மூட்டு வலியைக் குணப்படுத்தும் சொடக்குத் தக்காளியின் மருத்துவப் பயன்கள்!
"தக்காளியை எல்லோருக்கும் தெரியும். மணத்தக்காளி பற்றியும் தெரியும். சொடக்குத் தக்காளி என்று ஒரு தக்காளி உண்டு. நடுவில் பழமும் சுற்றிலும் பை போன்ற குமிழும் இருக்கும் இந்தத் தக்காளியைப் பறித்து நெற்றி, தலைப்பகுதியில் அடிப்பார்கள். அப்போது `சொடக்கு' போடுவதுபோல் சத்தம் வரும். அதனால் இதை `சொடக்குத் தக்காளி' என்கிறார்கள்.
கிராமப்புறங்களில் மிகச் சாதாரணமாக வளரும் இந்தச் செடியில் பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கும். காய்கள் முற்றிப் பழமாகும்போது அந்த உறை பழுப்பு நிறத்துக்கு மாறிவிடும். காய் பழமானதும் உறையுடன் சேர்ந்து உதிர்ந்துவிடும்.
இதில் பலவகைகள் உள்ளன. சாதாரண பச்சை நிறத்தில் காணப்படும் சொடக்குத் தக்காளியே நம் பகுதியில் பரவலாகக் காணப்படுகிறது. மஞ்சள், ஆரஞ்சு நிறங்களிலும் காணப்படுகிறது. பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத இந்தப் பழத்துக்கு நிறைய மருத்துவக் குணங்கள் உண்டு.
கட்டிகளைக் கரைக்கும். வலி நிவாரணியாகவும் செயல்படும். நுரையீரல் நோய்களையும் குணப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். இதன் இலை மற்றும் காய்களை நசுக்கிப்போட்டு மஞ்சள் தூள், நீர் விட்டு நன்றாகக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். இதை அவ்வப்போது குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மூட்டுவலி உள்ளவர்கள் அவ்வப்போது இந்த நீரைத் தயாரித்து காலை, மாலை என அருந்தினால் வலி நீங்கும். சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இது நல்ல மருந்தாகும்.
சர்க்கரை நோயால் வரக்கூடிய புண்கள், பிற ஆறாத புண்களுக்கு இதன் இலைகள் நல்ல மருந்தாகும். சொடக்குத் தக்காளி இலைகளை அரைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி புண்களின்மீது தடவினால் விரைவில் ஆறும்.
இதன் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள், கல்லீரலில் ஏற்படும் பிரச்னைகள் குணமாகும். இரும்புச் சத்து அதிகளவு இருப்பதால் அனிமீயா, சோர்வு நீங்கும். கீல்வாதம் ஏற்படும்போது இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் அதிலுள்ள வைட்டமின் பி 3 சத்து போதுமான அளவு ரத்தத்தைப் பாயச் செய்து, வலியைக் குறைத்துவிடும்.
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அல்சைமர், டிமென்ஷியா போன்ற அறிவாற்றல் சார்ந்த மூளை பாதிப்பு நோய்கள் ஏற்படாமலிருக்க உதவும். இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிப்பதுடன் மூளைச் செறிவுத்திறன் மேம்படும். பெக்டின் எனப்படும் கரையும் நார்ச்சத்து இருப்பதால், நாம் உண்ணும் உணவை செரிமானமடையச் செய்வதுடன் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
No comments:
Post a Comment