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதற்கு வெண்ணீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் அந்தப் பகுதியில் உள்ள ரத்தநாளங்கள் விரிவடையும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். தொடர்ந்து வீக்கமும் குறையும்.
வீக்கத்துடன் கூடிய வலி இருந்தால், இந்த முதலுதவிகளை வீட்டில் மேற்கொண்டும் இரண்டும் குறையவில்லை என்றால் தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.''
No comments:
Post a Comment