ஜாக்டோ - ஜியோ போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது ஏன்? கூட்டமைப்பின் தலைமை நிர்வாகிகள் விளக்கம்
பெரும்பான்மையான சங்கங்களின் கருத்துகள் அடிப்படையில் போராட்டத்தை தள்ளிவைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பின் தலைமை நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைதல் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது
அந்த வகையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ-ஜியோ தெரிவித்தது. ஆனால், கூட்டமைப்பின் தலைமை நிர்வாகிகளை முதல்வர்மு.க.ஸ்டாலின் அழைத்துப் பேசியபின்பு போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே ஜாக்டோ-ஜியோவில் உள்ள சங்கத்தின் ஆசிரியை ஒருவர் பேசிய ஆடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவுகிறது. அதில், ‘‘எப்பவும் இதே வேலையாப் போச்சு, வாபஸ், தள்ளிவைப்பு, இதையேதான் திரும்பத் திரும்ப சொல்லிட்டிருக்கீங்க. முதலமைச்சரைப் பார்க்கிறதுதான் ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கை எனக் கூறியிருந்தால் உங்களைப் பின்தொடர்ந்திருக்க மாட்டோம்
ஓய்வூதியம், சரண்டர் வாங்கித் தரோம்னு
போராட்டத்துக்கு அழைக்கிறீங்க, அதை நம்பி நாங்களும் விடுப்பு எடுக்கிறோம். ஆனால், அதை ரத்து செய்துவிடுகிறீர்கள். இனி உங்களை நம்பமாட்டோம். நீங்களும் எங்களை அழைக்க வேண்டாம். கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் ஒவ்வொரு முறையும் முதல்வர் அழைத்து பேசியதும் போராட்டத்தை வாபஸ் பெறுவது ஏன்? எங்கள் குடும்பத்தினர்கூட எங்களை ஏளனம் செய்யும் நிலையே உள்ளது’’ என அவர் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.
137 சங்கங்கள்: இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ச.மயில் (பொதுச்செயலாளர், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி) கூறும்போது, ‘‘தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் சற்று நிதானத்துடன் அவற்றைக் கையாள வேண்டும். இது ஒரு தனிப்பட்ட அமைப்பின் அறிவிப்பல்ல. ஜாக்டோ-ஜியோவில் 137 சங்கங்கள் உள்ளன. அதில் பெரும்பான்மை அடிப்படையில்தான் முடிவெடுக்கப்படும். அதன்படியே தள்ளிவைப்பு முடிவும் எடுக்கப்பட்டது.
அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பதில்அனைவருக்கும் வருத்தமுள்ளது. அதேநேரம் ஆட்சியின் தலைமைபொறுப்பில் இருக்கும் முதல்வர்அழைத்துப் பேசும்போது அதையேற்று தற்காலிகமாகவே போராட்டத்தை தள்ளிவைத்துள்ளோம். நிதிநிலை அறிவிப்புக்கு பின்பு ஏதும் நடவடிக்கை இல்லையெனில் மீண்டும் கூடி அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிப்போம்’’ என்றார்.
ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மு.அன்பரசு (மாநிலத் தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்) கூறும்போது, ‘‘ஜாக்டோ- ஜியோ உதயமான காலத்தில் இருந்து இதேபோல் பல ஆசிரியர்கள், ஊழியர்கள் கோபமடைந்து பேசியுள்ளனர். இத்தனை முறை சந்தித்தும் முதல்வர் எதுவும் செய்யவில்லை என அறிந்தும், அவரை நம்புகிறார்களே என்பது இயல்பான கோபம். இது திட்டமிட்டுச் செய்வதல்ல. அந்த உணர்வுக்கு மதிப்பளித்து உரிமைகளை மீட்பதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவோம். ஜாக்டோஜியோ அமைப்பில் 90-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கங்களும், 35-க்கும் மேலான ஆசிரியர் சங்கங்களும் உயர்மட்டக் குழுவில் பங்கு வகிக்கின்றன. அனைவருக்கும் ஒரேவிதமான கருத்துகள் இருக்காது’’ என்றார்
முதல்வர்அழைத்துப் பேசும்போது அதையேற்று தற்காலிகமாகவே போராட்டத்தை தள்ளிவைத்து உள்ளோம்
No comments:
Post a Comment