சாதாரண பயறுகளைவிட முளைவிட்ட பயறுகள் அப்படி என்ன ஸ்பெஷல்?’சத்துகள் மற்றும் கிடைக்கும் பலன்கள்..!
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவுகள் விதவிதமானவை. அவற்றில், எப்போதும் முதல் இடம் முளைகட்டிய பயறுகளுக்கே! விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை என அனைவரும் சாப்பிட ஏற்ற அற்புதமான உணவுப் பொருள் இது. சாதாரணப் பயறுகளைவிட இவற்றில் ஊட்டச்சத்துகள் அதிகம். வைட்டமின் ஏ, சி, பி மற்றும் கே புரோட்டீன்கள், நியாசின், தயாமின், அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஒமேகா அமிலம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளன.
பலன்கள்:
* முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருபவை. உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
* வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது; பார்வைத் திறனை மேம்படுத்தும்.
* இவற்றில் ஒமேகா அமிலம் அதிகமாக இருப்பதால், முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
* அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், ஹார்மோன்கள் சீராகச் சுரக்க வழிவகுக்கின்றன. புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலைத் தருகின்றன.
* முளைகட்டிய பயறுகளில் உள்ள வைட்டமின் பி, மென்மையான சருமத்தைத் தருகிறது. தோல் புற்றுநோயைத் தடுக்கும். சருமம் புத்துணர்வு பெற உதவும்..
* இவற்றில் இருக்கும் சிலிக்கா நியூட்ரியன்கள் (Silica Nutrients), சருமத்தில் ஏற்படும் செல் இழப்பைத் தடுத்து, செல் பாதிப்பைத் தடுத்து, செல் மறுசீரமைப்புக்குத் துணைபுரிகிறது.
* அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட் இவற்றில் உள்ளதால், நம் உடலில் ஏற்படும் டிஎன்ஏ மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. பெண்கள் சிறுவயதிலேயே பூப்பெய்துதலைத் தடுக்கிறது.
* இவற்றில் உள்ள பொட்டாசியம் உடலில் ரத்த ஓட்டம் சீராக உதவுகிறது; ரத்த விருத்திக்கும் உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவது போன்றவற்றைத் தடுக்கிறது. `அனீமியா’ என்னும் ரத்தசோகை நோயைத் தடுக்கிறது. உடலின் நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தி, நடுக்கத்தைச் சரிசெய்கிறது.
முளைகட்டிய பச்சைப்பயறு
முளைகட்டிய பச்சைப்பயறை நீர் சேர்த்து அரைத்து, அதில் வெல்லம், தேன், தேங்காய்த் துருவல், உலர் திராட்சை சேர்த்து காலை டிபனாகச் சாப்பிடலாம்.
இதில் கிடைக்கும் பலன்கள்...
* அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும். அல்சரைக் கட்டுப்படுத்தும். சருமப் பளபளப்புக்கு உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
முளைகட்டிய வெந்தயம்
சர்க்கரையின் அளவு அதிகம் உள்ள சர்க்கரை நோயாளிகள், தினமும் இதை ஒரு கப் சாப்பிட்டு வர, சர்க்கரையின் அளவு கட்டுப்படும். வயிற்றுப்புண், பெண்களின் கர்ப்பப்பை தொடர்பான நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் அல்சரை குணப்படுத்தும்.
முளைகட்டிய கொள்ளு
இது, உடல் உஷ்ணம், தொப்பை, உடல்பருமனை குறைக்கிறது.
முளைகட்டிய எள், வேர்க்கடலை
மெலிந்த உடல் இருப்பவர்கள் தினமும் 100 கிராம் முளைகட்டிய எள், வேர்க்கடலை சாப்பிட்டு வர, உடல் எடை கூடும்; உடல் வலுப்பெறும். அதிகப் பசியை போக்கி, உடலுக்கு ஊட்டத்தைத் தரும். அதிக உடல் உழைப்பு உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இதை எடுத்துக்கொள்வது நல்லது.
முளைகட்டிய கம்பு
கப்பை எட்டு மணி நேரம் ஊறவைத்து ஈரத்துணியில் கட்டி முளைகட்ட வைக்கலாம். அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம். அரைத்துப் பாலாகவும், கூழாகவும், கஞ்சியாகவும் சாப்பிடலாம். இது, உடலுக்கு பலம் கூட்டும். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வர உடல் உறுதியாகும்.
சில முக்கியக் குறிப்புகள்...
* இவற்றை வேகவைத்து சாப்பிடக் கூடாது. எண்ணெயில் பொரித்துச் சாப்பிடக் கூடாது.
* முளைகட்டிய பயறைச் சாப்பிட்ட பிறகு, உடலுக்கு வேலை கொடுக்க வேண்டும். ஏனென்றால், இவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். உணவு, செரிமானம் ஆகாமல் இருக்கும்போது வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகச் சுரப்பதால் அல்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
* வயது முதிர்ந்தவர்கள் முளைகட்டிய பயறுகளை அதிகமாகச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
No comments:
Post a Comment