முடி உதிர்வுக்கு தீர்வு தரும் எளிய இயற்கை வழிகள் - Minnalseithi

Latest

Search This Blog

Monday, March 18, 2024

முடி உதிர்வுக்கு தீர்வு தரும் எளிய இயற்கை வழிகள்

 முடி உதிர்வுக்கு தீர்வு தரும் எளிய இயற்கை வழிகள்


நெல்லிக்காய்


நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது முடி உதிர்வை எதிர்த்துப் போராடும் சக்தி வாய்ந்த மூலப்பொருளாக அமைகிறது. ஜர்னல் ஆஃப் எத்னோஃபார்மகாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஆம்லா எண்ணெய் ஒரு சக்திவாய்ந்த தடுப்பானாக இருப்பது கண்டறியப்பட்டது, இது ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கைக்குக் கூட சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. நீங்கள் நெல்லிக்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம் அல்லது நெல்லிக்காய் ஜூஸைத் தொடர்ந்து உட்கொள்ளலாம். இது மயிர்க்கால்களை வலுப்படுத்தவும், முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கவும் மற்றும் ஒட்டுமொத்த முடி அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.


கரிசலாங்கண்ணி(பிரிங்ராஜ்)


‘ஃபால்ஸ் டெய்ஸி’ என்றும் அழைக்கப்படும் கரிசலாங்கண்ணி தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் பெயர் பெற்ற மூலிகையாகும். கரிசலாங்கண்ணி இலைகளை தேநீராக காய்ச்சி குடித்து வர நல்ல தீர்வு கிடைக்கும். அல்லது எண்ணெயாக காய்ச்சி பயன்படுத்தலாம். 2008 ஆம் ஆண்டில், நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பிரிங்ராஜ் எண்ணெயைப் பயன்படுத்துவதால், மயிர்க்கால்களின் எண்ணிக்கை அதிகமாகிறது என்பதை நிரூபித்ததாக கூறப்படுகிறது. கரிசலாங்கண்ணியை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி ஆற வைத்து அதனை பயன்படுத்தி வரலாம். அல்லது கரிசலாங்கண்ணி இலைகளை அரைத்து விழுதாக்கி தலையில் தடவி அரைமணி நேரம் வைத்திருந்து குளித்து வந்தாலும் முடி உதிர்வை தடுக்கும்.


வெந்தயம்


வெந்தயம் அல்லது வெந்தயக்கீரை முடி உதிர்தலுக்கான மற்றொரு நல்ல தீர்வாகும். அமெரிக்க வேளாண்மைத் துறையின் கூற்றுப்படி, வெந்தய விதைகள் இரும்பு மற்றும் புரதத்தின் தேக்கமாக செயல்படுகின்றன, இவை இரண்டும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். வெந்தயக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள நல்ல தீர்வு கிடைக்கும்.


தேங்காய் மற்றும் கற்றாழை


தேங்காய் தண்ணீர் மற்றும் கற்றாழைச்சாறு கலவையானது தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு உதவும். தேங்காய் நீர் நீரேற்றம் மற்றும் தாதுக்கள் நிறைந்தது, அதே நேரத்தில் கற்றாழை ஆரோக்கியமான உச்சந்தலையை ஊக்குவிக்கும் என்சைம்களைக் கொண்டுள்ளது. இந்த கலவையானது முடி உதிர்வதைத் தடுக்கும் மற்றும் மந்தமான முடிக்கு உயிர்ச்சக்தியை மீட்டெடுக்கும். கற்றாழை விழுதுடன் தேங்காய் தண்ணீர் சேர்த்து கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் வைத்திருந்து பின்னர் குளித்து வர முடி உதிர்வு நிற்கும்.


செம்பருத்தி


செம்பருத்தி இலை மற்றும் பூ இரண்டுமே முடி உதிர்லுக்கு தீர்வு தரும். செம்பருத்தி பூக்களை கொண்டு தயாரிக்கும் தேநீரை தினமும் அருந்தி வர, முடி உதிர்வுக்கு மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். மயிர்க்கால்கள் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவதை உறுதி செய்யும்.மேலே சொன்ன இந்த இயற்கைப் பொருட்கள் தலைமுடிக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கி முடி உதிர்வை தடுப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

No comments:

Post a Comment