இன்று (பிப்.29) முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு
ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி அடுத்தகட்டமாக இன்று (பிப்.29) முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனமான ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஊதிய முரண்பாட்டைக் களைந்து, சம வேலைக்குச் சம ஊதியம் தரக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னையில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதிமுதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று முன்தினம் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்க மறுத்து போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து எஸ்எஸ்டிஏ இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் வெளியிட்ட அறிக்கையில், “ஆசிரியர்களின் மீது பாசம்கொண்ட எங்கள் துறை அமைச்சருக்கு 10 நாட்களாகப் போராடி வரும் எங்களை அழைத்துக்கூட பேச மனமில்லை. ஆனால், போலீஸாரைக் கொண்டு எங்களைக் கைது செய்கின்றனர்.
இது எங்களுக்கு வேதனையை அளிக்கிறது. தமிழக முதல்வர் கொடுத்த இடைநிலை ஆசிரியர்களின் சமநிலைக்கு சம ஊதியம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று (பிப். 29) முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள இருக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment