பங்குனி உத்திரம் 2024: சிறப்புகள், வரலாறு, மற்றும் விரத முறை - Minnalseithi

Latest

Search This Blog

Friday, March 22, 2024

பங்குனி உத்திரம் 2024: சிறப்புகள், வரலாறு, மற்றும் விரத முறை

 பங்குனி உத்திரம் 2024: சிறப்புகள், வரலாறு, மற்றும் விரத முறை


தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாத பெளர்ணமியும் முக்கிய விரத நாளாக கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதிலும் ஒவ்வொரு மாதத்திலும் வரும் பெளர்ணமியும் தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்குரிய விரத நாளாக கொண்டாடப்படுவது தனிச்சிறப்பாகும். இவற்றில் தை மாத பெளர்ணமி தை பூசமாகவும், வைகாசி மாத பெளர்ணமி வைகாசி விசாகமாகவும், பங்குனி மாத பெளர்ணமி பங்குனி உத்திரமாகவும், கார்த்திகை மாத பெளரண்மி திருக்கார்த்திகையாக பெரும் விழாக்களாக கொண்டாடப்படுகின்றன.


இந்த ஆண்டு பங்குனி உத்திரம் நாள் மார்ச் 24 ஆம் தேதியா அல்லது மார்ச் 25ம் தேதியா என்ற குழப்பம் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.


பங்குனி உத்திரம் 2024 எப்போது ?


இத்தகைய சிறப்பு மிக்க பங்குனி உத்திரம் இந்த ஆண்டு மார்ச் 25 ம் தேதி வருவது காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மார்ச் 24ம் தேதி காலை 11.17 மணிக்கே பெளர்ணமி திதியும், காலை 08.46 மணிக்கே உத்திரம் நட்சத்திரமும் துவங்கி விடுகிறது. மார்ச் 25ம் தேதி பகல் 01.16 வரை பெளர்ணமி திதியும், காலை 11.19 வரை உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. இதனால் மார்ச் 24, மார்ச் 25 இவற்றில் எந்த நாளை பங்குனி உத்திர நாளாக எடுத்துக் கொண்டு விரதம் இருக்க வேண்டும் என குழப்பம் பக்தர்களிடம் ஏற்பட்டுள்ளது.


​எந்த நாளில் விரதம் இருக்க வேண்டும் ?


பெளர்ணமி திதியும், உத்திர நட்சத்திரமும் மார்ச் 24ம் தேதியே துவங்கி இருந்தாலும் அன்று காலை சூரிய உதய நேரத்திற்கு பிறகே இரண்டும் துவங்குகின்றன. ஆனால் பஞ்சாங்க சாஸ்திரப்படி, ஒரு நாளின் சூரிய உதய நேரத்தின் போது என்ன திதி, நட்சத்திரம் உள்ளதோ அதுவே அந்த நாளுக்காக திதி மற்றும் நட்சத்திரமாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் மார்ச் 25ம் தேதி சூரிய உதய நேரத்தின் போது தான் பெளர்ணமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் உள்ளன. இதனால் மார்ச் 25ம் தேதியை தான் பங்குனி உத்திர நாளாக கணக்கில் எடுத்துக் கொண்டு பக்தர்கள் விரதம் இருக்க வேண்டும்.


பங்குனி உத்திர விரதம் எப்போது துவங்க வேண்டும்?


பங்குனி உத்திரத்தன்று முருக பக்தர்கள் பகல் முழுவதும் உபவாசமாக இருந்து, இரவில் பால், பழம் மட்டும் உணவாக எடுத்துக் கொள்வது வழக்கம். இந்த ஆண்டு மார்ச் 24ம் தேதியே உத்திரம் நட்சத்திரமும், பெளர்ணமியும் துவங்கி விடுவதால் மார்ச் 24ம் தேதி இரவு எளிமையான உணவுகள் அல்லது பால், பழம் மட்டும் உணவாக எடுத்துக் கொண்டு விரதத்தை துவங்கலாம். மார்ச் 25ம் தேதி அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, முருகனுக்குரிய வழிபாட்டினை செய்து அன்று முழுவதும் உபவாசமாக இருந்து விரதத்தை தொடர வேண்டும். முடிந்தவர்கள் மார்ச் 25ம் தேதி இரவும் பால், பழம் மட்டும் சாப்பிட்டு இருக்கலாம். முடியாதவர்கள் அன்று மாலை அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று, முருகனை தரிசித்த பிறகு அங்கு கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிட்டு, விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். இவ்வாறு விரதம் இருப்பதால் முருகப் பெருமானின் அருளும் சிவ பெருமானின் அருளும் கிடைக்கும்.


