பல வண்ண பாக்கெட்டுகளில் விற்பனையாகும் ஆவின் பாலில், யாருக்கு எது சிறந்தது?
ஆவின் பால் பல வண்ண பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டாலும், அவை எல்லாவற்றிலும் 3.2 - 3.4 சதவிகிதம் புரோட்டீன் இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு நிற பாக்கெட் பாலிலும் கொழுப்புச்சத்து மாறுபடுகிறது. அதைப் பொறுத்து, யாருக்கு, எந்த நிற பாக்கெட் பால் உகந்தது என பார்ப்போம்.
நைஸ் (Nice) :
எருமைப்பாலைவிட பசும்பாலில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும். அதாவது, 3.0 - 3.2 சதவிகித அளவில் இருக்கும். இதனால், பசும்பால் சீக்கிரமே ஜீரணமாகும். அதைபோலவே, நீல நிற பாக்கெட்டில் விற்பனையாகும் இந்த 'நைஸ்' வகை பாலிலும் கொழுப்புச்சத்து 3 சதவிகித அளவில் குறைவாகவும், மனிதர்களின் அன்றாடத் தேவைக்குப் போதுமான அளவிலும் இருக்கிறது.
சமன்படுத்தப்பட்ட இந்தப் பால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பினருக்கும், தினசரி பயன்பாட்டுக்கும் ஏற்றது. இதில், தண்ணீர் சேர்க்காமல் அப்படியே காய்ச்சிப் பருகலாம். ஆவின் தவிர, மற்ற பிராண்டு பாலைப் பயன்படுத்துவதாக இருந்தாலும், அதிலும் கொழுப்புச்சத்து 3.0 அளவுக்கு மிகாமல் இருப்பது நல்லது.
டிலைட் (Delite) :
இது, பசும்பால். ஊதா (வயலட்) நிற பாக்கெட்டில் விற்பனையாகும் இந்தப் பாலில், கொழுப்புச்சத்து 3.5 சதவிகிதம் இருக்கிறது. செறிவூட்டப்பட்ட இந்தப் பாலில், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி சத்துகள் சேர்க்கப்பட்டிருப்பதால், வைட்டமின் குறைபாடு இருப்பவர்களுக்குப் பயனளிக்கும்.
'நைஸ்' வகை பாலில் இருக்கும் கொழுப்புச்சத்தைவிட, 'டிலைட்' வகை பாலில் கொழுப்புச்சத்து கொஞ்சம் கூடுதலாக இருந்தாலும்கூட, இந்தப் பாலிலும் தண்ணீர் சேர்க்காமல் அப்படியே காய்ச்சிக் குடிக்கலாம். இந்தப் பாலும், எல்லா தரப்பினருக்கும் ஏற்றதுதான்.
க்ரீன் மேஜிக் (Green Magic) :
நிலைப்படுத்தப்பட்ட இந்தப் பால், பச்சை நிற பாக்கெட்டில் விற்பனையாகிறது. இதில், 4.5 கிராம் கொழுப்புச்சத்து இருக்கிறது. கொழுப்புச்சத்து சற்றே அதிகமாக இருப்பதால், இதை தினமும் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். கொழுப்புச்சத்து கூடுதலாக இருப்பதால், பலருக்கும் இந்தப் பாலின் சுவை பிடிக்கும்.
எப்போதாவது டீ, காபி தயாரிக்க இந்தப் பாலைப் பயன்படுத்தலாம். மற்றபடி, பனீர், மில்க் ஷேக், கெட்டித்தயிர் தயாரிக்க இந்தப் பாலைப் பயன்படுத்தலாம். கொழுப்புச்சத்து குறைபாட்டுக்காக, குழந்தைகள் அல்லது பெரியவர்களுக்கு இந்தப் பாலை மருத்துவர்கள் பரிந்துரைக்கும்பட்சத்தில், 'க்ரீன் மேஜிக்' வகை பாலை சில தினங்களுக்குப் பயன்படுத்தலாம்.
டயட் (Diet) :
ஆவினில் விற்பனையாகும் பாலில் மிகக் குறைந்த அளவு கொழுப்புச்சத்து கொண்டது, இந்த 'டயட்' வகை பால். 1.5 சதவிகிதம் கொழுப்புச்சத்து கொண்ட இந்தப் பால், இருமுறை சமன்படுத்தப்பட்டது. இது, மெஜந்தா நிற பாக்கெட்டில் விற்பனையாகிறது.
இதய பாதிப்பு உள்ளவர்கள், மருத்துவரின் அறிவுரைப்படி அதிக கொழுப்புச்சத்து பயன்படுத்துவதைத் தவிர்ப்பவர்களுக்கு இந்த வகை பால் ஏற்றது. எவ்வித நோய் பாதிப்புகளும் இல்லாத, நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்களுக்கு, போதிய கொழுப்புச்சத்து தேவை என்பதால், அவர்களுக்கு இந்த வகை பால் ஏற்றதல்ல.
ப்ரீமியம் (Premium) :
ஆரஞ்சு மற்றும் காப்பிக்கொட்டை (Brown) நிற பாக்கெட்டுகளில் விற்பனையாகும் இந்தப் பால், நிறை கொழுப்புடன் சமச்சீர்ப்படுத்தப்பட்டது. 6 சதவிகித கொழுப்புச்சத்து இருப்பதால், 'ஃபுல் க்ரீம் மில்க்' (Full Cream Milk) எனப்படுகிறது. டீக்கடைகளில் இந்த வகை பால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
பாயசம், கெட்டித்தயிர், பால் சார்ந்த இனிப்புகள் தயாரிக்க இந்தப் பாலைப் பயன்படுத்தலாம். தினசரி பயன்பாட்டுக்கு இந்தப் பாலைப் பயன்படுத்த வேண்டாம்".
No comments:
Post a Comment