இடதுகை பழக்கம் நல்லதா....? கெட்டதா?
பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடதுகை பழக்கம் இருப்பதை எண்ணி கவலைப்படுகிறார்கள். அதை தவறானது என கருதி குழந்தைகளின் இடதுகை பழக்கத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்வார்கள். குழந்தைகளை வலுக்கட்டாயமாக இடதுகை பழக்கத்தில் இருந்து வலதுகை பழக்கத்துக்கு மாற்ற முயற்சிப்பது நல்லது அல்ல. இதன் மூலம் குழந்தைகளின் நினைவாற்றல், உணர்ச்சி சமநிலை மற்றும் நடத்தை சார்ந்த விஷயங்கள் பாதிக்கப்பட நேரிடும். இதை பற்றிய மேலும் சில தகவல்கள் இதோ...
உலக அளவில் 85 சதவீதம் பேர் வலதுகை பழக்கம் கொண்டவர்களாகவும், 15 சதவீதம் பேர் இடதுகை பழக்கம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.
இடதுகை பழக்கம் என்பது ஒரு சாதாரண மாறுபாடாகும். இடதுகை பழக்கம் உள்ள குழந்தைகளை திருத்தி வலதுகை பழக்கத்துக்கு மாற்றும்போது கைகளை பயன்படுத்தி செய்யும் செயல்களில் அவர்களின் திறன் குறையும். குழந்தைகள் எந்த கையை அதிகமாக பயன்படுத்துகிறார்களோ, அதே கையால் குறிப்பிட்ட வேலைகளை செய்யும்போது விரைவாகவும். திறமையாகவும் செய்து முடிப்பார்கள்.
இடதுகை பழக்கம் உள்ளவர்கள் ஆக்கப்பூர்வமான வழிகளில் சிந்திக்கவும், தங்களுடைய சூழ்நிலைகளை மாற்றியமைக்கவும் விரைவாக கற்றுக்கொள்கிறார்கள். படைப்பாற்றல், புத்திக்கூர்மை ஆகியவை இடதுகை பழக்கம் கொண்டவர்களிடையே இருக்கும் பொதுவான பண்புகளாகும்.
பெரும்பாலான இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு கற்றல் குறைபாடுகள் ஏற்படுவது இல்லை. மரபியல் மூலமாகவே இடதுகை பழக்கம் உண்டாகிறது. இது ஒருவரின் வாழ்நாள் முழுவதும் தொடரக் கூடியதாகும். இதை அடிப்படையாகக் கொண்டே மூளையின் வளர்ச்சி வேறுபாடு அடைகிறது.
வலது பக்க மூளையானது இடதுபக்க உடல் இயக்கத்தையும், இடதுபக்க மூளையானது வலதுபக்க உடல் இயக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதன் அடிப்படையில் இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு அல்சர், மூட்டு வலி மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம் அல்லது விரைவாக குணமடையலாம்.
எழுதுவதைத் தவிர மற்ற வேலைகளுக்கு நாம் எந்த கையை அதிகமாக பயன்படுத்துகிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டே நம்முடைய பழக்கம் முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் மற்ற வேலைகளை இரண்டு கைகளையும் சரிசமமாக பயன்படுத்தி செய்கிறீர்கள் எனில் நீங்கள் கலப்பு கை பழக்கம் உள்ளவர்களாக இருக்கலாம்.
கட்டாயப்படுத்தி குழந்தைகளின் இடதுகை பழக்கத்தை மாற்றும்போது சமநிலையற்ற உணர்ச்சிகள், மோசமான கையெழுத்து, படுக்கையில் சிறுநீர் கழித்தல், நகங்களைக் கடித்தல், கூச்சம், எதிர்மறையான நடத்தைகள், வாசிப்பதில் சிரமம், கற்றல் திறன் குறைபாடு, சுயக்கட்டுப்பாடு மற்றும் நினை வாற்றல் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம்.
அதுமட்டுமல்லாமல் நரம்பியல் கோளாறுகள், மூளையின் அசாதாரண செயல்பாட்டுக்கும் வழி வகுக்கலாம். ஆகையால், சிறுவயதில் குழந்தைகளின் இடதுகை பழக்கத்தை திருத்தி வலதுகை பழக்கத்துக்கு மாற்றுவதைவிட இரண்டு கைகளிலும் சமமாக அனைத்து வேலைகளையும் செய்யும்படி பழக்கலாம். கலப்பு கை பயன்பாட்டை ஊக்குவிக்கலாம். இது அவர்களின் ஆரோக்கியத்துக்கும். எதிர் காலத்துக்கும் நல்லது.
No comments:
Post a Comment