வைகாசி விசாகம் 2024 : முருகப் பெருமானை வழிபட உகந்த நேரம், பூஜை செய்யும் முறைகள் மற்றும் படிக்க வேண்டிய மந்திரம்
வைகாசி விசாகம், முருகப் பெருமான் அவதரித்த திருநாள் என்பதால் அந்த நாளில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் முருகப் பெருமானுக்குரிய கந்தசஷ்டி கவசம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி உள்ளிட்ட பாடல்களை பாடுவதால் முருகப் பெருமானின் அருள் முழுவதுமாக கிடைக்கும். வைகாசி விசாகம் விரதம் இருந்து வழிபடும் முறை, பூஜை செய்யும் முறைகள், படிக்க வேண்டிய மந்திரம், நைவேத்தியம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.
முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான நாட்களில் ஒன்று வைகாசி விசாகம். இந்த நாளில் தான் முருகப் பெருமான் அவதாரம் எடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன. மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் அவற்றுள் கிருத்திகை மற்றும் விசாகம் நட்சத்திரங்கள் முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விரத, வழிபாட்டு நாட்களாக சொல்லப்படுகிறது.
சிவ பெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றி, ஆறு தாமரை மலர்களில் தவழ்ந்த 6 குழந்தைகளை வளர்த்தெடுத்த கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் விதமாக சிவ பெருமான் அளித்த வரத்தால் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்குரிய விரத நாளானது. அதே போல் முருகப் பெருமான், விசாக நட்சத்திரத்தில் அவதரித்ததால் விசாக நட்சத்திரமும் அவருக்குரியதாயிற்று. அது மட்டுமல்ல விசாகம் நட்சத்திரம் ஞானத்திற்குரிய நட்சத்திரமாகும். அதனாலேயே விசாக நட்சத்திரத்தில் தோன்றி, குழந்தை பருவத்திலேயே தந்தைக்கே வேதத்தின் பொருள் உரைத்தவன் என்பதாலேயே முருகனை ஞானபண்டிதன் என்றும், தகப்பன் சுவாமி என்றும் அழைக்கிறோம்.
வைகாசி மாதத்தில் வரும் பெளர்ணமியும், விசாகம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளை வைகாசி விசாகமாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு வைகாசி விசாகம் மே 22ம் புதன்கிழமை வருகிறது. மே 22ம் காலை 08.18 மணி துவங்கி, மே 23ம் தேதி காலை 09.43 வரை விசாகம் நட்சத்திரம் உள்ளது. இதனால் வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள் மே 22ம் தேதி நாள் முழுவதும் விசாகம் நட்சத்திரம் உள்ளதால் அன்றைய தினம் விரதம், வழிபாடு, பூஜைகளை மேற்கொள்ளலாம்.
வைகாசி விசாகத்தன்று அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷக பூஜைகள், அபிஷேகங்கள், காவடி எடுத்து வந்து வேண்டுதல் நிறைவேற்றுதல் ஆகியவற்றை பக்தர்கள் செய்வதுண்டு. வீட்டிலேயே விரதம் இருப்பவர்கள் கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் விரதம் இருப்பதை போல் விரதம் இருக்கலாம். அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம். முருகனுக்கு அபிஷேகம் செய்வதற்கு பால் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.
வீட்டில் மாலை 6 மணிக்கு பிறகு விளக்கேற்றி வைத்து, முருகப் பெருமானுக்கு விருப்பமான கந்தரப்பம் எனப்படும் இனிப்பு அப்பத்தை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். முடியாதவர்கள் தேன், திவை மாவு அல்லது தேன் கலந்த பால் வைத்து முருகனை வழிபடலாம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் தொல்லை தரும் பிரச்சனைகள் விலகி விடும். முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் கந்தப் பெருமானை இந்த நாளில் மனமுருகி வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகள் நடைபெறும்.
முருகப்பெருமானுக்குரிய பாடல்களான கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், கந்தர் அனுபூதி, வேல்மாறல், முருகனின் 108 போற்றிகள் என்று கூறவேண்டும். இவ்வாறு கூறி முடித்த பிறகு வைகாசி விசாகத்தன்று கூற வேண்டிய மந்திரமாக சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 18 முறை மனதார கூற வேண்டும். இப்படி கூறிவிட்டு நாம் என்ன வேண்டுதல் வைக்கிறோமோ அந்த வேண்டுதலை கண்டிப்பாக முறையில் முருகப்பெருமான் நிறைவேற்றுவார்.
மந்திரம்
விஸாகம் ஸர்வ பூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா ஸுதம்!
ஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்.
பொருள்:
விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவரும், உலகில் உள்ள அனைவருக்கும் தெய்வமாக திகழ்பவரும், கிருத்திகா தேவிகளால் வளர்க்கப்பட்டவரும், எப்பொழுதும் குழந்தை வடிவமானவரும், ஜடை தரித்தவரும், பரமேஸ்வரரின் குமாரருமான ஸ்ரீ கந்தனை வணங்குகிறேன்.
இப்படி வழிபாட்டை செய்து விட்டு நெய்வேத்தியமாக வைத்த பிரசாதத்தை உண்டு தங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறுவதோடு, தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிடைத்து மேன்மையான வாழ்க்கையை முருகப்பெருமான் அருள்வார்.
No comments:
Post a Comment