மூளை முதல் நுரையீரல் வரை பல உறுப்புகளைக் காக்கும் கொத்தமல்லித் தழை..! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, March 19, 2024

மூளை முதல் நுரையீரல் வரை பல உறுப்புகளைக் காக்கும் கொத்தமல்லித் தழை..!

 மூளை முதல் நுரையீரல்  வரை பல உறுப்புகளைக் காக்கும் கொத்தமல்லித் தழை..!


கொத்தமல்லித் தழை என்றாலே சமையல் செய்பவர்களுக்கு முகத்தில் மலர்ச்சி ஏற்படுவதைப் பார்க்கலாம். `சில உணவு வகைகளை எந்த அளவுக்குச் சிறப்பாகச் சமைத்திருந்தாலும், கடைசியாகக் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால்... சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்' எனப் பலரும் கூறக் கேட்டிருப்போம். அத்தகைய கொத்தமல்லித் தழையில் சுவை, மணம் மட்டுமல்ல... உடலுக்குத் தேவையான பலவித சத்துகள் நிறைந்துள்ளன.


கொத்தமல்லிக் கீரையில் வைட்டமின்கள் A, B1, B6, B12, C, D, E, K, இரும்புச்சத்து, மாவுச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து, ஃபோலேட், கொலைன், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், கரோட்டினாய்டு, லியோனிக் அமிலம், ஆன்டி ஆக்ஸிடென்ட் எனப் பல சத்துகள் நிறைந்துள்ளன.


கொத்தமல்லியை உணவில் தினசரி சேர்த்துக் கொள்வது நல்லது. மூளை செயல்திறன் கூடுவது, கண் பார்வை ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவது, வயிற்றுப் பிரச்னை, செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம், வாய்வுப் பிரச்னை, புளித்த ஏப்பம், வாந்தி, குமட்டல், வாய் துர்நாற்றம், நுரையீரல் சார்ந்த நோய்கள், சாப்பிட்டவுடன் மலம் கழித்தல் (IBS- Irritable Bowel Syndrome) உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிவாரணம் பெற, கொத்தமல்லி துணைபுரியும். மிகமுக்கியமாக, உடலின் முக்கிய சுரப்பியான கணையத்தின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் பெற்றது கொத்தமல்லிக் கீரை. இதனாலேயே சித்த மருத்துவத்தில் `பச்சை வைரம்’ என்று கொத்தமல்லி அழைக்கப்படுகிறது.


உணவில், இதை எந்த வகையில் எல்லாம் கொத்தமல்லியைப் பயன்படுத்தலாம்?


கொத்தமல்லித் துவையல்


கொத்தமல்லிக் கீரையை தினசரி துவையல் செய்து சாப்பிடலாம். இதற்கு, கொத்தமல்லிக் கீரையுடன் சம அளவு புதினா இலை, சிறிய துண்டு இஞ்சி, 4 - 5 பல் பூண்டு, 6 சின்ன வெங்காயம், தேவையான அளவு தேங்காய் மற்றும் ஒரு தக்காளி சேர்த்து, நல்லெண்ணெய் ஊற்றி வதக்கி பின்பு, சிறிதளவு மட்டும் நீர் விட்டு அரைத்து துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். இட்லி, தோசை, பணியாரம் இவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.


கொத்தமல்லி தோசை


கொத்தமல்லிக் கீரையைத் தேவையான அளவு எடுத்து, நன்றாக அலசி, மாவு அரைக்கும்போது சேர்த்து அரைத்து, இட்லி, தோசை போன்றவற்றைச் செய்து சாப்பிடலாம்.


கொத்தமல்லி ஜூஸ்


கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டதால் கொத்தமல்லி கொண்டு செய்யப்படும் ஜூஸ் தினமும் எடுத்துக்கொள்ளலாம். கைப்பிடி அளவு கொத்தமல்லிக் கீரையுடன் ஒரு மாதுளம் பழம், ஒரு பெரிய நெல்லிக்காய், சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து ஜூஸ் செய்து பருகலாம். தேவையெனில் சுவைக்காகத் தேன் (சுத்தமானது) கலந்துகொள்ளலாம்.


கொத்தமல்லிச் சாறு 10 மி.லி, எலுமிச்சைச் சாறு தேவையான அளவு, தேன் 10 மி.லி எனக் கலந்தும் குடிக்கலாம்.


இப்படி நம் உணவில் ஏதாவது ஒருவகையில் கொத்தமல்லிக் கீரையை தினமும் சேர்த்துக்கொண்டு வந்தால், ரத்தம் சுத்தமாவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.’’

No comments:

Post a Comment