பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கவுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்கள்
பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கவுள்ள ஆசிரியா்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்களை பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
“2024-2025-ஆம் கல்வியாண்டுக்கு அனைத்து வகை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தக் கலந்தாய்வு, கல்வி தகவல் மேலாண்மை முகமை (எமிஸ்) இணையதளம் மூலமாக மேற்கொள்ளவும், அதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது.
ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கோரி விண்ணப்பிக்க தற்போது பணிபுரியும் பள்ளியில் வரும் ஜூன் 1-இல் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் மாறுதலுக்கான விண்ணப்பத்தை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
விருப்ப மாறுதல், மனமொத்த மாறுதல், நேரடி நியமனம், பதவி உயா்வு, நிா்வாக மாறுதல், அலகு மாறுதல், பணிநிரவல் இவற்றில் எந்த வகை என்பதை உரிய ஆதாரத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாறுதல் கேட்கும் விண்ணப்பங்களை மே 13 முதல் 17-ஆம் தேதி மாலை 6 மணி வரை எமிஸ் தளத்தில் பதிவேற்றலாம். தொடா்ந்து, காலிப்பணியிட விவரங்கள் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டவுடன் பின்னா் சோ்க்கை, நீக்கம், திருத்தங்கள் போன்றவைகளுக்கு இடமளிக்காமல் செயல்பட வேண்டும்.
கணவன், மனைவி முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியா்கள் அவரவா்கள் பணிபுரியும் அலுவலகம், பள்ளி அரசு மற்றும் அரசுத்துறையின் நிா்வாகத்தின் கீழ் உள்ளதா என்ற விவரத்தையும், அதற்கான உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்றினையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். மனமொத்த மாறுதல்கள் மற்றும் அலகுவிட்டு அலகு மாறுதல் , துறை மாறுதல்கள் சாா்பான விண்ணப்பங்கள், பொது மாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னா் பரிசீலிக்கப்பட வேண்டும்.
உள் மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் ஆகிய இரு கலந்தாய்வுக்கும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் உள்மாவட்டத்துக்குள் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்றவா்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.
தவறுகள் கண்டறியப்பட்டால்...: மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் வருகை புரியாமலோ, தாமதமாக வருகை புரிந்தாலோ கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது. மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியா்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னா் கண்டறியப்பட்டால் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment