ஆசிரியர் பணி இடமாறுதல்: ஆசிரியர்களுக்கான நிபந்தனை நீக்கம்! விண்ணப்ப தேதியை நீட்டித்த அரசு - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, May 18, 2024

ஆசிரியர் பணி இடமாறுதல்: ஆசிரியர்களுக்கான நிபந்தனை நீக்கம்! விண்ணப்ப தேதியை நீட்டித்த அரசு

 ஆசிரியர் பணி இடமாறுதல்: ஆசிரியர்களுக்கான நிபந்தனை நீக்கம்! விண்ணப்ப தேதியை நீட்டித்த அரசு


தமிழகத்தில் தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களும் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான விண்ணப்ப தேதி மே 25 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதோடு கலந்தாய்வில் விண்ணப்பிக்க தற்போது வேலை செய்யும் பள்ளியில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை பள்ளி கல்வித்துறை தளர்த்தி உள்ளது.


தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் இடமாறுதல் தொடர்பான பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. பணி இடமாறுதலை விரும்பும் ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்து இதில் பங்கேற்கலாம்.


அந்த வகையில் தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளி கல்வித்துறையில் பணி புரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பொது மாறுதலில் பங்கேற்க ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.


இந்நிலையில் தான் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதோடு, முக்கிய நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான 2024-25ம் கல்வியாண்டிற்கு பொதுமாறுதல் கலந்தாய்வு மே மாதம் தொடங்கி நடத்திட அரசளவில் ஆணை பெறப்பட்டது. அதோடு கலந்தாய்வுக்கான உத்தேச காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.


மேற்படி உத்தேச காலஅட்டவணையில் பொதுமாறுதல் கலந்தாய்வில் விருப்பமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்க 13.05.2024 முதல் 17.05.2024 முடிய கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS Website) பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது 2024-2025ம் கல்வியாண்டில் நடைபெறவுள்ள பொதுமாறுதல் கலந்தாய்விற்கு முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஆர்வத்துடன் ஆசிரியர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.


அதேபோல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்காக தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றம் இடைநிலை ஆசிரியர்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளதை காண முடிகிறது. இடையில் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும்பாது கல்வி தகவல் மேலாண்மை முகமை இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறும் ஏற்பட்டிருந்தது.


இதனால் பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து மாறுதலுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்குமாறு வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅளவை கூடுதலாக 7 நாட்களுக்கு நீட்டித்து 25.05.2024 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.


மேலும் கலந்தாய்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கலாகிறது. மேற்காண் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரிந்து வரும் பள்ளியில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையினையை கடைப்பிடிக்க தேவையில்லை'' என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment