கண்மை பயன்படுத்துவது அழகா.. ஆரோக்கியமா.. ஆபத்தா!
உலகத்தில் முதன் முதலாகப் பெண்களால் பயன்படுத்தப்பட்ட, முதல் அழகுப்பொருள் கண் மைதான். தங்கள் அழகிய கண்களை மேலும் அழகாக்க பெண்கள் ஆதி காலத்திலிருந்து இன்று வரை பயன்படுத்தி வரும் முக்கிய அழகு சாதனம் கண் மை ஆகும். இதனால்தான் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய கண்மை, இன்று வரை அதே முக்கியத்துவத்துடன் இருந்து வருகிறது.
கண்மை அழகு பொருளாக மட்டும் இல்லாமல், ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் பொருளாகவும் விளங்குகிறது.
கண்மை போடுவது வெளிப்புறத்தில் கண்களை அழகாக காட்டுவதோடு, கண்களுக்கு ஈரப்பதத்தை அளித்து புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும், கண்ணின் தசைகளை பலப்படுத்தவும் கண்களில் தூசி விழுவதைத் தடுக்கவும் பயன்படுகிறது. ஆனால், இவையனைத்தும் இயற்கைப் பொருட்களால் தயாரிக் கப்பட்ட கண் மையின் பலன்கள் ஆகும்.
பழங்காலத்தில் கற்பூரம், காய்கறி எண்ணெய், விளக்கெண்ணெய், கரிசலாங்கண்ணி இலை போன்ற இயற்கைப் பொருட்களை கொண்டு கண் மை தயாரிக்கப்பட்டது. அதனால் கண்களுக்கு ஆரோக்கியத்தை வழங்கியது. ஆனால், தற்போது கண்களை அழகுப்படுத்த சந்தைகளில் விற்கப்படும் காஜல், ஐ- லைனர், மஸ்காரா, ஐ ஷேடோ கிரீம் – பவுடர் போன்றவற்றில் பல்வேறு ரசாயனப் பொருட்கள் கலக்கப்படுவதால் அவை தீங்கு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடுகின்றன. மேலும், கண் பார்வையை மங்க செய்யவும், பார்வை இழப்பு பாதிப்பையும் ஏற்படுத்தவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
எனவே, கண் மைகளை தினசரி பயன்படுத்துவோர், வெளியில் செல்லும்போது பயன்படுத்திவிட்டு, வீட்டிற்கு திரும்பியதும் கண்டிப்பாக அதனை துடைத்து விட வேண்டும். உதாரணமாக, தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கொண்டு கண் மையை முற்றிலும் எடுத்துவிட வேண்டும். மேக்-அப் ரிமூவர் திரவங்களையும் பயன்படுத்தலாம். குறைந்தது தூங்குவதற்கு முன்பு கண் மையை அகற்றிவிட்டுதான் தூங்கச் செல்ல வேண்டும். அது ஓரளவு கண்களை பாதுகாக்க உதவும். காஜல் அல்லது கண் மையை அகற்றாமல் இருந்தாலும், கருவளையம் வரலாம்.
கண்கள் மிகவும் சென்சிடிவ் பகுதி என்பதால் தரமில்லாத விலை குறைந்த பொருள்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதுபோன்று கண் மை வாங்கும்போது, சமீபத்தில் தயாரிக்கப்பட்டதா என்பதை பார்த்து உறுதிசெய்து பின்னர் வாங்கி பயன்படுத்த வேண்டும். அதுபோல ஒருவர் பயன்படுத்தியதை மற்றவர் பயன்படுத்தக் கூடாது. இதனால், தொற்றுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
ஒருநாள் முழுவதும் அழியாமல் இருக்கும் இருக்கக் கூடிய கண்மைகளை பயன்படுத்துவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் ரசாயனம் அதிகம் கலந்திருக்க வாய்ப்புள்ளது. அல்லது தேவைப்படும்போது மட்டும் கண் மையை பயன்படுத்துவது நல்லது. வீட்டிலிருக்கும்போது முடிந்தளவு கண் மை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
கண்களுக்கு எரிச்சல் தரக்கூடிய கண் சார்ந்த எந்த அழகுசாதன பொருளையும் தவிர்த்துவிடுவது நல்லது. மேலும், முடிந்தளவு கண்ணுக்கு வெளியே மட்டும் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தலாம். அந்தவகையில், ரசாயனம் கலந்த கண் மைகளைத் தவிர்த்துவிட்டு, முடிந்தளவு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கண் மைகளை பயன்படுத்துவதே
சிறந்தது.
தற்போது, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட காஜல், ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட காஜல் வகைகளும் கடைகளில் கிடைக்கிறது. அவற்றை தேடி பார்த்து வாங்கி பயன்படுத்தலாம். ஏனெனில், ஆயுர்வேதிக் காஜல் காஸ்டார் எண்ணெய், நெய், காப்பர் பாத்திரம், கற்பூரம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பாதாம் பருப்புகளும் காஜல் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, ஆயுர்வேதிக் காஜல் கண்களை பாதுகாக்க பயன்படுகின்றன.
ஆன்டி பாக்டீரியா:
கண்மை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் காப்பர் எனும் தாமிரம், ஒரு தலைசிறந்த சுத்தப்படுத்தி மற்றும் இதற்கு அதிக குணப்படுத்தும் தன்மை உண்டு. காப்பர் பொருள் கண்களை மேக்கப்பில் கலந்திருக்கும் வேதிப்பொருட்கள் தாக்காமல் தடுத்து காக்கிறது. கண்ணின் லென்ஸ்களை, கண் தசைகளை பலப்படுத்தி, ஓய்வாக இருக்க உதவுகிறது. பார்க்கும் திறனை அதிகப்படுத்துவதில், காப்பர் பெரும்பங்கு வகிக்கிறது.
கண்மை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய் கண்ணைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. இது கண்ணீரால் கண்ணில் தங்கும் உப்பு மூலக்கூறுகள், மேக்கப்பால் கண்ணின் மேல் மற்றும் கீழ் இமைகளை அடையும் சிறு துகள்கள், தூசிகள் போன்றவற்றை நீக்கி, கண்ணை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இது கண்ணில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க பெரிதும் உதவுகிறது. எனவே முடிந்தவரை, நம் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட கண்மையை பயன்படுத்துங்கள்.
No comments:
Post a Comment