​2024ல் வரும் அபூர்வ பங்குனி உத்திரம் :


12வது மாதமான பங்குனியும், 12வது நட்சத்திரமான உத்திரமும் இணைவதை தான் பங்குனி உத்திரம் என்பார்கள். ஆனால் இந்த ஆண்டு மற்றொரு சிறப்பும் இணைந்துள்ளது. அதாவது இந்த ஆண்டு பங்குனி உத்திரம் பங்குனி 12 ம் தேதியன்று கூடி வருகிறது. அனைத்தும் 12 என முருகனுக்குரிய எண்ணில் வருவதால் இது மிகவும் விசேஷமான ஒரு நாளாகும். மார்ச் 25ம் தேதி காலை 10.23 முதல் பகல் 03.02 வரை இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணமும் வருகிறது. அதனால் இந்த சமயத்தில் விரதம் வழிபாடு செய்வது பல மடங்கு அதிகமான பலனை தரும். அதோடு சிவ பெருமானுக்குரிய வழிபாட்டு நாளான திங்கட்கிழமையில் (சோமவாரம்) இணைந்து வருவது மற்றொரு விசேஷமாகும். இதனால் இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் முருகப் பெருமானின் அருளுடன், சிவ பெருமானின் அருளையும் பெற முடியும்.


​பங்குனி உத்திர சிறப்புகள் :


பங்குனி உத்திரம் என்பது முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விரத நாட்களில் ஒன்றாகும். ஆனால் இது அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற நாள் என்பது பலரும் அறியாத ஒன்றாகும். பங்குனி மாத பெளர்ணமியும், உத்திர நட்சத்திரமும் இணையும் நாளே பங்குனி உத்திரமாகும். அதாவது தமிழ் மாதங்களில் பன்னிரெண்டாவது மாதமாக வருவது பங்குனி. அதே போல் நட்சத்திரங்களில் பன்னிரெண்டாவது நட்சத்திரமாக வருவது உத்திரம் நட்சத்திரம். இவை இரண்டும் இணையும் நாள் என்பதால், பன்னிரு கரங்களை உடைய முருகப் பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் சொல்லப்படுகிறது. பங்குனி உத்திரத்தன்று முருகன் கோவில்களிலும், சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள், மஹோற்சவம், பிரம்மோற்சவம் ஆகியவை நடத்தப்படுவது வழக்கம்.


​பங்குனி உத்திர வரலாறு :


பங்குனி மாதத்தில் முருக பக்தர்கள் தேர் இழுப்பது, காவடி எடுப்பது, பால் அபிஷேகம் செய்வது இந்த மாதத்தின் மற்றொரு தனிச்சிறப்பாகும்.

சிவனின் தியானத்தை கலைத்த மன்மதனை, சிவ பெருமான் நெற்றிக்கண்ணை திறந்து எரித்து சாம்பலாக்கினார். இதனால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக சிவன் - பார்வதி தேவியை மணந்தார். இந்த நாளில் சிவன் - அம்பிகையை திருமண கோலத்தில் அலங்கரித்து வேத மந்திரங்கள் ஓத, ஹோமம் போன்றவை நடத்தி, இருவறையும் ஊர்வலமாக கொண்டு சென்று, பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால் ஆன்மாக்கள் அனைத்தும் பரம்பொருளான சிவனுடன் ஐக்கியமாக வேண்டும் என்ற உயரிய தத்துவத்தை உணர்த்தும் உன்னத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.


அசுரனை வீழ்த்திய நாள் :


பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் வரும் நாளே, பங்குனி உத்திரமாக கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார்.


குதிரைகள் பூட்டிய தேரில் முருகப்பெருமானுக்கு வாயு பகவான் சாரதியாக இருக்க, முருகனின் படைகள் அணிவகுத்து சென்றன. அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. அதைப் பார்த்ததும் காரணம் அறியாது அனைவரும் திகைத்து நின்றனர். அப்போது அங்கிருந்த நாரதர் அம்மலையை பற்றி முருகனிடம் கூறினார்.


இந்த மலை கிரவுஞ்சன் என்னும் அசுரனாக இருந்து, எல்லோருக்கும் தீமைகளை புரிந்த தீய சக்தி ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.


மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் சொன்னார்.


அதை கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்துக் கொண்டு சென்று, தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட்டார். முருகனின் கட்டளைப்படி வீரபாகுவின் தலைமையில் முருகனின் படைகள் மாயாபுரிபட்டினத்திற்குள் நுழைந்தன.


கடும் போர் நடைபெறுதல் : 


இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். அவர்கள் இருவருக்கும் கடும் போர் நடந்தது. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து வீழ்ந்தனர். போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்படையின் வீரரான, வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான்.


