உடல் பருமன் அதிகரிக்க காரணங்கள், ஏற்படும் உடல்நலக்கேடுகள், உடற்பருமனைக் கட்டுப்படுத்த வழிகள்..! - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, March 13, 2024

உடல் பருமன் அதிகரிக்க காரணங்கள், ஏற்படும் உடல்நலக்கேடுகள், உடற்பருமனைக் கட்டுப்படுத்த வழிகள்..!

 உடல் பருமன் அதிகரிக்க காரணங்கள், ஏற்படும் உடல்நலக்கேடுகள்,உடற்பருமனைக் கட்டுப்படுத்த வழிகள்..!


உடற்பருமன் அதிகரிப்பதற்கான காரணிகள்


ஒருவரின் குடும்பப் பின்னணியுடன் இணைந்த மரபியல் காரணிகள் அல்லது பிறவியில் ஏற்படும் மரபியல் காரணிகளால் உடல் எடை அதிகரிப்பு நிகழ்கிறது. இருப்பினும், இவை வெறும் 5 சதவிகிதம்தான் என்பதால், தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே சென்று கொண்டிருக்கும் உடற்பருமன் எண்ணிக்கைக்கு, வேறு சில காரணங்களும் உள்ளன.


அதாவது, ஒருவர் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவும் தரமும் மிகவும் முக்கியானவை. அதிக சர்க்கரை, கொழுப்பு, உப்பு மற்றும் சேர்மானங்கள் சேர்த்த உணவுகள் அதிகம் விரும்பி உண்ணப்படுவதும் உடல் எடை அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கிறது. அதிக கலோரி உணவுகள் மட்டுமல்லாது, குறைவான ஊட்டச்சத்துக்களுடன் இருக்கும் துரிதவகை உணவுகளை சாப்பிடுவதாலும் உடல் எடை அதிகரிக்கிறது.


மேலும், உடல் உழைப்பு இல்லாமை, உடற்பயிற்சி இல்லாமை போன்றவற்றால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் கலோரியே எரிக்கப்படாமல் உடலில் சேருவதுடன், அதிகக் கலோரி உணவுகளால் கூடுதலாகக் கிடைப்பவையும் உடலில் சேமித்து வைக்கப்படுவதால் உடற்பருமன் ஏற்படுகிறது. ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதும் உடற்பருமன் ஏற்படுவதற்கு மற்றொரு காரணமாகிறது.


உடற்பருமனால் ஏற்படும் உடல்நலக்கேடுகள்


உயர் ரத்த அழுத்தம், இரண்டாம் நிலை நீரிழிவு, தூக்கமின்மை, சுவாசமண்டல பிரச்னைகள் போன்றவற்றை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இது மட்டுமல்லாமல், அதிக உடற்பருமனால், உடல் எடையைத் தாங்க முடியாததாலும், உடலுக்குத் தேவையான நுண்சத்துகள் சரியாகக் கிடைக்காமல் குறைபாடு ஏற்படுவதாலும், மூட்டுத்தேய்மானம், எலும்பு மட்டும் தசைகளில் அடிக்கடி வலி ஏற்படுதல், உடலியங்கியல் நிகழ்வுகள் பாதிப்படைந்து, பித்தப்பை, சிறுநீரக பிரச்னைகள் போன்றவையும் ஏற்படலாம்.


உடற்பருமன் இருப்பவர்கள் மேற்கொள்ள வேண்டியவை


உடல் எடை சீராக இருக்குமாறு பார்த்துக்கொள்வதுதான் முதலில் செய்ய வேண்டிய செயல். ஒருவேளை அதிகரிக்கும் நிலையில் அல்லது உடற்பருமன் ஏற்பட்ட நிலையில், எடையைக் குறைப்பதற்கான உணவுமுறை மாற்றம் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். உடற்பருமனை அல்லது அதிக உடல் எடையைக் குறைப்பதற்கு மருத்துவசிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு என்றெண்ணி, முறையற்ற மருத்துவம் மற்றும் போலி மருத்துவம் போன்றவற்றை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது தவிர்க்கப்படவேண்டும்.


முறையான உணவுப் பழக்கம், இடைவேளை விட்டு உண்பது, சரியான நேரத்தில் உண்பது, ஒரு பங்கு முழு தானிய உணவும், அதற்கு இரண்டு மடங்கு காய்கள், கீரைகள் மற்றும் பழங்களையும் சேர்த்துக்கொள்வது, அளவான- தரமான கொழுப்புணவு, புரதச் சத்திற்கு மீன், முட்டை, பால், பருப்பு போன்ற சரிவிகித உணவுகளை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் (ICMR) பரிந்துரைக்கப்பட்ட அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுகள், தொடர்ச்சியான அசைவ உணவு, துரித உணவு, அதிக கலோரி, சர்க்கரை, கொழுப்பு இருக்கும் உணவுகள், பேக்கர் உணவுகள், சிப்ஸ் போன்ற நொறுக்குகள், சாக்லேட் உள்ளிட்ட பிற இனிப்புகள், ரெடிமேட் குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறு வகைகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். உடலை எப்போதும் இயக்க நிலையிலேயே வைத்திருப்பது, நிம்மதியான தூக்கம், மது, புகைப்பழக்கம் தவிர்ப்பது, ஆரோக்கியமான மனநிலையுடன் இருக்கும் வகையில் சூழலையும் வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment