வெள்ளை அவல், சிவப்பு அவல் எது பெஸ்ட்?அவல் தரும் ஆரோக்கிய நன்மைகள்
தமிழர்களின் உணவுப் பட்டியலில் முக்கியமான இடம்பெற்றிருக்கும் ஒன்று அவல்.
‘ஹெல்தியான காலை மற்றும் மாலை உணவு’ என்று இதைப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்.
அரிசியின் நிறம், வகையைப் பொறுத்து அவலின் நிறத்திலும் ஊட்டச்சத்திலும் மாற்றங்கள் ஏற்படும். வெள்ளை மற்றும் சிவப்பு அவலைத்தான் நாம் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.
வெள்ளை அவல்
இது, தூயமல்லி போன்ற வெள்ளை நிற அரிசி ரகங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், கலோரி, குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
பலன்கள்...
* எளிதில் செரிமானமாகும்.
* உடனடி எனர்ஜி தரும்.
* சமைப்பதற்கு எளிதானது.
* உடல்சூட்டைத் தணிக்கும்.
* செல்கள் புத்துணர்ச்சி பெற உதவும்.
* உடல் எடையைக் குறைக்கும்.
* இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
சிவப்பு அவல்
இது, பிசினி போன்ற சிவப்பு அரிசி ரகங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஆந்தோசயனின் (Anthocyanin) என்னும் நிறமி அவலின் சிவப்பு நிறத்துக்குக் காரணம். சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் நல்லது. இதற்குக் காரணம், பட்டை தீட்டப்படாத சிவப்பரிசியில் இது தயாரிக்கப்படுவதுதான்.
பலன்கள்...
* நீண்ட நேரத்துக்குப் பசிக்காது.
* உடலை உறுதியாக்கும்.
* நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
* குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* பசியைப் போக்கும்.
* ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும்.
* உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, ஆரோக்கியமான உடல் எடையைப் பெற உதவும்.
* ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கைக்கு உதவும். ரத்தச்சோகை வராமல் காக்கும்.
* மூளைச் செல்களைப் புத்துணர்ச்சியாக்கும்.
* புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களைக் குடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கும்.
* வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும்.
* பட்டை தீட்டப்படாத அரிசியில் தயாரிக்கப்படுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது.
நேரமும் வாய்ப்பும் இருப்பவர்கள், நெல்லை வாங்கி, 2 மணி நேரம் ஊறவைத்து, இடித்து அவலாக்கிப் பயன்படுத்தலாம். சத்துகள் சேதாரமில்லாமல் அப்படியே கிடைக்கும். இன்று சிறுதானியங்களின் அவல்கூட கடைகளில் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கிப் பயன்படுத்தலாம். நெல் அவலை விட தானிய அவலில் சத்துகள் அதிகம். சுவையும் வித்தியாசமாக இருக்கும்.
எப்படிச் சாப்பிடலாம்?
* பச்சையாக அப்படியே சாப்பிடலாம்.
* வேர்க்கடலை, காய்கறிகளுடன் சேர்த்து வேகவைத்து உண்ணலாம்.
* வெந்நீர், பால், ஜூஸ், தயிரில் ஊறவைத்து சாப்பிடலாம்.
* நெய் அல்லது வெண்ணெயுடன் கலந்து, சிறிது நாட்டுச்சர்க்கரை சேர்த்துச் சாப்பிடலாம்.
* பாயசம், புட்டு, கஞ்சி, உப்புமா... என சமைத்துச் சாப்பிடலாம்.
* நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து உருண்டை செய்து குழந்தைகளுக்குத் தரலாம்.
No comments:
Post a Comment