இதைக்கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மூர்ச்சையாகி விழுந்த வீரபாகுவை தாரகாசுரன் எள்ளி நகையாடினான். உடனே அங்கிருந்த முருகனின் படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின. மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண்டும் மூர்க்கத்தனமாக தாக்கினான்.


எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் புகுந்துக் கொண்டான். வீரபாகுவும் அவனை தொடர்ந்த மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலை தன் வேலையை காட்ட ஆரம்பித்தது. தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன.


அந்த நாளே பங்குனி உத்திரம் : 


இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க்களத்திற்கு வந்தார். வந்தவரின் வலிமை அறியாத தாரகாசுரன், சிறுவன் என முருகனை கிண்டல் செய்தான். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார்.


தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான், தன் வேலாயுதத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனை கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும்.


​திருமண வரம் தரும் பங்குனி உத்திரம் :


பங்குனி உத்திர தினத்தில் தான் மீனாட்சி - சுந்தரேஸ்வரருக்கு மதுரையில் திருமணம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அதே போல் முருகன்-தெய்வானை, ராமர் - சீதை, ஸ்ரீரங்கநாதர் - ஆண்டாள் உள்ளிட்ட தெய்வ திருமணங்கள் பலவும் நடைபெற்ற நாளாக பங்குனி உத்திரம் சொல்லப்படுகிறது. அதனாலேயே பங்குனி உத்திரத்தன்று கடைபிடிக்கப்படும் விரதத்திற்கு கல்யாண விரதம், கல்யாண சுந்தர விரதம், திருமண விரதம் என அழைப்பதுண்டு. இந்த நாளில் திருமணமாகாத இளைஞர்களும், கன்னிப் பெண்களும் முருகன் மற்றும் சிவ பெருமானை திருமணக் கோலத்தில் கண்டு தரிசித்தால் அவர்களுக்கு நிச்சயம் திருமண பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.


கிடைக்கும் பலன்கள்


கல்யாண வரமளிக்கும் இந்த நாளில்தான் திருமகள் விரதமிருந்து திருமாலின் திருமார்பில் இடம்பிடித்தாள். அதைப்போலவே கலைமகளும் பிரம்மாவின் நாவில் இந்த நாளில்தான் அமர்ந்தாள். பார்க்கவ மஹரிஷியின் மகளாக மகாலட்சுமி, பார்கவி என்ற பெயரில் பூமியில் பிறந்த நாளும் பங்குனி உத்திர நாளில்தான். எனவே, இந்த நாள் லட்சுமி கடாட்சமாக விளங்குகிறது. உத்திர நட்சத்திரத்தில் கூடியிருக்கும் சந்திரபகவான் இந்த நாளில் களையுடன், கன்னி ராசியிலிருந்து களங்கமின்றி காட்சி தருவான். அப்போது சந்திரனை வணங்கினால் குடும்ப வாழ்வு சிறப்படையும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வள்ளிப்பிராட்டி அவதரித்ததும், தர்ம சாஸ்தாவான ஸ்ரீஐயப்பன் உதித்ததும் இந்த நன்னாளில்தான்.


பங்குனி உத்திர நாளில், 'கல்யாணசுந்தர விரதம்' இருந்து வழிபட்டால், திருமணம் தடைப்படுபவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமைவதுடன், இல்லற வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமையும். பங்குனி உத்திரத்தன்று ஆலயங்களில் வழிபாடு செய்து, புதுத்தாலியைப் பெருக்கிக் கட்டிக்கொள்வது சுமங்கலிகளின் வழக்கம். சிவபெருமான் அம்பாளைக் கரம்பிடித்த நன்னாளில், பசுவாகிய தங்கள் ஆன்மா, பதியாகிய சிவனை அடைய வேண்டும் என்பதற்காக சிவனடியார்கள், 'கல்யாணசுந்தர விரதம்' அனுஷ்டிப்பார்கள். இந்த நாளில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திரத் திருநாளில் விரதமிருந்து வழிபட்டால், அடுத்த பிறவியில் தெய்வநிலையை அடைவார்கள் என்பதும் ஐதீகம்.


எண்ணற்ற பல மங்களகரமான, தெய்விக நிகழ்வுகள் நடைபெற்ற பங்குனி உத்திரத் திருநாளில் நாமும் இறைவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம். பங்குனி உத்திர நாளில் நீர் மோர் வழங்குதல், விரதமிருத்தல், தெய்வத் திருமணங்களை தரிசிப்பது, அன்னதானம் செய்வது போன்றவை பெரும் புண்ணியத்தைத் தரும்.

No comments:

Post a Comment