பாலும் பழமும் சேர்ந்து சாப்பிடலாமா? எந்தெந்த உணவுகளுக்கு முன்னும் பின்னும் பால் பொருட்களை எடுத்துக் கொள்ளக் கூடாது?
"பழங்களையும் பாலையும் சேர்த்துப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், பால் மற்றும் பழம் இரண்டுமே செரிமானமாக அதிக நேரம் எடுக்கும். இதுவே, இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துப் பயன்படுத்தும்போது, செரிமானமாகப் பல மணி நேரமாகும். தவிர, அடுத்த வேளைக்கான பசி உணர்வு தாமதமாகும். எனவே, பாலையும் பழங்களையும் தனித்தனியே பயன்படுத்துவதுதான் சரியானது.
'காலங்காலமா சாந்தி முகூர்த்தத்துல பாலும் பழமும் சேர்த்துக் கொடுக்கிறாங்களே...'
'மில்க் ஷேக் நல்லதுனு நினைச்சு, அதை அடிக்கடி குடிக்கிறேனே...' என்பவர்கள் பலர்.
காரண காரியங்கள் தெரியாமல் நாம் கடைப்பிடிக்கும் உணவுப் பழக்கங்களால் வரக்கூடிய குழப்பங்கள்தான் இவை.
முந்தைய காலத்தில், திருமணத்தின்போது ஏராளமான சடங்குகள் நடக்கும். இதனால், அரை நாள் முதல் அந்த நாள் முழுக்கவே மணமக்கள் சரிவரச் சாப்பிடாமல் இருப்பார்கள். இதனால், திருமணத்துக்குப் பிந்தைய சாந்தி முகூர்த்தத்தில், பாலும் பழமும் சேர்த்துக் கொடுப்பார்கள். இதனால், பசி உணர்வும், சோர்வும் நீங்கி, நீண்ட நேரத்துக்குப் பசி எடுக்காது. இந்த நடைமுறையே இன்றளவும் தொடர்கிறது. அரிதாகச் செய்யும் பழக்கம் என்பதால், சாந்தி முகூர்த்தத்தில் இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்கலாம்.
* சாப்பிட்ட பின்னர், டீ அல்லது காபி குடிப்பதைச் சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள். இதனால், உணவு செரிமானமாவது தாமதமாகும். மேலும், அடுத்த வேளைக்கான பசி உணர்வும் தள்ளிப்போகும். எனவே, உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரும் பின்னரும் பால் உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
* சிக்கன், மட்டன், மீன் போன்ற அசைவ உணவுகளை உட்கொள்ளும்போதும், உட்கொள்ளும் முன்பும், பின்பும்... பால், தயிர், நெய் போன்ற பால் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். மீன், அதிக கொழுப்புச்சத்துள்ள உணவு. பால் உணவுகளிலும் கொழுப்புச்சத்து அதிகமிருப்பதால், இவை இரண்டையும் சேர்த்துச் சாப்பிடுவது நல்லதல்ல. குறிப்பாக, பிரியாணியுடன் ரைத்தா (வெங்காய பச்சடி) பயன்படுத்தும்போது, ரைத்தாவில் நான்குக்கு மூன்று மடங்கு வெங்காயமும், ஒரு பங்கு மட்டுமே தயிரும் பயன்படுத்த வேண்டும்.
* சூப்பில் பால் சேர்க்கக் கூடாது. பாலில் புளிப்புச்சுவை கொண்ட உணவுகளைச் சேர்த்துச் சரியான முறையில் சமைக்காத பட்சத்தில், அவை கெட்டுப்போகும். க்ரீம் சூப் வகைகளில் பால் மற்றும் வெண்ணெய் அதிகம் சேர்க்கப்படுவதால், அவை செரிமானத்தைத் தாமதப்படுத்தும். எனவே, க்ளியர் சூப், தக்காளி சூப், வெஜிடபுள் சூப் போன்ற வெண்ணெய், பால் சேர்க்கப்படாத சூப் வகைகளே சிறந்தவை.
* இரவில் அசைவம் மற்றும் எண்ணெய்யில் பொரித்த உணவுகள் சாப்பிடும்பட்சத்தில், தயிர் எடுத்துக் கொள்ளக் கூடாது.
* பரோட்டாவையும் தயிரையும் ஒரே நேரத்தில் சாப்பிடக் கூடாது.
No comments:
Post a Comment