சிறுநீரகக் கற்களை நீக்க உதவும் சிறுபீளையின் மருத்துவ பயன்கள்..! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, March 19, 2024

சிறுநீரகக் கற்களை நீக்க உதவும் சிறுபீளையின் மருத்துவ பயன்கள்..!

 சிறுநீரகக் கற்களை நீக்க உதவும் சிறுபீளையின் மருத்துவ பயன்கள்..!


உடலில் கழிவுகளை வெளியேற்றும் உயிரி இயந்திரம் சிறுநீரகம். நம் உடலில் மிகவும் முக்கியமான உள்ளுறுப்புகளில் ஒன்று. நம் நாட்டில், 10 சதவீதம் பேருக்கு சிறுநீரகக் கல் நோய் இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.


சிறுநீரகத்தில் ஏற்படும் கல் மெதுவாக நகர்ந்து சிறுநீர் குழாய்க்கும், சிறுநீர் பைக்கும் இடம் பெயர்ந்து போகும் போது தான் பலருக்கும் அறிகுறிகளை காட்டுகிறது. முதுகு வலி, இடுப்பு வலி, சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் போவது, ரத்தம் கலந்து சிறுநீர் போவது, சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல், நீர் சுருக்கு, நீரடைப்பு, காய்ச்சல், வாந்தி, குமட்டல் போன்ற தொந்தரவுகளை தரும்.



இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கல்லை வெளியேற்றினால், கல்லடைப்பு, நீரடைப்பு போன்ற முற்றிய நோய் நிலைகளை தவிர்க்கலாம். பெரும்பாலும் தேவையான அளவு நீர் பருகாமல் இருப்பது, அதிகமான உப்பு சேர்த்த உணவுகளை உண்பது, அதிகமான மாமிச உணவு, குளிர்பானங்கள், சில வகை மருந்துகளால் சிறுநீர் கல் உருவாகலாம்.


கால்சியம் ஆக்சைடு, யூரிக் அமிலக் கற்கள் உட்பட பல வகைகள் உள்ளன. இவற்றில், கால்சியம் ஆக்சைடு கற்களே அதிகமாக காணப்படுகின்றன. சில நேரங்களில் சிறுநீரில் வெளியாகும் கற்களை நோயாளிகள் மருத்துவரிடம் கொண்டு வந்து காண்பிப்பது உண்டு. இவற்றை ஆய்வகத்தில் பரிசோதித்து, என்ன வகை என்பதை தெரிந்து கொள்ளலாம். தேவையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் மீண்டும் கற்கள் வராது.


சித்த மருத்துவத்தில் சிறுநீரகக் கற்களை நீக்குவதில் சிறந்தது சிறுபீளை குடிநீர். சிறுகண் பீளை, கண் பீளை, பீளை பூண்டு என்று கிராமப்புறங்களில் கூறுவர்.


பொங்கல் பண்டிகையின் போது, வெள்ளை நிறத்தில் பூத்துக் குலுங்கும் இச்செடிகளை ஆவாரம் பூ, வேப்பிலையுடன் சேர்த்து காப்பு கட்டுவர். சிறுகண் பீளையை நிழலில் காய வைத்து சூரணமாக்கி, 5 கிராம் அளவு, 100 மில்லி நீரில் கலந்து கொதிக்க வைத்து, 50 மில்லி அளவு இரு வேளை குடித்தால், கற்கள் கரைந்து வெளியேறும்.


சிறுநீரகக் கற்களால் ஏற்படும் கல்லடைப்பு, நீரடைப்பு, சிறுநீர் எரிச்சல், வலி ஆகியவை தீரும். கற்கள் ஏற்படாமல் தடுக்கவும் இக்குடிநீரை வாரம் ஒரு நாள் பருகி வரலாம். சிறுபீளையைப் போலவே நெருஞ்சில் குடிநீர், நீர்முள்ளி குடிநீர் ஆகியவையும் சிறுநீரகக் கற்களை கரைப்பதில் சிறந்தவை. சித்த மருத்துவர்களின் ஆலோசனைப் படி இக்குடிநீரை பருக வேண்டும்.


