ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா?உணர வேண்டிய ஆபத்து!
தேநீர் கடை, மளிகை, காய்கறி கடை என எங்குச் சென்றாலும் அங்கிருக்கும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பணப்பரிமாற்றம் செய்துவிடுவது எளிதுதான். இதில் தவறொன்றுமில்லை.
ஆனால்.. தவறு என்னவென்றால், இந்த சின்னச் சின்ன பணப்பரிமாற்றங்களுக்கு ஒருவர் தனது முதன்மையான வங்கிக் கணக்கைப் பயன்படுத்துவதுதான் தவறு என்கிறார்கள் சைபர் குற்றங்கள் தடுப்பு நிபுணர்கள்.
ஒரே ஒரு வங்கிக் கணக்கை வைத்து அதிலிருந்தே அனைத்துக்கும் பணம் செலுத்துவது, ஒருவருக்கு எளிதாக இருக்கலாம். ஆனால், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது வங்கிக் கணக்குக்கு நாமே ஆபத்தை தேடிக்கொள்கிறோம் என்பதை உணர வேண்டும்.
அதாவது, அன்றாடப் பயன்பாடுகளுக்கு, செலவிட என்று தனியாக ஒரு வங்கிக் கணக்கைத்தொடங்கி அதில், சிறிய தொகையைப் போட்டு அதன் மூலம் இந்த டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்வது உகந்தது.
ஏன்? ஒரே வங்கிக் கணக்கில் மாதச் சம்பளமும் வரும், அனைத்துத் தேவைகளுக்கும் அதிலிருந்தே செலவிடுவீர்கள். இதனால், சில மோசடி நபர்களிடம் உங்கள் வங்கிக் கணக்கு விவரம் சிக்கும் ஆபத்து நேரிடும். ஆனால், இதுவே ஒரு சிறிய தொகையிருக்கும் வங்கிக் கணக்கிலிருந்து பணப்பரிமாற்றம் நடக்கிறது என்றால், உங்கள் முதன்மை கணக்கு பாதுகாக்கப்படும்.
ஒரே கணக்கிலிருந்து செலவிடுவதைக் காட்டிலும் சிறிய தொகையை மற்றொரு கணக்குக்கு மாற்றி அதிலிருந்து ஒரு மாதம் முழுக்க பணத்தை செலவிடும் போது, உங்களால் எளிதாக மாதச் செலவையும் நிர்வகிக்க முடியும்.
பொதுவாக அனைவரிடமும் ஒரே வங்கிக் கணக்கு இருக்கும். பலரும் இரண்டாவது வங்கிக் கணக்கைத் தொடங்குவதில்லை அவசியமேற்படாதவரை.
ஆனால், இனி டிஜிட்டல் உலகமாக மாறியதால், நமது முதன்மை வங்கிக் கணக்கை பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் குறைந்த கட்டாய வைப்புத் தொகை இருக்கும் ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கி அதை அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படுத்துங்கள்.
இதன் மூலம், தேவையற்ற நபர்களிடம் உங்கள் முதன்மை வங்கிக் கணக்கு விவரங்கள் சென்று சேருவது தவிர்க்கப்படும். மற்றொன்று, அன்றாடச் செலவுகளுக்குப் பயன்படுத்தும் வங்கிக் கணக்கை மோசடியாளர்கள் கையாண்டாலும் பெரிய தொகை பறிபோகாமல் தடுக்கப்படும்.
அவ்வளவு பெரிய தொகையெல்லாம் இல்லை.. மாதச் செலவுக்கான சிறிய தொகைதான். இதற்கெல்லாம் இவ்வளவு கவலைப்பட வேண்டாம். இதற்காக வங்கிக்குச் சென்று கணக்குத் தொடங்கி அதில் ஒரு சிறிய தொகையை பராமரிப்பதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று நினைத்தால், வங்கி மோசடிகள் குறித்து வரும் முன்னெச்சரிக்கை செய்திகளை படித்து எச்சரிக்கையாக இருந்துகொள்வது நலம்.
No comments:
Post a Comment