18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள், 18 பேரின் தேர்வு பட்டியலை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மாவட்ட கல்வி அதிகாரி பதவிக்கான 18 காலியிடங்களை நிரப்ப, 2018 டிசம்பரில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது.
மொத்தம் 18 காலிஇடங்களில், 14 இடங்களுக்கு பொதுவாகவும், நான்கு இடங்களுக்கு அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியிலும் இருந்து தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட்டது.
தரவரிசை பட்டியல்
இன சுழற்சி முறைப்படி காலியிடங்கள் பிரித்து ஒதுக்கப்பட்டன. தேர்வுகள் முடிந்து, 2020 டிசம்பரில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது; நியமனங்களும் நடந்து முடிந்தன.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள், நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தன.
மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகி, “அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்ட நான்கு இடங்களை, பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் நியமித்துள்ளனர். ''மனுதாரர்களுக்கு தகுதி இருந்தும், அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் அவர்களுக்கு நியமனம் கிடைக்கவில்லை. இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல், காலியிடங்களை நிரப்பி உள்ளனர்,” என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் பிளீடர் பி.குருநாதன், “தேர்வு நடவடிக்கை களில் மனுதாரர்கள் பங்கேற்றுள்ளனர். தேர்வு விதிமுறைகளை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
''தாங்கள் தேர்வு பெறவில்லை என்பதற்காக, இந்த தேர்வு முறையை அவர்கள் எதிர்க்க முடியாது. இடஒதுக்கீட்டு முறை கண்டிப்புடன் பின்பற்றப்பட்டுள்ளது. இதில், எந்த குறைபாடும் இல்லை,” என்றார்.
மனுக்களை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா பிறப்பித்த உத்தரவு:
பிற்படுத்தப்பட்ட பிரிவில், பொதுப்பிரிவுக்கும், பெண்கள் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை கொண்டு நிரப்பியதால், பிற்படுத்தப்பட்ட பிரிவுக்காக நிர்ணயிக்கப்பட்ட, 'கட் ஆப்' மதிப்பெண்களை விட அதிகமாக பெற்றிருந்தும், தாங்கள் நியமனம் பெறவில்லை என, மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஒழுங்கற்ற முறை
குழப்பமான முறையில் இந்த தேர்வு நடந்திருப்பது தெரிகிறது. பிற்படுத்தப்பட்ட பிரிவில், ஆசிரியர்களுக்கான நான்கு இடங்களையும் நிரப்பி உள்ளனர்.
இதனால், பிற்படுத்தப்பட்ட பிரிவில் அதிக மதிப்பெண்களை பெற்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், தேர்வு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
வழக்கு தொடுத்தவர்களில் நிர்மல்குமார் 6வது வரிசையிலும், சூசை மரியநாதன் 8வது வரிசையிலும், அமுதா 13வது வரிசையிலும் உள்ளனர். அதிக மதிப்பெண்களை பெற்றிருந்தும் இவர்கள் தேர்வாகவில்லை. தேர்வு முறையை புரிந்து கொண்டு, முறையான தேர்வு நடத்தவில்லை. இடஒதுக்கீட்டு முறையையும், பிரிவு வாரியான ஒதுக்கீட்டையையும் பின்பற்றாமல், ஒழுங்கற்ற முறையில் இந்த தேர்வு நடந்துள்ளது.எனவே, மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் ரத்து செய்யப்படுகிறது.
காலியிடங்களின் அடிப்படையில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி, பொதுப் பிரிவினருக்கு எனவும், ஆசிரியர் பிரிவினருக்கு எனவும் தனித்தனியே தேர்வு பட்டியலை வெளியிடும் வகையில், மீண்டும் தேர்வு பட்டியலை தயாரிக்கும்படி, அரசு, தேர்வாணையத்துக்கு உத்தரவிடப்படுகிறது.நான்கு வாரங்களில் இந்தப் பணிகளை முடித்து, திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை வெளியிட வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment