வாழைப்பழம் தினமும் சாப்பிடலாமா?எந்த நேரம் சாப்பிடலாம்? - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, February 29, 2024

வாழைப்பழம் தினமும் சாப்பிடலாமா?எந்த நேரம் சாப்பிடலாம்?

 வாழைப்பழம் தினமும் சாப்பிடலாமா?எந்த நேரம் சாப்பிடலாம்?


ஒருநாளைக்கு 400 கிராம் காய்கறி மற்றும் பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். அதில் காய்கறிகள் 200-லிருந்து 250 கிராம் வரை எடுத்துக்கொள்ளலாம். பழங்கள் 150-லிருந்து 200 கிராம் வரை எடுக்கலாம். இந்த அளவில் தினமும் உணவில் பழங்கள், காய்கறிகளைச் சேர்க்கும்போது தொற்றா நோய்கள் வராமல் பாதுகாக்க உதவும்.


150-200 கிராம் எனும்போது சராசரியாக ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். வாழைப்பழத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. 40 கிராம் முதல் 200 கிராம் வரை எடையில் பழங்கள் கிடைக்கின்றன. சாப்பிடுவது சிறிய பழங்களாக இருந்தால் இரண்டு, மூன்று வரைகூட எடுக்கலாம்.


பெரிய அளவில், எடை அதிகமாக இருக்கும் நேந்திரம், செவ்வாழைப்பழம் என்றால் பாதி அளவு எடுத்துக்கொள்ளலாம். இது ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மனிதருக்கான (Healthy Adult) அளவு. உடலில் வேறு பிரச்னை இருப்பவர்கள் மருத்துவர்கள், உணவியல் நிபுணர்கள் பரிந்துரையின்படி அளவை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.


என்னென்ன சத்துகள்...


வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துகள், நுண்ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. 100 கிராம் வாழைப்பழத்தில் 330 மில்லிகிராம் பொட்டாசியம் இருக்கும். மக்னீசியம் 40 மில்லிகிராம் அளவு காணப்படும். இதனால் இதய நோயாளிகளுக்கு வாழைப்பழம் நல்லது. இதுதவிர, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, புரதம், நார்ச்சத்து உள்ளிட்டவை காணப்படும். கொழுப்புச்சத்து மிகக் குறைவாக காணப்படும்.


எந்த நேரம் சாப்பிடலாம்?


காலை, மதியம், இரவு உணவுகளை பொதுவாக போதுமான அளவில் எடுத்துக்கொள்வோம். அதனால் மிட்மார்னிங், மிட் ஈவ்னிங் சமயத்தில் ஸ்நாக்ஸ் போல வாழைப்பழம் சாப்பிடலாம். அந்த நேரத்தில்தான் எதையாவது சாப்பிட வேண்டும் என்ற 'ஃபுட் கிரேவிங்' (food craving) இருக்கும். அந்த நேரத்தில் ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடுவதற்குப் பதில் வாழைப்பழம் சாப்பிடலாம்.


சிலருக்கு இரவு வாழைப்பழம் சாப்பிட்டால்தான் அடுத்த நாள் காலை மலம் கழிக்க முடியும் என்பார்கள். அப்படிப் பழகியவர்கள் உறங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக சாப்பிடலாம்.


குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது...


திட உணவுகளை ஆரம்பிக்கும்போதே குழந்தைகளுக்கு வாழைப்பழத்தைக் கொடுக்க ஆரம்பிக்கலாம். எளிதாக ஜீரணம் ஆகும் என்பதால் நன்றாக மசித்துக் கொடுக்கலாம். ஆரம்பத்தில் அரை டீஸ்பூன் அளவு கொடுக்க ஆரம்பித்து, சிறிது சிறிதாக அளவை அதிகரிக்கலாம். இரண்டு வயது வரும்போது 100 கிராம் அளவுள்ள முழு வாழைப்பழத்தை சாப்பிடக் கொடுக்கலாம்.


சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?


சர்க்கரை நோயாளிகள் தினமும் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது. அதற்கு பதில் கலோரி குறைவாக இருக்கும் பிற பழங்களைச் சாப்பிடலாம். பத்து நாளைக்கு ஒருமுறை என குறிப்பிட்ட இடைவெளியில் 75 கிராம் வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகமாக பழுத்த வாழைப்பழத்தை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.


யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?


சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட சில கல்லீரல் பிரச்னை உள்ளவர்கள், ரத்தத்தில் பொட்டாசியம் அளவு அதிகமாக இருப்பவர்கள் உள்ளிட்டவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளிப் பிடிக்கும், வீஸிங் பிரச்னை அதிகமாகும் என்ற தவறான எண்ணம் உள்ளது. அப்படி எந்தப் பிரச்னையும் ஏற்படாது.

No comments:

Post a Comment