மிகவும் பயனுள்ள 23 கிச்சன் டிப்ஸ்
* ரவையை நெய் விட்டு சிவக்க வறுத்து காய்ச்சிய பாலில் ஊறவைத்து பின் சர்க்கரைப்பாகு ஊற்றி கிளறி கேசரி செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
* சர்க்கரைப் பொங்கல் சூடாக இருக்கும் பொழுது அரை கிண்ணம் தேங்காய்ப் பால் ஊற்றி கிளறி இறக்கினால் சர்க்கரை பொங்கல் சுவையாக இருக்கும்.
* தேங்காய் துருவலோடு சிறிது மிளகு, பேரீச்சை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து தயிருடன் சேர்த்தால் சுவையான தேங்காய் பச்சடி தயார்.
* வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பக்கோடா செய்தால் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
* சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.
* தேங்காய்த் துருவல் மீதியானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* சப்பாத்தி மாவு பிசையும் போது அதில் கொஞ்சம் மக்காச்சோள மாவு சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.
* முட்டையை வேக வைக்கும் பொழுது சில துளிகள் கடலை எண்ணெய், கல் உப்பு சேர்த்தால் எளிதில் வேகும்.
* பால் பாயசம் செய்யும்போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.
* வெண்டைக்காயை எண்ணெயில் வதக்கி அதன் பிறகு குழம்பில் சேர்க்க வேண்டும். இதனால், அதில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி குழம்பு வழுவழுப்பாக இருக்காது.
* கடுகை வாணலியில் வறுத்து வைத்துக்கொண்டால் தாளிக்கும்போது வெடித்து, சிதறாமல் இருக்கும்.
* இட்லி அரிசிக்குப் பதில், ராகி (கேழ்வரகு), கம்பு, சோளம், உளுந்தம்பருப்பு சேர்த்து அரைத்து இட்லி செய்யலாம். உடம்புக்கு நல்லது.
* அவல் உப்புமா செய்யும்போது மலர வேக வைத்த பாசிப்பருப்பு சிறிது சேர்த் தால் சுவை கூடும்.
* இட்லி மாவுக்கு உளுந்து போதாமல் இருந்தால், பச்சை அப்பளங்களைத் தண்ணீரில் நனைத்து, மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவுடன் கலந்து இட்லி ஊற்றினால் இட்லி பூப்போல மிருதுவாக இருக்கும்.
* புடலங்காயை நறுக்கியவுடன் சிறிது உப்பு சேர்த்துப் பிசைந்து பத்து நிமிடம் கழித்து ஒட்டப்பிழிந்து கூட்டு செய்தால் புடலங்காய் கூட்டு நீர்க்காமல் இருக்கும்.
* அடை மாவுடன் தக்காளி சேர்த்து அரைத்து, பின்பு துருவிய கேரட் அல்லது பீட்ரூட் போட்டு ஒரு சுற்று சுற்றி இறக்கி மாவைக் கரைத்து அடை வார்த்தெடுக்க ருசி மிகுதியாக இருக்கும்.
* சிறு துண்டுகளாக்கிய பனீரை தோசை தவா அல்லது ஃப்ரைபேனில் போட்டு இரண்டு பக்கமும் சிவக்கும்படி ஃப்ரை செய்து பச்சை பட்டாணி குருமாவில் போட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
* வினிகரில் கலந்த தண்ணீரில் ஒரு மெல்லிய துணியை நனைத்துப் பிழிந்து அதில் பனீரைச்சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் குறைந்தது ஐந்து நாட்கள் வரை கெடாது.
* கிரேவியில் பனீரை போடும்போது உடையாமல் இருக்க பனீர் செய்ய வினிகருக்கு பதில் தயிர் சேர்க்கலாம்.
* தேங்காய் சட்னி மீந்துவிட்டால் புளித்த மோரில் கலந்து கொதிக்க வைத்து தாளிக்கவும். Instant மோர்க்குழம்பு தயார்.
* ஃபில்டரில் காபி போடும் முன் ஒரு மெல்லிய துணியை ஃபில்டரின் மேல் போட்டு அதன்பின் காபி தூள் போட்டு நீர் ஊற்றினால் அதில் உள்ள துவாரங்கள் அடைத்துக்கொள்ளாமல் டிக்காஷன் திக்காக இறங்கும்.
* வெண்ணெய் காய்ச்சியதும் உடனடியாக அதை குளிர்ந்த பாத்திரத்தில் கொட்டி வைத்தால் மணல் போல உறையும்.
* சாம்பார், கூட்டு போன்றவற்றிற்கு தேங்காய் இல்லை என்றால் சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஒன்றை தோல் சீவி அரைத்து சேர்க்கலாம். தேங்காயை அரைத்து விட்டது போலவும் இருக்கும். கொழுப்புச்சத்தும் குறையும்.
No comments:
Post a Comment