சிறுதானிய உணவுகளை தினமும் எந்த நேரங்களில் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம்?
சிறுதானியங்களைப் பொறுத்தவரை காலையில் சாப்பிடும்போது அதிக பலன்களைப் பெற முடியும். அது முடியாத பட்சத்தில் மதியமும் சாப்பிடலாம். வெள்ளை சாதத்துக்கு மாற்றாக சிறுதானியங்களைச் சாப்பிடப் பழகலாம். இரவில் சாப்பிட விரும்பும் பட்சத்தில், அதிகபட்சம் 8 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது சிறந்தது. சிறுதானிய உணவுகளை எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஒரு வரைமுறை உள்ளது. அந்த வகையில் முக்கால் கப் அளவுக்கு எடுத்துக் கொள்வதுதான் சரியானது. சிறுதானியங்களைச் சமைக்க நிறைய தண்ணீர் தேவைப்படும். முழுமையாக வேகவைத்துதான் சாப்பிட வேண்டும். சிறுதானிய உணவுகளைச் சாப்பிடும்போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம்.
வாரத்தில் 3 முதல் 4 நாள்களுக்கு சிறுதானிய உணவுகள் சாப்பிட்டால் போதுமானது. தினமும் மூன்று வேளைகளுக்கும் சிறுதானிய உணவுகள் தான் சாப்பிட வேண்டும் என்ற அவசிமில்லை. ஒருநாள்விட்டு ஒருநாள் சாப்பிடலாம். இடைப்பட்ட நாள்களில் அரிசி, கோதுமை உணவுகள் சாப்பிடலாம்.
தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள், மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரின் ஆலோசனையின்றி சிறுதானிய உணவுகளைச் சாப்பிட வேண்டாம். சிலருக்கு தைராய்டு பாதிப்பை இந்த உணவுகள் தீவிரப்படுத்தக்கூடும் என்பதே காரணம்.
சிலவகை சிறுதானியங்கள் 'காய்ட்ரோஜென்' (goitrogens) என்ற ஹார்மோனை விடுவிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். அதன் விளைவாக உடலில் உப்புச்சத்து தேங்கிவிடும். உடலில் சோடியம் அளவு அதிகரிப்பது நல்லதல்ல. எனவே, ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் இந்த விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சீசனுக்கேற்ப சிறுதானியங்களைத் தேர்வு செய்து சாப்பிடுவதும் அவசியம்.
உதாரணத்துக்கு, இப்போதைய கோடைக்காலத்துக்கு குதிரைவாலி, கேழ்வரகு போன்றவை சிறந்தவை. இவை உடலைக் குளிர்ச்சியாக வைக்கும். குளிர்காலத்தில் கம்பு போன்று உடல் வெப்பத்தை வெளிப்புற சீதோஷ்ண நிலைக்கேற்ப சமநிலைப்படுத்தும் சிறுதானியங்களைத் தேர்வுசெய்து சாப்பிடலாம். எனவே, உங்களுக்கு உடல்நல தொந்தரவுகள் இல்லாத பட்சத்தில், வாரத்தில் 3-4 நாள்களுக்கு சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை காலை மற்றும் பகல் வேளைகளில் எடுத்துக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment