தயிருடன் சேர்ந்து சாப்பிடக்கூடாத உணவுகள்..!
கோடை காலம் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கும், உடலில் குளிர்ச்சித்தன்மையை தக்கவைப்பதற்கும் பலரும் மதிய உணவுடன் தயிரையும் சேர்த்து உட்கொள்ள விரும்புவார்கள். தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் செரிமான செயல்பாட்டுக்கு உதவக்கூடியவை.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வைட்டமின்களும், தாதுக்களும் தயிரில் நிறைந்துள்ளன. உண்ணும் மற்ற உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துகளையும் உடல் விரைவாக உறிஞ்சுவதற்கு தயிர் உதவும். அதே வேளையில் தயிருடன் சில உணவுகளை சேர்த்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். தயிருடன் தவிர்க்கவேண்டிய அத்தகைய உணவுகளில் சில உங்கள் கவனத்திற்கு...
மாம்பழம்:
மாம்பழம் வெப்பத்தன்மை கொண்டது. தயிர் குளிரூட்டியாக அறியப்படுகிறது. இவை இரண்டையும் ஒன்றாக சேர்க்கும்போது செரிமான செயல்பாட்டில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். சரும பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். மேலும் இந்த இரண்டு உணவுகளும் சேர்ந்து உடலில் நச்சுகளை உண்டாக்கும்.
பால்:
பால் மற்றும் தயிரை சேர்த்து உட்கொள்வது அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த இரண்டு பால் பொருட்களிலும் கொழுப்பு மற்றும் புரதம் உள்ளன.
மீன்:
மீனுடன் தயிர் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை இரண்டும் புரதச்சத்து நிறைந்தவை. மீன் விலங்கு வகை புரதமாகவும், தயிர் காய்கறி வகை புரதமாகவும் கருதப்படுகிறது. இந்த இரண்டு புரதங்களும் ஒன்றாக இணைந்தால் அதனை ஜீரணிப்பது உடலுக்கு கடினமாகிவிடும். அத்துடன் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் வயிறு தொடர்பான பிரச்சினைகளும் ஏற்படும்.
எண்ணெய் உணவுகள்:
பூரி உள்பட எண்ணெயில் பொரித்த உணவுகளுடன் தயிர் சேர்த்து உட்கொள்வது, செரிமான செயல்முறையை மெதுவாக்கும். நாள் முழுவதும் சோம்பலாக உணர வைக்கும். அதனால் எண்ணெய் வகை உணவுகள் மற்றும் தயிரை ஒருபோதும் ஒன்றாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
வெங்காயம்:
மாம்பழத்தைப் போலவே, வெங்காயமும் இயற்கையாகவே சூடான பொருளாக அறியப்படுகிறது. இந்த இரண்டு உணவுகளையும் ஒன்றாக சேர்க்கும்போது பலருக்கு ஒவ்வாமை பிரச்சினைகளை உண்டாக்கும். சொறி, தோல் அழற்சி, சொரியாசிஸ் போன்ற தோல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
No comments:
Post a Comment