உணவுப்பழக்கம் மூலம் நீரிழிவு நோய் வராமல் தடுப்பது எப்படி?
நீரிழிவுக்கு முந்தைய நிலையினை உணவுப் பழக்கத்தின் மூலம் நிச்சயம் இதைக் கட்டுப்படுத்த முடியும்.
நீரிழிவாளர்களுக்கு ஹெச்பிஏ1 சி (HbA1c) என ஒரு டெஸ்ட் செய்வோம். மூன்றுமாத ரத்தச் சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்வதற்கான டெஸ்ட் அது.
ஹெச்பிஏ1 சி டெஸ்ட்டில் ரத்தச் சர்க்கரை அளவானது 6.5 அல்லது அதற்கும் சற்று அதிகமாக இருந்தால் அதை `ப்ரீடயாபட்டிஸ்' (Prediabetes) என்று சொல்வோம். இது, நீரிழிவுக்கு முந்தைய நிலையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அதாவது, உங்களுக்கு மிகவிரைவில் நீரிழிவு பாதிக்கலாம் என்பதற்கான அலர்ட் சிக்னல் இது.
நீங்கள் 40 ப்ளஸ் வயதில் இருந்தாலோ, உடல் பருமன் உள்ளவராக இருந்தாலோ, குடும்ப பின்னணியில் நீரிழிவு பாதிப்பு உள்ளவராக இருந்தாலோ, அவ்வப்போது உங்கள் ரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக, ஹெச்பிஏ1 சி டெஸ்ட் செய்து பார்க்க வேண்டியது மிக முக்கியம்.
ஒருவேளை உங்களுக்கு ப்ரீடயாபட்டிஸ் நிலை என்று டெஸ்ட்டில் தெரியவந்தால், உணவுக் கட்டுப்பாடு மற்றும் வாழ்வியல் மாற்றங்களின் மூலமே அதைக் கட்டுப்படுத்தவும், நீரிழிவாக மாறாமல் தடுக்கவும் முடியும்.
உணவுக்கட்டுப்பாடு என்றால் பட்டினி இருப்பது என அர்த்தமில்லை. நம்முடைய உணவுப் பழக்கத்தில் காலை இட்லி, தோசை, பொங்கல், பூரி, மதியம் சாப்பாடு, இரவு மீண்டும் இட்லி, தோசை, சப்பாத்தி என மாவுப்பொருள் நிறைந்த உணவுகள் சாப்பிடுவது இருக்கிறது.
எனவே, மாவுச்சத்து நிறைந்த உணவுகளைக் குறைவாக எடுத்துக்கொண்டு, நார்ச்சத்தும், புரதச்சத்தும் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலம் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக, ப்ரீ டயாபட்டிஸ் நிலையில் இருப்பவர்களுக்கு இத்தகைய உணவுப்பழக்கம் பெரிதும் உதவும்.
அந்த வகையில் நிறைய காய்கறிகள், அதிக இனிப்பில்லாத பழங்கள் மற்றும் பயறு வகைகள், சுண்டல் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வது அவசியமாகிறது. கூடவே, தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்வது, வேறு ஏதேனும் உடற்பயிற்சிகள் செய்வதையும் வழக்கமாக்கிக்கொள்வது நல்லது.
No comments:
Post a Comment