அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, May 21, 2024

அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

 அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு


தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், பி.எஸ்.சி., பி.ஏ., பி.காம் பட்டப்படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன.


இதற்கான, 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 6-ந்தேதி தொடங்கியது. பிளஸ்-2 நிறைவு செய்த மாணவர்கள், உயர்கல்வி சேர ஆர்வத்துடன் விண்ணப்பித்தார்கள். ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்களின் வசதிக்காக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.


இதற்கிடையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று முன்தினம் நிறைவடைவதாக இருந்தது. இதன்காரணமாக, மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தார்கள். சென்னையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாத மாணவ, மாணவிகள் நேற்று நேரில் சென்று பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்தார்கள்.


உதவி மையங்களில் மாணவர்களின் 'கட்ஆப்' மதிப்பெண்களை கேட்டறிந்த பேராசிரியர்கள், அவர்களுக்கான வாய்ப்பு குறித்து ஆலோசனைகளை வழங்கினர். விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். 

இந்தநிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாணவர்கள் வருகிற 24-ந்தேதி வரை https://www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பதிவு நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் தரவரிசை பட்டியல் வருகிற 27-ந்தேதி அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு, வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் என சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.


பொதுப்பிரிவு கலந்தாய்வு அடுத்த மாதம் (ஜூன்)10-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. 2-ம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு அடுத்த மாதம் (ஜூன்) 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற ஜூலை 3-ந்தேதி தொடங்கும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. கலந்தாய்வு தொடர்பான மேலும் விவரங்களை, https://www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம்.

No comments:

Post a Comment