இன்று (26.05.2024)சங்கடஹர சதுர்த்தி: சதுர்த்தி திதி நேரம், வழிபடும் முறை மற்றும் பலன்கள்
நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கும் வல்லமை பெற்ற விநாயகர் பெருமானை சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று நாம் வழிபடும் பொழுது அனைத்து விதமான நன்மைகளையும் நம்மால் பெற முடியும் அப்படிப்பட்ட சங்கடஹர சதுர்த்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை மே மாதம் 26 ஆம் தேதி) .
சதுர்த்தி திதி இன்று (மே 26 ஆம் தேதி)மாலை 06:06 மணிக்கு தொடங்கி நாளை (மே 27 ஆம் தேதி) மாலை 04:54 மணிக்கு முடிவடைகிறது.
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
விஸ்வரூபமாக காட்சியளித்தாலும் குழந்தை போல் பழகக் கூடியவர் தான் விநாயகப் பெருமான். இவரை நம்மால் எந்த அளவுக்கு எளிமையாக வழிபட முடியுமோ அந்த அளவுக்கு எளிமையாக வழிபட்டாலும் அந்த வழிபாட்டை மனம் உவந்து ஏற்றுக் கொள்வார். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை விநாயகப் பெருமானை வழிபடாத நபர்களையே இருக்க முடியாது. எந்த ஒரு செயலை தொடங்குவதாக இருந்தாலும் அதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டு தான் பலரும் ஆரம்பிப்பார்கள். அப்படி ஆரம்பிக்கும் செயலானது எந்தவித தடைகளும் இல்லாமல் வெற்றிகரமாகவே நடைபெறும்.
இந்த சங்கரஹர சதுர்த்தி நாளன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்து விட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமானின் படத்திற்கு முன்பாகவோ அல்லது சிலைக்கு முன்பாகவோ ஒரு நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்து உங்களுடைய வேண்டுதலை முன்வைத்து விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும்.
இன்றைய தினம் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.
பகலில் உறங்க கூடாது. மேலும் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது மிகவும் நல்லது. திரவ உணவுகளாக உட்கொள்வது நல்லது. உடல் நலம் சரியில்லாதவர்கள் ஒரு வேளை மட்டும் உணவு உண்டு விரதம் இருக்கலாம். மாலையில் ஆறு மணிக்கு மேல் விநாயகப் பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அருகம்புல்லை வாங்கி வந்து மாலையாக தொடுத்து விநாயகப் பெருமானுக்கு சாற்ற வேண்டும்.
வெள்ளெருக்கு பூ கிடைத்தால் அதையும் வைக்கலாம். பிறகு அவருக்கு நெய்வேத்தியமாக கொழுக்கட்டை படைக்க வேண்டும். கொழுக்கட்டை செய்ய இயலாதவர்கள் சுத்தமான தேனை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு விநாயகரின் இந்த பாடலை அவருக்கு முன்பாக அமர்ந்து 21 முறை மனதார கூற வேண்டும்.
பாடல்
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாசக பாத நமஸ்தே.
கடைசியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். நெய்வேத்தியமாக வைத்த கொழுக்கட்டையை வீட்டில் இருக்கும் நபர்களுக்கு பிரசாதமாக தர வேண்டும். இப்படி சங்கடஹர சதுர்த்தி அன்று வழிபாடு செய்பவர்கள் எந்த வேண்டுதலை முன்வைத்து வழிபாடு செய்கிறார்களோ அந்த வேண்டுதல் விரைவிலேயே நடைபெறும்.
“ஓம்” எனும் பிரணவ மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த மந்திரத்தை தொடர்ந்து துதிப்பவர்களுக்கு தீமைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் ஏற்படுவது பிரபஞ்ச விதியாகும். இந்த ஓம்கார மந்திரத்தின் உருவம் கொண்டவர் விநாயக பெருமான் ஆவார். அவரை துதிப்பவர்களுக்கு நன்மைகள் மட்டுமே ஏற்படும். வணங்குபவர்களுக்கு வளங்களை தரும் விநாயக பெருமானை வணங்கும் ஒரு சிறப்புக்குரிய நாள் தான் “சங்கடஹர சதுர்த்தி”. அந்நாளில் நாம் “சங்கடஹர சதுர்த்தி விரதம்” எப்படி அனுஷ்டிப்பது குறித்தும், அதனால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வருவது தான் சங்கடஹர சதுர்த்தி தினமாகும். ஆவணி மாதத்தில் வருகிற விநாயக சதுர்த்தி தினத்தில் சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்வதை தொடங்க வேண்டும். இதிலிருந்து மாதந்தோறும் வருகிற சதுர்த்தி நாள்களில் சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து 11 சங்கடஹர சதுர்த்தி தின விரதம் அனுஷ்டித்து சதுர்த்தி விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, அருகிலுள்ள ஆலயத்துக்குச் சென்று, அங்கிருக்கும் பிள்ளையார் சந்நிதிக்கு சென்று, அச்சந்நிதியை 11 முறை வலம் வந்து வழிபட வேண்டும். பின்பு விநாயகருக்கு அறுகம்புல் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து வழிபட்ட பின்பு நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டும், தோப்புக்கரணம் போட்டு விநாயகரை வணங்க வேண்டும்.
வீட்டுக்கு வந்ததும், ஆழாக்குப் பச்சரிசியை ஊறவைத்து, அத்துடன் சிறிது வெல்லத்தூளும் ஒரு வாழைப்பழமும் சேர்த்துப் பிசைந்து, உங்கள் வீட்டில் இருக்கும் பசுமாட்டிற்கோ அல்லது வெளியில் திரியும் ஏதேனும் ஒரு பசுமாட்டிற்கோ உணவாக கொடுக்க வேண்டும். ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி விரத தினத்தன்றும் பசுமாட்டிற்கு உணவு கொடுப்பதால் விரதத்திற்கு பலன் அதிகரிக்கும். பின்பு வீட்டிலேயே விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை, இனிப்பு, சித்திரான்னங்கள், பால், தேன், கொய்யா, வாழை, நாவல், சுண்டல் என்று பலவிதமான உணவு பொருட்களை விநாயகருக்கு நைவேத்தியம் வைத்து, விநாயகருக்குப் பிடித்த வன்னி இலைகளால் விநாயகரை அர்ச்சித்து, விநாயகருக்குரிய மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் கூறி வழிபட வேண்டும்.
இந்த சதுர்த்தி விரத தினத்தன்று உணவேதும் அருந்தாமல் இருப்பது சிறப்பு. அது முடியாவிட்டால் பால், பழங்கள் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயிலில் நடக்கும் சங்கடஹர பூஜையின் போது, விநாயகரின் அபிஷேகத்திற்கு தூய்மையான பசும் பாலை வழங்க வேண்டும். பின்பு விநாயகருக்கு நடக்கும் அபிஷேகங்களையும், பூஜையையும் கண்குளிர கண்டு வணங்க வேண்டும்.வீடு திரும்பியதும் பூஜையறையில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலை, படத்தை வணங்கி, அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்தியங்கள் பிரசாதமாக எடுத்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து நீங்களும் சாப்பிட்டு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை முடிக்க வேண்டும். ஓவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு எக்காரியத்திலும் தடை, தாமதங்கள் இல்லாமல் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் மிகுந்த லாபங்கள் கிடைக்கும். குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறப்பார்கள். குடும்பத்தின் பொருளாதார நிலை சிறிது சிறிதாக உயரும். வீட்டில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.
No comments:
Post a Comment