வேர்க்கடலையை எப்படி சாப்பிட வேண்டும்? ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?
அந்தந்த சீசனில் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள், பருப்புக்களை சாப்பிடுவதால் அந்தப் பருவத்தின் சீதோஷ்ணத்தை தாக்குப் பிடிக்கும் ஆற்றலை அவை நமக்கு அளிக்கும். அவ்வகையில் இந்த சீசனில் கிடைக்கும் வேர்க்கடலையை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. கொழுப்பு, புரதம், பாஸ்பரஸ், தையாமின், நையாசின் ஆகிய ஐந்து சத்துக்கள் கொண்ட அற்புத மருத்துவக் குணத்துடன் விளங்குகிறது வேர்க்கடலை. இதில் உள்ள எண்ணெய்ச் சத்து, எளிதில் ஜீரணமாகக்கூடியது. சிறந்த மலமிளக்கியாகவும் சருமத்துக்குப் பளபளப்பூட்டக்கூடியதாகவும் விளங்குகிறது.
ஐந்து அல்லது ஆறு மணி நேரம் ஊற வைக்கப்பட்ட வேர்க்கடலை ஒரு முழுமையான உணவு ஆகும். நீரை வடிகட்டிவிட்டுச் சாப்பிடுவதே சிறந்ததாகும். வேர்க்கடலையைக் கஞ்சியாக்கி, வாழைப்பழம், தேன் சேர்த்துச் சாப்பிடுவதால், குழந்தைகள் பலம் பெறுவார்கள்.
குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு வேர்க்கடலை மிகவும் நல்லது. பாஸ்பரஸ், உப்பு சத்துக்கள், புரத சத்துக்கள் வேர்க்கடலை அதிகம் அடங்கி உள்ளது. இதிலுள்ள கால்சியம், பொட்டாஷியம் ஆகிய சத்துக்கள் பற்கள் மற்றும் எலும்புகளை வலுவடையச் செய்து, மூளையையும் சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்.
வேர்க்கடலையை கொறிக்கக் கூடாது. அப்படியே விழுங்கவும் கூடாது. நன்றாக மென்று சாப்பிட வேண்டும். காரணம் வேர்க்கடலை சற்றுத் தாமதமாகத்தான் செரிமானமாகும். மென்று சாப்பிடவில்லை என்றால் வயிற்று வலியை ஏற்படுத்திவிடும்.
ஊறிய வேர்க்கடலை ஒரு முழுமையான சத்துணவு. காந்தியடிகள் தினமும் ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை சாப்பிடுவார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இதனை நன்கு கழுவிவிட்டு பச்சையாகவே சாப்பிடலாம். ஊற வைக்காமல் சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும்.
எனவே வேர்க்கடலையை ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊற வைத்தால் பித்தம் அதிலிருந்து நீங்கிவிடும்.
வேர்க்கடலையை உணவில் சேர்த்துக் கொண்டால் நாள் முழுவதற்கும் தேவையான சத்துக்கள் அதில் கிடைத்துவிடும். உடலும் மனமும் புத்துணர்வுடன் சுறுசுறுப்பாக இருக்கும்.
ஆஸ்துமா பிரச்னை உடையவர்கள் வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது. அது உணவுக் குழாயில் சளியைக் குறைத்து ஆஸ்துமா பாதிப்பை குறைக்கும்.
வறுத்த வேர்க்கடலையை விட அவித்த வேர்க்கடலை மிகவும் சத்தானது. அதனுடன் ஒரு வாழைப்பழமும், சிறிதளவு வெல்லம் மற்றும் ஒரு தம்ளர் மோர் குடித்தால் அது சமச்சீரான உணவாகிவிடும்.
No comments:
Post a Comment