உணவாக:


 சிறுபீளையோடு பனைவெல்லம் சம அளவு சேர்த்தரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து பாலில் கலந்து குடித்துவர, சிறுநீர் எரிச்சல் உடனடியாகக் குறையும்.


 சிறுபீளை, நெருஞ்சில், மாவிலங்கப்பட்டை, வெள்ளரி விதை ஆகியவற்றை சேர்த்துத் தயாரிக்கப்படும் குடிநீரை அருந்த, சிறுநீர் நன்றாகப் பிரியும்.


 சிறுநீர்ப்பெருக்கி செய்கை மட்டுமின்றி சிறுநீரகக் கற்களை கரைக்கும் (Lithotriptic) வன்மையும், சிறுநீரகப் பாதையில் உருவாகும் கிருமித் தொற்றுக்களை அழிக்கும் தன்மையும் சிறுபீளைக்கு உண்டு.


மருந்தாக: 


ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் சிறுபீளையானது பேஸில்லஸ் சப்டிலிஸ் (Bacillus subtilis), ஸ்டஃபிலோகாக்கஸ் ஆரெஸ் (Staphylococcus aureus) போன்ற பாக்டீரியாவுக்கு எதிராகச் செயல்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


 ஈரல் தேற்றியாகவும் ஒவ்வாமையைத் தூண்டும் காரணிகளை அழிக்கும் சக்தியாகவும் சிறுபீளை செயல்படுகிறது.


 ரத்தத்தில் அதிகரித்திருக்கும் யூரியா, கிரியாடினின் அளவைக் குறைக்கும் தன்மை இதற்கு உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்தி, உடலில் தேங்கும் கழிவை உடனடியாக வெளியேற்றும்.


அறுகு சிறுபீளை நெல்லோடு தூஉய்ச் சென்று…’ எனும் சங்கப்பாடல் வரி, சிறுபீளை, அறுகம்புல் பொடியைச் சாதத்தில் கலந்து சாப்பிட, இடுமருந்தால் ஏற்பட்ட பாதிப்புகள் முறியும் என்பதை பதிவிடுகிறது. நஞ்சுமுறிவு செய்கை குறித்தும், சிறுநீரகங்களில் அதன் செயல்பாடு குறித்தும் ஆழமான ஆய்வு, பாடலின் உண்மையை விளக்கும்.


வீட்டு மருந்தாக: அரிசிக் கஞ்சியில் சிறுபீளையைச் சேர்த்து கொதிக்க வைத்து ‘சூப்’ போல குடித்துவர உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். பிரசவ காலத்தை நெருங்கும் கர்ப்பிணிகளின் உடல் பலத்தைக் கூட்டுவதற்காக சிறுபீளைக் கஞ்சி வழங்கப்படுகிறது.


குழந்தைகளைக் குளிப்பாட்டும் நீரில் சிறுபீளை சமூலத்தை (முழு தாவரம்) போட்டுக் கொதிக்க வைத்துப் பயன்படுத்தினால், குழந்தைகளுக்குச் சுரம் தாக்காது என்பது கிராமங்களில் நிலவும் நம்பிக்கை. சிறுபீளையை உலரவைத்து தலைபாரம் உள்ளவர்கள் புகை போடவும் செய்கின்றனர்.


பாம்புக்கடிக்கான மருத்துவத்தில், சிறுபீளைச் சாறு அனுபானங்களில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுபீளைக் குடிநீரை இருமலைக் குறைக்கவும் தொண்டைப் புண்களைக் குணப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர். இதன் வேர்க் கஷாயத்தை கல்லீரல் சார்ந்த தொந்தரவுகளுக்கு ராஜஸ்தானிய பழங்குடிகள் பயன்படுத்துகின்றனர்.


பீளை வகைகளில் சிறுபீளை தவிர, பெரும்பீளை என்றொரு வகையும் உண்டு. வீக்கத்தைக் குறைப்பதற்கு பெரும்பீளையை குடிநீரிட்டுப் பருகலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி சிறுபீளையை அருந்தும் நாள் கணக்கு, அளவை அமைத்துக்கொள்வது நல்லது.

No comments:

Post a Comment